உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

பென்ஷன் டியூட்டி! எங்கள் தெருவில், ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் இருக்கிறார். சமீபத்தில், வழியில் எதிர்பட்டவரிடம், 'என்ன சார், ஊர் சுத்த கிளம்பியாச்சா...' என்று வேடிக்கையாக கேட்டேன். 'ஆமா தம்பி, கவர்மென்ட், 30 ஆயிரம் ரூபாய் பென்ஷன் தருது; வீட்ல சும்மா இருக்க முடியுமா... வாங்குற பென்ஷனுக்கு, 'டியூட்டி' பாக்க வேண்டாமா; அதான் கிளம்பிட்டேன்...' என்றார். 'இன்னிக்கு, டியூட்டி எங்கே...' என்றேன். 'தாலுகா ஆபீசுக்கு போறேன்; அங்கே மனு எழுத வர்றவங்களுக்கு மனு எழுதி கொடுத்து, உதவி செய்ய போறேன்...' என்றார்.இதேபோல, தினமும் வங்கி, போஸ்ட் ஆபீஸ் மற்றும் முனிசிபாலிடி ஆபீஸ் என, பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு சென்று, மனு எழுதி கொடுக்கிறார். பொது மக்களுக்கு உதவும் இவரது செயல், பென்ஷன்தாரர்களுக்கு முன் மாதிரியாக உள்ளது.பொழுது போகாத பென்ஷன்தாரர்கள் இவர் வழியை பின்பற்றலாமே!— கே.அருணாசலம், தென்காசி.லட்சிய புருஷன்! அண்மையில் திருமண நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு என் உறவினர் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, நீண்டகால சிகிச்சைக்கு பின், உயிர் பிழைத்த தன் மனைவியையும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தார். கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை காரணமாக தலைமுடி கொட்டி, மெலிந்து, உருவமே மாறிப் போயிருந்தாள், அப்பெண்.'இவளை வீட்டில் விட்டுட்டு, நீ மட்டும் வந்திருக்க வேண்டியது தானே...' என, உறவினர்கள் சிலர், அவரிடம் சொன்னபோது, 'நோயின் தாக்கத்திலிருந்து இவ, மீண்டு விட்டாலும், மனசளவில் பலவீனமாக இருக்கிறாள். இதுபோன்று உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம், சொந்தங்களை பார்த்து, அவங்க கிட்ட மனம் விட்டு பேசுறதாலயும், அடிக்கடி கோவில், பார்க், சினிமான்னு செல்றதாலயும், மன மாற்றம் ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிடுவான்னு நம்புறேன். அதனால் தான், இப்படி உறவினர்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழைச்சுட்டு வர்றேன்; நான் நினைச்சது போலவே படிப்படியாக நல்ல மாற்றம் ஏற்பட்டு வருகிறது...' என்றார்.அந்த பெண்ணும், தன் உடல் பாதிப்பு, சிகிச்சை எல்லாம் மறந்து, அனைவரிடமும் மனம் விட்டுப் பேசி, கலகலப்பாக இருந்ததை பார்த்த போது, மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்படியொரு கணவன் கிடைக்க, அந்த பெண் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று அவளது காதுபடவே பேசினர், உறவினர்கள். இம்மாதிரியான நேரங்களில், மனைவியை புறக்கணிக்காமல், அன்பாக நடத்துவதும், பரிவுடன் கவனிப்பதும், அவள் மனநிலை அறிந்து நடந்து கொள்வதும் தானே நல்ல கணவனுக்கு அழகு. அனைவரது கண்ணுக்கும் லட்சிய புருஷனாக காட்சியளித்த அவரை, அனைவரும் வெகுவாக பாராட்டினர்!— டி.சரண்யா, ஸ்ரீவில்லிபுத்துார்.ஐஸ் பிரியாணி சாப்பிடுங்கள்! பிரியாணி கேள்விப்பட்டுள்ளோம்.. அது என்ன ஐஸ் பிரியாணி என்று கேட்கிறீர்களா... பழைய சோறு தான், ஐஸ் பிரியாணி!முதலில், இதில் உள்ள நன்மைகளை பார்ப்போம்...பழைய சாதத்தில் தான் வைட்டமின், பி6 மற்றும் வைட்டமின், பி 12 உள்ளது. இது, உடல் சூட்டை தணித்து, மலச்சிக்கலை போக்கும். குடல் புண், வயிற்று வலியை குணமாக்கும். அது மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்...பழைய சாதத்தில், மீன் குழம்பு ஊற்றி சாப்பிட்டால் சூப்பர் காம்பினேஷன். பழைய சாதத்தில் சின்ன வெங்காயம் வைத்து சாப்பிட்டால், அதன் ருசியே தனி!எங்கள் வீட்டில், வாரத்தில் இரண்டு நாட்கள், காலையில், பழைய சாதம் தான் சாப்பிடுவோம். பழைய சாதத்தில் உள்ள பயன்களை தெரிந்து, இனி வாரத்தில் ஒரு வேளையாவது பழைய சாதம் சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்திருப்போம்..அ. கவுசியாபானு, நெய்வேலி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !