உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

மனைவியும் மனுஷிதானே...

அண்மையில், மார்க்கெட் சென்று வரும் வழியில், ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தாள், என் தோழி.'என் கணவர் வெளியூர் போயிருக்கார். அதனால, ஓட்டல்ல சாப்பிட வந்தேன்...' என்றவளை, விசித்திரமாக பார்த்தேன்.அதை புரிந்து கொண்டவள், 'விதவிதமாய் சமைத்து போட, ருசித்து சாப்பிடும் கணவர் மற்றும் பிள்ளைகள், 'நீ சாப்பிட்டியா...' என்று, ஒருநாள் கூட கேட்டதில்லை. 'நீயும் உட்கார்ந்து சாப்பிடு, நாங்கள் பரிமாறுகிறோம்...' என, கூறுவரா என்று, மனம் ஏங்கித் தவிக்கிறது. 'அதை வாய்விட்டு கேட்டும், அவர்கள் கண்டு கொள்வதில்லை. இந்த ஏக்கமே, மன அழுத்தத்தை தர ஆரம்பித்தது. அதை தணித்து கொள்ளவே, ஓட்டலில் சாப்பிட வந்தேன். எனக்கு பிடித்த உணவை கேட்டு, பிறர் கையால் பரிமாற செய்து, சாப்பிடுவது, தனி ஆனந்தமாக உள்ளது. 'அதனால், கணவர், ஊரில் இல்லாத நாட்களில், ஒரு வேளை மட்டும் ஓட்டலுக்கு சாப்பிட வந்து விடுவேன்...' என்று கூறி, கண்கலங்கினாள்.ஆண்டு முழுதும் அடுப்படியில் வெந்து, உணவை தயார் செய்யும் மனைவிக்கு, மாதத்தில் ஒருநாளாவது ஓய்வு கொடுத்து, அவளுக்கு பிடித்த உணவை சமைத்து பரிமாறினால், மன அழுத்தம் வெகுவாக குறையும் என்பதை கணவன்மார்கள் புரிந்துகொள்ள வேண்டும். மனைவியும் மனுஷி தானே!ஜி. சுந்தரவல்லி, சென்னை.

முட்டாள்களாக்கும் வலைதள பதிவுகள்!

'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' வந்தாலும் வந்தது, நாட்டில் ஏகப்பட்ட எழுத்தாளர்களும், கவிஞர்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். இதைக் கூட சகித்துக் கொள்ளலாம். ஐடியா கொடுக்கிறோம், ஆலோசனை சொல்கிறோம், மருத்துவ குறிப்புகள் என்ற பெயரில் வரும் சில பதிவுகள், வெறுப்பை ஏற்படுத்துவதோடு, மக்களை முட்டாள்களாகவும் ஆக்கி வருகிறது. அப்படி முட்டாளாக்கும் ஒரு வலை பதிவு தான் இது:தேங்காயை சுலபமாக உடைக்க, முதலில், தேங்காயில் உள்ள குடுமியை சுத்தமாக மழித்து விட வேண்டுமாம். நல்ல வேளை, 'ஷேவிங் கிரீம்' தடவி, 'பிளேடால்' மழிக்க சொல்லவில்லை. பிறகு, மூன்று கண்களில் ஏதாவது ஒரு கண்ணை துளையிட்டு, அதன் வழியாக இளநீரை ஒரு பாத்திரத்தில் பிடித்து கொள்ள வேண்டுமாம். அதன்பின், அந்த ஓட்டையில் கத்தியை செருகி, தேங்காயை கவனமாக பிடித்து, 'காஸ்' அடுப்பில் சூடுபடுத்த வேண்டுமாம். சிரட்டை நன்றாக சூடேறி, ஒட்டியிருக்கும் கொஞ்ச நஞ்ச நார்களும் பொசுங்கியதும் எடுத்து, சூடு தணிந்ததும், அதன் மீது லேசாக தட்ட வேண்டுமாம். சிரட்டை கொஞ்சம் கொஞ்சமாக உதிர்ந்து, கொப்பரை வடிவில் தேங்காய் கிடைக்குமாம். அதை கத்தியால் பத்தை பத்தையாக கீறி பயன்படுத்தி கொள்ளலாமாம். சுலபமாக தேங்காய் உடைக்கும் வழியாம் இது. இரண்டு தட்டு தட்டினால் உடையும் தேங்காய்க்கு, 20 நிமிட, 'ட்ரீட்மென்ட்' மற்றும் 'காஸ்' செலவு வேறு. இதைவிட முட்டாள்தனம் வேறு ஏதாவது உண்டா... இதற்கு ஒரு வீடியோ பதிவு, வெட்கக் கேடு!பா.லட்சுமி நாராயணன், சென்னை.

சட்டம் தன் கடமையை செய்தால்....

ஓரிரு மாதங்களுக்கு முன், ஒரு இறுதிச் சடங்கில், குடித்து, ஆட்டம் போட்ட இளைஞர்கள் பற்ற வைத்த பட்டாசு, சுடுகாட்டுக்கு செல்லும் தெருவில் இருந்த, சிலரது குடிசை வீடுகளை தீக்கிரையாக்கியது.வழியிலிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த காவலர்கள், சம்பந்தப்பட்டோர் மீது வழக்கு பதிந்து, இந்த செயலுக்கு காரணமான இளைஞர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.சட்டப்பிரிவு கடுமையாக இருந்ததால், ஒவ்வொரு இளைஞரின் பெற்றோரும், பல்வேறு நிபந்தனைகளுடன், ஜாமின் தொகையாக, 1.5 லட்சம் ரூபாய் வரை செலவழித்து, வெளியில் அழைத்து வந்தனர்.மது அருந்தி, சாலைகளில் பாட்டில்களை போட்டு உடைத்தும், அக்கம்பக்கத்தினருக்கு தொந்தரவு கொடுத்தும் வந்த பிள்ளைகளின் செயல்களை கண்டிக்காமல், 'இளைஞர்கள் என்றால் அப்படித்தான்...' என்று அலட்சியமாக இருந்த பெற்றோர்களுக்கு, இச்சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தியது. இனி, இதுபோன்ற சம்பவங்கள் எங்கு நடந்தாலும், அந்த இளைஞர்கள் விசாரிக்கப்படுவர் என்பதால், அவரவர் பெற்றோரே, அவர்களை வேலைக்கு சேர்த்து விட்டதுடன், இனி, ஒழுங்காக இருக்குமாறு கண்டித்தனர்.இது முடிந்து, சில நாட்களுக்கு பின், அதே பகுதியில் ஒருவர் இறந்து விட, இறுதி ஊர்வலத்தில், வேறு சில இளைஞர்கள், சட்டையை கழற்றி ஆட முற்பட்டனர். இதைக் கண்ட அவரவர் பெற்றோர், அந்த இளைஞர்களையும், சிறுவர்களையும் கண்டித்து, அமைதியாக செல்லுமாறு கூறியதை, நேரில் பார்த்தேன்.அரசியல் குறுக்கீடு இன்றி, காவல் துறை, தன் கடமையை சரியாக நிறைவேற்றினாலே, சட்டம் - ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்பதை உணர முடிந்தது.க. சரவணன், திருவாரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !