இது உங்கள் இடம்!
சரியா, தவறா?கிராமத்து உறவினரின் மகனுக்கு, திருமணம் செய்ய, பெண் பார்த்து பேசி முடித்தனர். பெண், சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். திருமணத்திற்கான பேச்சு முடிந்து, நிச்சயதார்த்தம் செய்ய, நாள் குறிக்கப்பட்டது. சென்னையில் வசிக்கும் நெருங்கிய உறவினர்களுக்கு, நிச்சயதார்த்ததிற்கு நேரில் அழைப்பு விடுத்து, அங்கு பணிபுரியும் வருங்கால மருமகளுக்கு, எடுக்க வேண்டிய உடை குறித்து அவரிடமே நேரில் கேட்டு விருப்பம் அறிந்து வரலாம் என்று சென்னைக்கு பயணமானார், உறவினர்.உடை வாங்குவது குறித்து, மணப் பெண்ணிடம் விசாரித்து, ஊர் திரும்பியுள்ளார், உறவினர். உடனடியாக, தன் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மணப்பெண், 'இந்த இடம் வேண்டாம்... இந்த திருமணத்தில் எனக்கு விருப்பமில்லை...' என சொல்லி, நிச்சயதார்த்த நிகழ்வை நிறுத்தி விட்டார்.இந்த தகவல், உறவினரின் மகன் வீட்டாருக்கு தெரிய வர, குழப்பமடைந்து, 'ஏன்...' என விசாரித்தபோது, உடை விஷயமாக விசாரித்த என் உறவினர், அந்த பெண்ணிடம், 'பிரா சைஸ்' என்ன என்று கேட்டதால், வந்த வினை இது என, புரிந்தது.'மாமனாராகப் போகிறவர், மருமகளாக வரப்போகும் ஒரு பெண்ணிடம், இங்கிதமில்லாமல், 'பிரா சைஸ்' கேட்டது, நாகரிகமற்ற செயல். இப்படி நாகரிகம் தெரியாமல் நடந்துகொள்ளும் இடத்தில், வாழ்க்கைப்பட எனக்கு விருப்பமில்லை...' என, மணப்பெண் உறுதியாக சொல்லி விட்டார்.என் உறவினர், வெள்ளந்தியாக, 'பிரா சைஸ்' கேட்டது தவறா... இல்லை, அந்த பெண், அநாகரிகமாக கருதி, திருமணத்தை மறுத்தது சரியா என, புரியவில்லை. எது எப்படியோ, சின்ன விஷயங்களில் கூட எச்சரிக்கையாக இருப்பது, காலத்தின் கட்டாயம் என்பது மட்டும் புரிந்தது.- எஸ்.ராஜேந்திரன், தஞ்சாவூர்.உறவினர்களிடம் கூறலாமா?எங்கள் தெருவில் வசிக்கும் ஒரு குடும்பத்தின், மாமியாரும், மருமகளும் தங்கள் பிரச்னையை என்னிடம் கூறி, புலம்பி செல்வது வழக்கம்.'மருமகள்... அப்படி பண்றா, இப்படி பேசறா...' என்று குறை கூறுவார், மாமியார். அதேபோல், மருமகளும், மாமியார் மீது குற்றப்பத்திரிகை வாசித்து செல்வார். இருவருக்கும் ஆறுதல் கூறி, அனுப்பி வைப்பேன். சமீபத்தில், அவர்கள் வீட்டு குழந்தைக்கு மொட்டை போட்டு, காது குத்தினர். அந்நிகழ்வுக்கு, சொந்த பந்தங்கள் வந்திருந்தனர். அவர்களில் சிலர், 'மாமியார் எப்படி...' என, மருமகளிடமும், 'மருமகள் எப்படி...' என, மாமியாரிடமும் விசாரித்தனர். அவர்களிடம், 'மருமகள், தங்க மகள்...' என மாமியாரும், 'அத்தை, என் அம்மாவை விட உயர்ந்தவர்...' என, மருமகளும், மாற்றி மாற்றி பேசினர்.இதைக் கேட்ட எனக்கு தலை சுற்றியது. மறுநாள் இருவரிடமும், 'என்னிடம், ஒருவருக்கொருவர் குறை கூறி, உறவுகளிடம் நடிக்கிறீர்களே...' என, கேட்டேன்.'ஆமாம்மா... குடும்பத்துல பிரச்னை, குழப்பம், குறை கண்டு மனம் கனத்துப் போகும்... அதை, யாரிடமாவது கொட்டினால், மனசு லேசாகும்... பக்கத்தில் இருப்பதால், உன்னிடம் கூறி ஆறுதல் அடைந்தோம்... வந்த உறவுகளிடம் கூறினால், அவர்கள் ஊர் முழுதும் பரப்பி, எங்களை கேவலப்படுத்தி விடுவர். அவர்களிடம், குறைகளை கூறி, எங்களை நாங்களே தரம் தாழ்த்திக் கொள்ள வேண்டுமா என்று தான் எதையும் கூறவில்லை...' என்றனர். இது எப்படி இருக்கு!— உகுணசீலன், திருப்பூர்.தள்ளு முள்ளை தவிர்த்திட...கேரள மாநிலம், பாலக்காட்டில், உறவினரின் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். வரவேற்பறையில் நின்றிருந்த ஒருவர், விழாவிற்கு வந்தவர்களிடம் ஒரு டோக்கனை கொடுத்தார்.தாலி கட்டும் நிகழ்வு முடிந்ததும், உணவு பரிமாறும் ஹாலுக்கு முன், ஒலிபெருக்கியில், 1 முதல் 50, 50 முதல் 100, என, வரிசைப்படி டோக்கன் பெற்று, இன்முகத்துடன், உணவு உண்ண உள்ளே அனுப்பினர்.உணவு உண்ண நேரமின்றி, வேறு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியோருக்கு, மற்றொரு ஹாலில், அதே டோக்கன்படி இனிப்பும், காரமும் வழங்கி, அசத்தினர். இதுபோன்ற புதுமையான ஏற்பாட்டால், 'தள்ளு முள்ளு'வில் மாட்டிக் கொள்ளாமல் அனைவரும், வடை, பாயசத்துடன் நிம்மதியாக சாப்பிட முடிந்தது.பெருங் கூட்டமுள்ள விருந்து விழாக்களில், இதே பாணியை, நம்மவர்களும் நடைமுறைபடுத்தினால், அசவுகரியங்களை தவிர்க்கலாமே!நா.உண்ணிகிருஷ்ணன், கோவை.