இது உங்கள் இடம்!
தூங்கும் போது...நெருங்கிய உறவினர் ஒருவர், தன் இரு மகள்களுடன் என் வீட்டில் தங்கினார். இரண்டு நாட்கள் என்பதால், வீட்டிலிருந்து தங்குவதற்கு தேவையான ஆடைகளைக் கொண்டு வந்திருந்தார். இரவு படுக்கும் முன், இரு குழந்தைகளும் நைட்டி அணிந்து வந்தனர். உடனே, பெரிய பெண்ணை, சுடிதார் பேன்ட்டும், சிறிய பெண்ணை டைட்சும் அணிந்து வரச் சொன்னார் அவர்களது தாய். வெளியிடங்களில் சென்று தங்க நேர்ந்தால், அசந்து தூங்கும் போது, நைட்டி சற்று விலகினாலோ, ஏறினாலோ மற்றவரைச் சலனப்படுத்தாமல் இருக்கவும், பாதுகாப்பாக படுக்க வேண்டும் என்று, குழந்தைகளுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவும், நைட்டிக்குள் பேன்ட் போடும் பழக்கத்தை பழக்கியிருப்பதாகக் கூறினார். பொது இடங்களில், பலருடன் தூங்க நேர்ந்தால், நைட்டிக்குள் சுடிதார் பாட்டம் அணிவதே சிறந்தது.— ஜி.மாலதி, கல்லல்.என்று தணியும் இந்த மேற்கத்திய மோகம்?நம் நாட்டில், மேற்கத்திய நாகரிகம் உச்சத்தில் இருப்பது, எந்த விஷயத்தில் என்று நினைக்கிறீர்? உடை, பீட்சா, பர்கர் போன்ற உணவு வகைகள், எப்போதும் நுனி நாக்கு ஆங்கிலம். இது எல்லாவற்றையும் விட, கழிப்பறை விஷயத்தில் தான், மேற்கத்திய தாக்கம் மிக மிகத் தூக்கலாக உள்ளது. சமீபத்தில், சென்னை நகரத்தின் மத்தியில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்குச் சென்றிருந்த போது, பெண்களுக்கான கழிப்பறையின் கதவுக்கு வெளியே, 'உள்ளே கால் கழுவக் கூடாது; ஈரமாக்கக் கூடாது!' என்று விதிமுறைகளை அறிவித்தபடி, ஒரு பெண் காவலுக்கு அமர்ந்திருந்தார். 'கால் கழுவாமல் எப்படிம்மா இங்கேயிருந்து வெளியே போவது?' என்று, உள்ளே வந்த ஒரு கிராமத்துப் பெண்மணி மிகவும் வருத்தப்பட்டார். நான் அவருக்காக மருத்துவமனையின் எல்லா இடங்களிலும், இந்திய முறை கழிப்பறையைத் தேடி, அப்படி ஒன்று அந்த வளாகத்தில் இல்லவே இல்லையென்று அறிந்து, அதிர்ச்சியடைந்தேன். மருத்துவமனைகளில் மட்டும் அல்ல, சென்னையில் எல்லா பொது இடங்களிலும் மேற்கத்திய கழிப்பறை மட்டும்தான் இருக்கிறது என்று அறிய வந்த போதோ மிகமிக வருந்தினேன். என்னுடைய கேள்வி இதுதான்: மேற்கத்திய நாகரிகம் பிடித்தவர்களுக்கு, அந்த கழிப்பறை வசதி செய்து தருவது நல்ல பண்பாடுதான். ஆனால், அந்த முறை பிடிக்காத இந்தியர்களுக்கு, அவர்களுடைய பாரம்பரிய கழிப்பறை ஒன்று, எல்லா இடங்களிலும் கட்டாயமாக்கப்படாது ஏன் என்பது தெரியவில்லை. இதற்காக சட்டம் ஏதாவது இயற்ற வேண்டுமா?— ரேவதி பாலு, சென்னை.அரசு குடியிருப்பு வீடு வாங்க போகிறீர்களா?சமீபத்தில், குடும்ப நண்பர் ஒருவரை சந்தித்தேன். அவர் சொன்ன விஷயம், என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர், 10 ஆண்டுகளுக்கு முன், குடிசை மாற்று குடியிருப்பில், அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த சமயத்தில், முதல் தவணையாக, 15 சதவீத பணத்தை கட்டி, 'புக்' செய்துள்ளார். பின், ஆறு மாதத்தில், மீதி தவணை கட்டி, வங்கி கடனை முடித்து விட்டார். அப்போது பொறுப்பில் இருந்தவர்களும், ஒப்புதல் அளித்து விட்டனர். ஆனால், கிரையப் பத்திரத்தை பிறகு வாங்கி கொள்ளலாம் என, நண்பர் விட்டு விட்டார். இப்போது சென்று கிரையப் பத்திரம் கேட்டால், அன்று அவர் கட்டிய மொத்தத் தொகையையே, மீண்டும் கட்ட சொல்கின்றனர். 'ஏன்...' என்று கேட்டால், அன்று மீதி தொகை கட்ட, ஆறு மாத இடைவெளி விட்டதற்கான வட்டித் தொகையை, இந்த பத்து ஆண்டுகளுக்கும் சேர்த்து வட்டி போட்டு, வீட்டு விலையையே கட்ட சொல்கின்றனர். நண்பரால் ஒன்றும் செய்ய முடியாமல், புலம்பிக் கொண்டிருக்கிறார். எனவே, அரசு இடம் தானே என, அலட்சியமாய் இருக்காதீர்கள். அரசு குடியிருப்பு வாங்கியவர்கள், கடன் கட்டிய உடன், 'கிரையப் பத்திரம்' வாங்குவது தான், இதுபோன்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.— கவிதா வீராசுவாமி, சென்னை.