இது உங்கள் இடம்!
இப்படியும் சில பெண்கள்!லண்டனில், ஐ.டி., துறையில் பணி புரிகிறான், என் நண்பன். அவனுக்கு வரன் தேடிய போது, பிரபல திருமண தகவல் மையம் ஒன்றின் வலைதளத்தில், ஐதராபாத்தை சேர்ந்த, தமிழ் பெண்ணை பற்றிய தகவல் கிடைத்தது.தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, 'எனக்கு தந்தை இல்லை; நானும், என் தாய் மட்டும் தான். பொறியியல் படித்து, பிரபல நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறேன்...' என்று கூறியுள்ளாள், அப்பெண்.இருவருக்கும் பிடித்து விட்டதால், தொலைபேசியிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர். ஆறு மாதங்கள் சென்ற நிலையில், நண்பனிடம், அப்பெண், 'லண்டனில் மேற்படிப்பிற்காக விண்ணப் பித்திருந்தேன்; இப்போது, அங்கே, 'அட்மிஷன்' கிடைத்துள்ளது. ஆனால், கல்லூரியில் சேரவும், லண்டன் வரவும், 20 லட்சம் ரூபாய் தேவைப்படுது. எங்களுக்கு சொந்தமான நிலத்தை விற்பனை செய்கிறோம்; அதில், 40 லட்சம் ரூபாய் கிடைக்கும். பணம் கைக்கு வந்த உடன், திருப்பி கொடுத்து விடுகிறேன்...' என்று கூறியுள்ளாள்.மேலும், 'லண்டனுக்கு வந்து கல்லூரியில் சேர்ந்தவுடன், திருமணம் செய்து கொள்வோம்...' என்றதை அடுத்து, 20 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளான், நண்பன். அதன்பின், அப்பெண், கொஞ்சம் கொஞ்சமாக பேசுவதை குறைத்து, ஒரு கட்டத்தில், நண்பனை முழுவதுமாகவே தவிர்க்க ஆரம்பித்தாள். சுதாரித்து, திருமண தகவல் மையத்தில் விசாரித்த போது, அந்த மையத்திலிருந்து, அவள் விலகியிருந்தது தெரிந்தது. ஏமாந்து போன நண்பன், தற்போது, போலீசில் புகார் கொடுத்துள்ளான்.திருமணத்திற்கு வரன் தேடுவோர், இனி, தீவிரமாக விசாரிப்பதோடு, சிரமம் பார்க்காமல் நேரிலும் சென்று, உண்மை நிலையை அறிவது நல்லது.—ஜி.கார்த்திகேயன், சென்னை.எங்கும், எதிலும் முன்னெச்சரிக்கை தேவை!சமீபத்தில், என் நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தேன். லாட்ஜில், 'ரூம்' போடச் சென்ற போது, 'ரூம் பதிவு செய்வதற்கு முன், அறையை பார்த்து விட்டு போடலாம்...' என்றேன்.என் முன்னெச்சரிக்கையை கண்டு சிரித்தபடியே, சாவி, கொடுத்து அனுப்பினார், ஓட்டல் மேனேஜர். பின், நாங்கள் சென்று பார்த்து வந்து, 'எல்லாம் சரியாக இருக்கிறது; இப்போது, 'புக்' செய்யுங்கள்...' என்றேன்.என் நடவடிக்கை, நண்பர்களுக்கு கவுரவ குறைவாக தோன்ற, 'நாம தங்கப் போறது ரொம்ப சாதாரண ஓட்டல்; இதுக்கு இந்த, 'பில்டப்' தேவையா...' என்றனர்.'இது, 'பில்டப்' இல்ல; முன்னெச்சரிக்கை. இதுக்கு முன், திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக, வெளியூரில் உள்ள ஒரு ஓட்டலில் குடும்பத்துடன் தங்கிய பாத்ரூமில் கழிவு நீர் வந்ததுடன் குழாய் உடைந்து, தண்ணீர் கொட்டியது. அக்குழாயை, நாங்கள் தான் உடைத்ததாக பழி சுமத்தி, புது குழாய்க்கான தொகையையும் வசூலித்து விட்டனர்.'அன்றிலிருந்து எங்கு சென்றாலும், உடனே அறையை, 'புக்' செய்யாமல், அறையில் எல்லாம் சரியா இருக்கிறதான்னு சரி பார்த்த பின், தங்குவதை கடைப்பிடித்து வர்றேன்...' என்றேன்.வாசகர்களே... இதை நீங்களும் பின்பற்றி, தேவையற்ற மன உளைச்சலை தவிர்த்திடுங்கள்!— எஸ்.பிர்தவ்ஸ் ராஜா, கீழக்கரை.திருப்தியான பிறந்தநாள்!தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு, முதியோர் இல்லத்திற்கு, ஒருநாள் உணவை நாமே தயாரித்து கொடுக்கலாம் என்று முடிவெடுத்து, எவ்வளவு பேர் இருக்கின்றனர் என்று பார்த்து வர, முதியோர் இல்லம் சென்றோம். உடன் வந்த தோழி, 'உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க; அதையே, நாங்க சமைத்து எடுத்து வர்றோம்...' என்றாள்.அதற்கு ஒரு பெரியவர், 'நாங்க ௌல்லாம் நல்லா சாப்பிட்டவங்கம்மா... பசங்களால பாத்துக்க முடியாம, இங்க கொண்டு வந்து விட்டுட்டாங்க. நிறைய பேர் சாப்பாடு தர்றாங்க; ஆனா, என்ன வேணும்ன்னு யாரும் கேட்டதில்ல. நாங்க அசைவம் சாப்பிட்டு, ரொம்ப நாளாச்சு; உங்களுக்கு வசதிப்பட்டா, அதை சமைத்து தர முடியுமா?' என்று, தயங்கியபடியே கேட்டார்.'அவ்ளோதானே கண்டிப்பா கொண்டு வர்றோம்...' என சொல்லி, அதேபோல, அடுத்தநாள் சமைத்து, எடுத்துப் போனோம்.சந்தோஷமாக, ஆசையாக சாப்பிட்டு, மனதார வாழ்த்தினர்; எங்களுக்கும் திருப்தியாக இருந்தது.நண்பர்களே... உதவி செய்ய முடிவெடுத்தால், என்ன வேணும்ன்னு கேட்டு செய்யலாமே!— உமா செந்தில், கோவை.உயிரை காப்பாற்றிய பொது அறிவு!என் நண்பர் புத்தகப் பிரியர். மாதத்திற்கு, இரண்டு புத்தகமாவது படித்து விடுவார். 'எதற்காக இப்படி நேரத்தை வீணாக்குகிறாய்; படிக்கும் நேரத்தில், ஏதாவது வேலை செய்தால், பணமாவது கிடைக்கும்...' என்று, அவரை திட்டுவர், உறவினர்.சமீபத்தில், தன் உறவினர் சிலருடன், மூணாறுக்கு சுற்றுலா சென்றுள்ளார், நண்பர். அங்கு, எதிர்பாராமல் அவர்களில் இருவர், காட்டு யானையிடம் சிக்க, அதை, தூரத்திலிருந்து கவனித்த நண்பர், அவர்களிடம் சத்தமாக, 'யானையிடமிருந்து தப்பிக்க நேராக ஓடாம, குறுக்கும், நெடுக்குமா, வேகமாக ஓடுங்க; யானையால குறுக்கும், நெடுக்குமா, வேகமாக ஓட முடியாது... அதனால, ஈசியா தப்பிச்சுடலாம்...' என்று சொல்ல, அதன்படியே செய்து, யானையிடமிருந்து உயிர் தப்பினர்.'இந்த யோசனை உனக்கு எப்படி வந்தது...' என்று எல்லாரும் அவரிடம் கேட்க, 'புத்தகத்தில் படித்தது...' என்று கூறியுள்ளார். ஊருக்கு திரும்பும் போது, ஆளுக்கு, 500 ரூபாய்க்கு அவருக்கு புத்தகங்கள் வாங்கி தந்துள்ளனர்.புத்தகம் படிப்பதால், அறிவு வளர்வதுடன், நாம் படித்த விஷயங்கள், இதுமாதிரி ஆபத்து சமயங்களில் உதவும் என்பதை, அனைவரும் உணர்ந்து, படிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்!— என்.சக்திவேல், ஸ்ரீவில்லிபுத்தூர்.கிளீனர் பையனின் புத்திசாலித்தனம்!சமீபத்தில், சென்னையிலிருந்து, கோவைக்கு தனியார் பேருந்தில், இரவு நேரத்தில் பயணமானேன். நள்ளிரவில், ஏதோ ஒரு ஊரில், இயற்கை உபாதையை கழிப்பதற்காக, பேருந்து நிறுத்தப்பட்டது.அரைத்தூக்கத்தோடு இறங்கினோம். அப்போது, அப்பேருந்தின் கிளீனர் பையன், எங்களிடம் ஆளுக்கு ஒரு சிறு அட்டையை தந்து, திரும்பி வரும் போது, கொடுக்கச் சொன்னான். அது எதற்கென்று புரியாமலேயே அவசரம் காரணமாக, அதை வாங்கி சென்றோம்.திரும்பும் போது தான் தெரிந்தது... அந்த இடத்தில், இருபதிற்கும் அதிகமாக, ஒரே மாதிரியான தனியார் பேருந்துகள் நின்றிருந்தன. இதில், நாங்கள் வந்த பேருந்து எது என்ற குழப்பம் வர, அப்போது தான் அந்த கிளீனர் பையன் தந்த அட்டையை கவனித்தோம்; அதில், பேருந்தின் பதிவு எண்ணும், எங்களின் இருக்கை எண்ணும் எழுதப்பட்டிருந்தது. எவ்வித சிரமமும் இன்றி, எங்கள் வண்டியை அடைந்தோம். கிளீனர் பையனின் புத்திசாலித்தனத்தை மெச்சினோம்.ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயணிப்பவர்கள், நள்ளிரவில் தடுமாறாமல் இருக்க, இதை, ஒவ்வொரு தனியார் பேருந்தும் பின்பற்றலாமே!— சசி பிரபு, சென்னை.