இது உங்கள் இடம்!
பாரதி கண்ட புதுமைப்பெண்!சமீபத்தில், ஸ்வீட் கடைக்கு சென்றிருந்தேன். அங்கு, ஐந்து ரூபாய் முதல், 25 ரூபாய் வரை, துணி பைகள் வைத்திருந்தனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவிற்கேற்ப, 'பில்' போடும்போது, அதன் விலையையும் சேர்த்து போட்டனர். 'ஸ்வீட் வாங்கும் எங்களிடம், பைக்கும் சேர்த்து எதுக்கு பணம் வாங்குகிறீர்கள்...' என்று ஒரு இளம்பெண், கேட்டார்.'ஏம்மா, 1,000 ரூபாய்க்கு ஸ்வீட் வாங்குகிறீர்கள். 10 ரூபாய்க்கு பை வாங்க முடியாதா... அதையும் நாங்கள் கொடுத்தால், தலையில் துண்டை தான் போட்டுக்கணும்...' என்றார், கடைக்காரர்.'நீங்கள் கொடுக்கும் துணி பையின் விலை, மூன்று ரூபாய். மொத்தமாக வாங்குவதால், இரண்டு ரூபாய்க்கே கொடுப்பர். வாங்கும் ஸ்வீட்டின் தயாரிப்புக்கு தேவையான பொருளின் விலை, ஆள் கூலி, கடை வாடகை, பேக் செய்து கொடுக்கும் அட்டை பெட்டியின் விலை, எடை போடுபவரின் சம்பளம், 'ஏசி' கடை வாடகை எல்லாம் கழித்தால், நான் வாங்கும், 1,000 ரூபாய் ஸ்வீட்டுக்கு, உங்களுக்கு, 400 ரூபாய் லாபம் வரும்.'இதில், இரண்டு ரூபாய் பையை, 10 ரூபாய்க்கு விற்று லாபம் பார்க்கிறீர்கள். அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்கள் எல்லாம், வீணாய் போக காரணம், உங்களை போன்ற ஆட்கள் தான்...' என்றார்.கடைக்காரருக்கு, 'ஏசி'யிலும் வியர்த்து கொட்டியது. 'பை விலையை சேர்க்காமல், ஸ்வீட் கொடுங்க... இல்லையென்றால், என் ஆர்டர் கேன்சல்...' என்ற, 'பாரதி கண்ணம்மா'வை பார்த்து, ஸ்வீட் வாங்க வந்த அனைவரும் பாராட்டினர்.சமுதாயத்தில் நடக்கும் சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம், அரசே பார்த்துக் கொள்ளும் என்று இல்லாமல், நாமும் தட்டி கேட்கலாம் என்று, நானும், அந்த சின்ன பெண்ணிடம் பாடம் கற்றுக்கொண்டேன்.கல்பனா குணசேகரன், சென்னை.மூலிகை, 'பொக்கே!'சமீபத்தில், உடல் நலமில்லாமல் இருந்த தோழியை காண, மருத்துவமனைக்கு சென்றேன். அப்போது, தோழியை பார்க்க வந்த அவரது சித்தி, ஒரு பூங்கொத்து கொடுத்தார். அது, பச்சை இலைகளை வைத்து தயாரிக்கப்பட்டு வித்தியாசமாக இருந்தது. இது குறித்து கேட்டதற்கு, அவர் கூறிய பதில், மகிழ்ச்சியாகவும், வியப்பாகவும் இருந்தது. 'வல்லாரை கீரை, எலுமிச்சை புல், மிளகு கீரை மற்றும் துளசி போன்றவற்றால் தயாரிக்கப்பட்டது, இந்த பூங்கொத்து. இதை வீட்டிற்கு எடுத்து போய், தேநீர் தயாரித்து குடிக்கலாம். பூ ஜாடியில் வைத்தால், மூலிகை காற்றை சுவாசிக்கலாம். 'பூங்கொத்து என்றால், துாக்கி எறிந்து விடுவர். இதுபோன்று தயாரிக்கப்பட்ட பூங்கொத்து கொடுத்தால், உபயோகமாக இருக்கும்...' என்றார்.பூக்களால் ஆன, பூங்கொத்து கொடுப்பவர்கள், இனி, மூலிகை பூங்கொத்து தயார் செய்து தரலாமே!— ஆர்.ஜோதிமணி, மேட்டுப்பாளையம்.உஷாரய்யா... உஷாரு!சமீபத்தில், என்னுடன் பணிபுரியும் ஊழியர் ஒருவர், திடீரென மயங்கி விழுந்தார். முகத்தில் தண்ணீர் தெளித்ததும், விழித்துக் கொண்டார். உடனிருந்தோர், 'உங்களுக்கு, சர்க்கரை நோய் இருக்கிறதா, பி.பி., இருக்கிறதா...' என்று குடைச்சல் கொடுக்க, பேந்த பேந்த விழித்தவர், 'தெரியலையே...' என்றார்.'உடனே, செக்-அப் பண்ணுங்க... சர்க்கரை நோய் முற்றினால், கண் பார்வை போகும். பி.பி., எகிறினால், பக்கவாதம் வரும்...' என்று பயமுறுத்த, மேலும், கதிகலங்கி போனார். மருத்துவமனைக்கு அழைத்து சென்று, பரிசோதித்ததில், பி.பி.,யோ, சர்க்கரை நோயோ இல்லையென்று தெரிந்ததும், நிம்மதி பெருமூச்சு விட்டார்.காலையில் சாப்பிடாமல் வந்த பசி மயக்கத்திற்கு, அவர் செலவழித்த தொகை, 10 ஆயிரம் ரூபாய். 'வாட்ஸ் - ஆப், யூ - டியூப்' பார்க்கும் பழக்கமுள்ள பலரும், டாக்டராகி, இலவச ஆலோசனைகளை வாரி வழங்கும், 'மருத்துவ பயங்கரவாதம்' சமீப காலமாக அதிகரித்து வருகிறது.நாற்பது வயதை கடந்தோர், ஆண்டுக்கு ஒருமுறை, குடும்ப மருத்துவரை கலந்தாலோசித்து, முழு உடல் பரிசோதனை செய்து, உடல் நலன் பேணுவதே ஆரோக்கியம்.கண்டவர்களின் கருத்துக்களை கேட்பது, பேராபத்து.- மல்லிகா அன்பழகன், சென்னை.படிப்புக்கு இப்படி ஒரு பாதிப்பு!என் உறவினர் மகள், தன் மேற்படிப்பிற்காக, விண்ணப்பம் நிரப்பி, டி.டி.,யுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சென்னையில் உள்ள, தொலை துார கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைத்தாள்.தேர்வு தேதி நெருங்கியும், இவளுக்கு மட்டும், 'ஹால் டிக்கெட்' வரவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு போன் செய்து கேட்டதில், அவர்களோ, 'விண்ணப்பம் வரவில்லை...' என்றனர். உடனே, என் உறவின பெண்ணின் கணவர், தபால் அனுப்பிய கூரியர் நிறுவனத்திடம் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர் அனுப்பி விட்டதாக கூறியுள்ளார்.சென்னை சென்று, மீண்டும் இயக்குனரகத்தில் விசாரித்துள்ளார். அப்போதும், அதே பதிலை கூறினர். 10 ஆட்களுடன் கூரியர் நிறுவனத்திற்கு சென்று, சம்பந்தப்பட்ட நபரை அடித்து, உதைத்து விசாரித்த பின், உள்ளே வைத்திருந்த விண்ணப்பத்தை எடுத்து கொடுத்தார், ஊழியர்.பொய் ரசீது போட்டு, பணத்தை வாங்கி, பார்சலை அனுப்பாமலே இருந்துள்ளான், அந்த பாதகன். இதுபோன்று பலமுறை செய்திருந்தும், யாரும் அவனை கண்டிக்காததால், தொடர்ந்து திருட்டுகளில் ஈடுபட்டுள்ளான்.என் உறவினர் மகளோ, 'ஒரு வருடம் வீணாகி விட்டதே...' என, மிகுந்த வேதனை அடைந்து, அழுது தீர்த்தாள்.எதிர்கால வாழ்க்கையோடு விளையாடும் இவர்களை, கடுமையாக தண்டிக்க வேண்டும். விண்ணப்பத்தை அனுப்பும்போது, எச்சரிக்கையாக இருப்பது, நமக்கும் நல்லது.— ர.ஐவண்ணம், போளூர், திருவண்ணாமலை.