இது உங்கள் இடம்!
அரசியல்வாதிகளே உஷார்!இந்த ஆண்டு, எங்கள் கிராமத்தில், இளைஞர்கள் சார்பாக, சுதந்திர தினவிழா கொண்டாட முடிவு செய்தோம். அதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்ட போது, அப்பகுதியில் உள்ள ஒரு அரசியல் பிரபலத்தை வைத்து, தேசியக் கொடியை ஏற்றலாம் என, ஆலோசனை கூறினர், சிலர். அதை, பெரும்பாலான இளைஞர்கள் எதிர்த்து, 'அரசியல்வாதின்னாலே அயோக்கியர்கள் என்றாகி விட்டது. அதிலும், நீங்க குறிப்பிடும் நபர், கிடைத்த துண்டு, துக்கடா பதவியை வைத்தே கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளவர். இதுபோன்ற அரசியல்வாதிகளை வைத்து, கொடியேற்றக்கூடாது...' என்று ஆட்சேபித்தனர். கடைசியில், அக்கிராமத்திலேயே வயதில் மூத்த முதியவர் ஒருவரை வைத்து, கொடி ஏற்றுவது என, முடிவு செய்து, அதன்படியே ஏற்றி, சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினோம். இதிலிருந்து, அரசியல்வாதிகள் மீது இன்றைய இளைஞர்களுக்கு எந்த அளவுக்கு வெறுப்பும், அவநம்பிக்கையும், மரியாதை யின்மையும் விஸ்வரூபமெடுத்துள்ளது என்பதை, புரிந்து கொள்ள முடிந்தது. அரசியல்வாதிகளே... இந்த உண்மையை புரிந்து, உஷாராகி, உங்களை திருத்திக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால், மக்கள் மனதில் குமுறும் நெருப்பு, ஜூவாலையாக மாறி, உங்களை பொசுக்கி விடும்!— ஆர்.ரவி குலரகுவர்மன், தஞ்சாவூர்.சபாஷ்... விழிப்புணர்வு நிகழ்ச்சி!என் மகள் படிக்கும் பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. விழாவில், கலை நிகழ்ச்சிகளுக்கு இடையில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அறிவுரைகளை வழங்கினர், மாணவ மாணவியர். உதாரணமாக, 'வாட்ஸ் - அப்' அடையாளத்தை உணர்த்தும் அட்டையை அணிந்து, அதனால், ஏற்படும் நன்மை, தீமைகளை எடுத்துக் கூறினான், ஒரு மாணவன். அதேபோன்று, 'பேஸ் - புக்' மற்றும் இணையதளங்கள் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.கறுப்பு நிற உடை அணிந்து, பறந்து வருவது போல் பாவனை செய்து, 'நான் தான் காற்று...' என்று கூறி, மனிதர்கள் ஏற்படுத்தும் காற்று மாசு பற்றியும், அதன் விளைவுகளையும் எடுத்துக் கூறினாள், ஒரு மாணவி.மற்றொரு மாணவனோ, தீயணைப்பு வீரர் போல் வேடமிட்டு, 'தீ விபத்தின் போது நம்மைச் சுற்றி புகை சூழ்ந்தால், உடனே தரையில் தவழ்ந்து செல்ல வேண்டும். காரணம், தரையிலிருந்து சில மீட்டர் தூரம் புகையின் தீவிரம் இருக்காது; அதனால், நமக்கு மூச்சு முட்டாது; தப்பித்து விடலாம்...' என்று கூறினான். சமூக அக்கறையுடன் கூடிய இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதில் மற்ற பள்ளிகளும் அக்கறை காட்டலாமே!— தி.உத்தண்டராமன், விருதுநகர்.மனைவியை கொடுமைப்படுத்தினால்...எங்கள் பக்கத்து வீட்டில், கணவனை இழந்த, 60 வயது பெண்மணி இருக்கிறார். தன் இரு மகள்களையும் கட்டிக் கொடுத்து விட்டவர், கோவில், குளம் என்று, ஊர் ஊராக சென்று வருவார். ஆனாலும், தன் கணவர் நினைவு நாளில், திதி கொடுக்க மாட்டார்; அமாவாசைக்கு கூட கும்பிட்டு, காக்கைக்கு சாதம் வைக்க மாட்டார். அவர் வீட்டில், அனைவருடைய புகைப்படமும் இருக்கும்; அவர் கணவர் படம் மட்டும் இருக்காது. 'ஏன் இப்படி?' என்று கேட்டதற்கு, 'ஆமாம்... அந்த ஆளுக்கு, எள்ளுந் தண்ணியும், அமாவாசை சோறும் தான் கேடு; ஆவியா அலையட்டுமே...' என்றார்.'என்ன தான் கெட்டவராக இருந்தாலும், செத்துப் போனவருக்கு, செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்களை செய்வது தானே முறை...' என்று, ஒருமுறை, அவர் மகளிடம் குறைபட்ட போது, 'அப்பா நடந்துகிட்ட விதம் அப்படி... சந்தேக பிசாசு; அம்மா கடைக்கு போய் வந்தா கூட, 'எவன் கிட்ட பேசிட்டு வர்றே...' என்பார். வீட்டில் அமைதியாக இருந்தால், 'எவனை நினைச்சுக் கிட்டிருக்கே'ன்னு திட்டி, அடிப்பார். எதிர்த்து கேட்க முடியாது. ஒவ்வொரு நாளும் நரகம் தான். அந்த கோபம், ரணம், வெறுப்பு தான், இப்போ, இம்மாதிரி வெளிப்படுது. அவருக்கு திதி கொடுக்க, நாங்களும் அம்மாவை வற்புறுத்துவதில்லை...' என்றார்.வாழும் காலத்தில், ஒருவர், மனைவியை சரியாக நடத்தா விட்டால், அவர் இருக்கும் காலத்தில் மட்டுமல்ல, இறந்த பின்பும், மனைவியின் புறக்கணிப்புக்கு, இப்படித்தான் ஆளாக நேரிடும்!கணவன்மார்களே... மனைவியை மதித்து, அன்போடு நடத்துங்கள்!— எஸ்.கற்பகம், சென்னை.புது விதமான சேகரிப்பு!என் தோழியின் தந்தைக்கு வினோதமான ஒரு பழக்கம் இருக்கிறது. அது, கோவில், ஓட்டல், திருமண மண்டபம், கடைத்தெரு என்று எங்கு சென்றாலும், அங்கு சந்திப்பவர்களிடம், 'விசிட்டிங் கார்டு' வாங்கிக் கொள்வார். இதை, நாங்கள் பல முறை கிண்டல் செய்துள்ளோம். ஆனாலும், அவர் மாறவில்லை.சமீபத்தில், ஆயுள் காப்பீடு தொடர்பான ஒருவரை தொடர்பு கொள்ள, அவரது தொலைபேசி எண் தெரியாமல் தவித்த போது, அங்கு வந்த தோழியின் தந்தை, நாங்கள் தேடுபவரின் அலுவலக இருப்பிடத்தை கேட்டார். பின், தன் கைப்பையை திறந்து, சில நிமிடங்களில் சம்பந்தப்பட்டவரின், 'விசிட்டிங்' கார்டை எடுத்துக் கொடுத்ததும், அசந்து விட்டோம்.அதிலும், ஒரு சிக்கல் வந்தது. அவர், கொடுத்த, 'விசிட்டிங்' கார்டில் உள்ள பெயரும், நாங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவரின் பெயரும் ஒன்றாக இருந்தாலும், 'இன்ஷியல்' மாறியிருந்தது. அதனால், குழம்பிய போது, மீண்டும் தேடி, இன்னொரு கார்டை கொடுத்தார். அதில், அவர் புகைப்படத்துடன் இருந்தார். குழப்பமே இல்லாமல், அவரை தொடர்பு கொண்டோம்.அன்றிலிருந்து, தோழியின் தந்தையின் பழக்கத்தை கிண்டல் செய்வதை விட்டு, 'விசிட்டிங்' கார்டுகளை சேகரிக்க துவங்கி விட்டோம்.— நர்மதா விஜயன், உளுந்தூர்பேட்டை.