உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

நவீன சுயம் வரம்!சமீபத்தில், என் தங்கை மகளின் திருமண விழாவின் போது, பாட்டுக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது, தங்கையின் கணவர், பாட்டுக் கச்சேரியை சிறிது நேரம் நிறுத்தும்படி கூறி, பாடகரின், 'மைக்'கை வாங்கி, 'என் மகளின் தோழி, பி.இ., படித்து இருக்கிறாள்; வயது, 24. மிகவும் நல்ல பெண். சிறு வயது முதல், ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்தவள். எங்கள் வீட்டுப் பெண் போல, தற்போது, விடுதியில் தங்கி, வேலை செய்கிறாள். அதே போல், என் தங்கை மகளுக்கும் மாப்பிள்ளை பார்க்கிறோம்.'ஜாதி, மதம் தடை இன்றி, நல்ல மருமகள் வேண்டும் என நினைப்போர், திருமணம் முடிக்க விரும்பினால், என்னை தொடர்பு கொள்ளலாம்...' என்றார். அந்த இடத்திலேயே, மணமகன் தேடுவோர், அவர்களின் விபரங்களை பகிர்ந்து கொண்டனர். அவர் அறிமுகப்படுத்திய இரண்டு பெண்களுக்கும், அங்கேயே நல்ல இடம் முடிவானது.அவரின் இந்த யோசனையை பாராட்டியதோடு, மற்ற திருமணங்களிலும், இதுபோல, சுயம் வரங்களை, எங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆரம்பித்து விட்டனர்.ஆயிரம் மற்றும் லட்சக்கணக்கில், 'மேட்ரிமோனியல்' நிறுவனம் மற்றும் புரோக்கர்களுக்கு செலவழிப்பதை விட, இந்த முறையை நீங்களும் பின்பற்றுங்கள் வாசகர்களே!எஸ். கே. ஓவியா, சென்னை.பயனுள்ள யோசனை!சமீபத்தில், நண்பரை காண, அவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருக்கு, பிளஸ் 1 மற்றும் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும், பணி நிமித்தமாக வெளியே கிளம்பிக் கொண்டிருந்தனர்.'காலாண்டு தேர்வு விடுமுறையில், மகன்களை, உறவினர் வீட்டுக்கு அனுப்பவில்லையா?' என, நண்பரிடம் கேட்டேன்.அதற்கு அவர், 'ஊர் இளைஞர்கள் ஒன்று கூடி, குளக்கரையில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் இணைந்து வேலை செய்ய, மூத்தவனை சில நாட்களாக அனுப்பி வருகிறேன். சின்னவனை, அருகில் உள்ள அச்சகத்தில், புத்தகம், 'பைண்டிங்' செய்வதை கற்றுக் கொள்ள அனுப்பி வைக்கிறேன். 'காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 வரை, வேலை முடித்து வருவர். அதன்பின், உணவு, ஓய்வு, அடுத்து விளையாட்டு, பாடப் படிப்பு மற்றும் நுாலக புத்தகம் வாசிப்பு என, விடுமுறையை கழித்துக் கொண்டிருக்கின்றனர்...' என்றார், நண்பர்.நண்பரின் அணுகுமுறையைப் பாராட்டினேன்.'டிவி' மற்றும் 'ஸ்மார்ட் போன்' என, விடுமுறையை கழிக்காமல், பயனுள்ள வகையில், தம் பிள்ளைகள் செலவிட, புதியவற்றை கற்றிட, பெற்றோர், ஆசிரியர்கள் வழிகாட்டியாக செயல்பட வேண்டும். சோ. ராமு, திண்டுக்கல். மகிழ்வித்து, மகிழுங்கள்!கடந்த ஆண்டு, என் அண்ணன் மகளுக்கு, தலை தீபாவளி. ஒரு மாதத்திற்கு முன்பே, தீபாவளி வரிசை என்னென்ன வைக்க வேண்டும் என்று, பட்டியல் அனுப்பி விட்டனர். பட்டு வேட்டி, பட்டு சட்டை, தனியாக, 20 ஆயிரம் ரூபாய்; இது இல்லாமல், வைர மோதிரம் தனி.மாப்பிள்ளையின் அப்பா - அம்மா மற்றும் தங்கையுடன், தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பே வந்திறங்கி விட்டனர். ஒரு வாரமும் தடபுடல் விருந்து தான்.பட்டாசுகள் மட்டும், மாப்பிள்ளை வாங்கினார். அதற்கும், என் அண்ணன், 'கிரடிட் கார்டு' என்பது தனி கதை. மாலை நேரத்தில், தெருவே அல்லோகலப்பட்டது. அவ்வளவு பட்டாசுகளையும், இரண்டு மணி நேரத்தில் வெடித்து, காசை கரியாக்கினார்.அதே ஆண்டு, என் குடும்ப நண்பரின் மகனுக்கும், தலை தீபாவளி. குடும்பத்தோடு வீட்டுக்கு வந்திருந்தனர். 'லோக்கல் மாப்பிள்ளைக்கே, என் அண்ணனுக்கு முழி பிதுங்கி விட்டது. உங்க பையன், வெளிநாட்டு மாப்பிள்ளை வேறு. செம வரவு போல...' என்று சிரித்தேன்.'அட... நீ வேற, சம்பந்தி வீட்டிற்கு நாங்க, நயா பைசா செலவு வைக்கவில்லை. அவர்கள் திருப்திக்காக, காலையும் - மாலையும், பொண்ணு - மாப்பிள்ளை பெயரில் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவளிக்க சொன்னோம். பட்டாசுக்கு பதில், அங்கிருக்கும் பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி கொடுத்தான், மகன். 'மருமகள் வீட்டில், திருமணம் செய்த செலவே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் இந்த செலவு வேறயா... எங்க பெண்ணுக்கு, நாங்களும் கஷ்டப்பட்டு தான் எல்லாம் செய்தோம். அதேபோல், மற்றவர்களை கஷ்டப்படுத்தக் கூடாது என்று நானும், மனைவியும் எடுத்த முடிவு இது...' என்றார்.இதை கேட்ட, எங்கள் வீட்டு மாப்பிள்ளை குடும்பத்தார் முகத்தில் ஈயாடவில்லை. பிறகு தான் அவர்களுக்கும் உரைத்தது; அவர்கள் வீட்டிலும், ஒரு பெண் திருமணத்திற்கு இருப்பது. வாழ்க்கையில் ஒருமுறை வரும் தலை தீபாவளியை, மற்றவர்களுக்கு வலி கொடுத்து கொண்டாட வேண்டாம்; மகிழ்வித்து, மகிழுங்கள் நண்பர்களே.— எஸ். ஏ. செந்தில்குமார், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !