உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

தினமும் மருத்துவ, 'டிப்ஸ்!'நெருங்கிய நண்பர், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். தினமும் காலை, பள்ளி வழிபாட்டில், 'நோயும், தீர்வும்' என்ற தலைப்பில், மாணவர்களை வாசிக்க செய்வார்.தமிழ் தாய் வாழ்த்து, குறள் விளக்கம், பொன்மொழிகள், அறிவுக்கு விருந்து மற்றும் செய்தி தாள் வாசிப்பு, வழக்கப்படி நடக்கும். அதன் பின், 'நோயும், தீர்வும்' என்ற தலைப்பில், ஒரு நோயின் பெயரை சொல்லி, அது, எதனால் வருகிறது, அதன் அறிகுறி, அந்நோயிலிருந்து விடுபடுவதற்கான எளிய சிகிச்சை முறையை, 'மைக்'கில் பேசி விளக்குவான், மாணவன் ஒருவன்.அனைத்து மாணவர்களும் இதை கவனிப்பதுடன், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் கேட்டு செல்வர். தினசரி மருத்துவ குறிப்புகள் வழங்குவதால், மாணவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் பயன் பெறும் வகையில் மாற்றிய, ஆசிரிய நண்பரின் புது முயற்சியை வெகுவாக பாராட்டினேன்.அனைத்து ஆசிரிய பெருமக்களும், தங்கள் பள்ளிகளில் இதை அமல்படுத்தலாமே!— கா.முத்துசாமி, தொண்டி.நம்ம ஊரு போலாகுமா?மேலை நாடுகளின் கலாசாரத்தையே உயர்வான நாகரிகமாக கருதி, மக்கள் உடை, சிகை அலங்காரம், கல்வி, உணவு வரை பின்பற்றுகின்றனர்.மேலும், காலையில் ஓட்ஸ் முதல் இரவு பீட்சா வரை சாப்பிட்டவர்கள், வியாதிகள் பெருகிய பின், பீதியாகி, எந்த ஊரு போனாலும், நம் ஊரு போலாகுமா என்பது போல், அலோபதியை வெறுத்து, பாட்டி கால வாழ்க்கை முறையான, சித்த மருத்துவம் மீது மோகம் கொண்டுள்ளனர்.செக்கு எண்ணெய்க்கு திடீர் மவுசு, ஓட்டல்களில், 'விறகு அடுப்பில் தான் சமைக்கிறோம்' என்று விளம்பரம் செய்கின்றனர். வீதிக்கு வீதி ஆர்கானிக், சிறு தானிய கடைகள் மற்றும் உப்பு, கரி மற்றும் வேம்பு சேர்த்த பற்பசை...இந்த மாற்றம் மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால், உள்ளூர் காய்கறி, செக்கு எண்ணெய், தானியங்களை, ஆர்கானிக் என்ற பெயரில், தனியார் வணிக நிறுவனங்கள், அதிக விலை வைத்து கொள்ளையடிக்கின்றன.இந்த கொள்ளையை தடுக்க, கிராமங்களில் செக்கு எண்ணெய் தொழிலை ஊக்குவிக்கலாம்; மலைவாழ் மக்களின், சிறு தானியங்களை, அரசே கொள்முதல் செய்து, ரேஷனில் கொடுக்கலாம்.இதனால் நம் மக்களும் பொருளாதார வளர்ச்சி பெறுவர். அரசு ஆவண செய்யுமா- மல்லிகா அன்பழகன், சென்னைஇது, வித்தியாசம்...உறவினர் இல்ல கிரகப்பிரவேசத்திற்கு சென்றிருந்தோம்; வழக்கம்போல விழா முடிந்த பின், வந்திருந்தோர், காலை உணவுக்கு பின், அவரவர் வாங்கி வந்திருந்த, பரிசு பொருட்களையும், மொய் கவர்களையும் கொடுத்து, கிளம்ப தயாராயினர்.வீடு கிரகப்பிரவேசம் நடத்தியவர்கள், வந்திருந்த விருந்தினர்களுக்கு, கண்ணை கவரும் விதத்தில், அழகிய சிறு பெட்டி ஒன்றை, 'ரிட்டன் கிப்ட்' ஆக வழங்கினர்.உள்ளே என்ன இருக்கும் என்ற ஆவலில் வீடு சென்றதும் பிரித்து பார்த்தோம்; அதனுள், ஒரு விதைப் பந்தும், அச்சிட்ட சிறு குறிப்பும் இருந்தது. அதில், இது, என்ன மரத்தின் விதை என்றும், 'வீட்டில் பயிரிட இடம் இல்லாதோர், கோவில், நெடுஞ்சாலை ஓரம், வயல், ஆறு, வாய்கால் கரையோரம் மற்றும் இடைஞ்சல் இல்லாத பொது இடங்களில் எறிந்தால், மழைக் காலங்களில், இயற்கையாகவே வளரும் தன்மையுள்ளது; நாடு மழை வளம்பெற, மரம் வளர்க்க எங்களால் ஆன சிறு உதவி... என, அச்சிடப்பட்டிருந்தது. திருமணம் மற்றும் விசேஷங்களின் போது, மரக்கன்று, பூச்செடிகள் தருவதை பார்த்திருக்கிறோம்; ஆனால், இது, வித்தியாசமானதாக இருந்தது. — எம்.பாலச்சந்திரன், கன்னியாகுமரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !