வேலையை நேசிப்போம்!
எனக்கு தெரிந்த பெண் ஒருவர், இளங்கலை கணிதம் மட்டுமே படித்து முடித்து, பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார். மிக குறைந்த சம்பளம் என்றாலும், கடினமாக உழைத்தார்.கணித பாடத்தில், பொது தேர்வுக்கான வினாக்கள் எவ்விதம் வரும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என, 'டியூஷன்' எடுக்க ஆரம்பித்தார்.இவரிடம் படித்த மாணவர்கள், தேர்வில், அதிக மதிப்பெண் பெற, இப்போது, 'டியூஷனுக்கு' இடம் கிடைக்க, படாத பாடுபட வேண்டியிருக்கிறது. இவரது சம்பளமோ, அரசு தரும் ஊதியத்தை விட அதிகம். யாரையும் எதிர் பார்க்காமல், சொந்தமாக, தன் திறமையை மட்டும் நம்பி, கற்பித்தலின் மீது அவருக்கு இருந்த ஈடுபாடு ஆச்சரியப்பட வைக்கிறது.மாணவர்களின் நிறை, குறைகளை கண்டறிந்து, அவற்றை எவ்விதம் நீக்குவது என்று ஆலோசனையும் வழங்குகிறார்.பட்டம் படித்து, அரசு வேலைக்காக அலையும் நபர்கள், இவரிடம், கட்டாயம் பாடம் கற்க வேண்டும்.—
ச. மதிப்பிரியா, மதுரை.சிறுவர்களுக்கும் ஆபத்து தான்!
சமீபத்தில், தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். வீட்டில், தோழி இல்லாததால், வெளியே காத்திருந்தேன்.அப்போது, மூன்றாவது படிக்கும் தோழியின் மகனும், மற்றொரு சிறுவனும், எதிர் வீட்டிலிருந்து வெளியே வந்தனர். தோழியின் மகனின் கையில், விலை உயர்ந்த, 'சாக்லேட்' இருந்தது. மற்றொரு சிறுவனிடம், 'சாக்லேட்' இல்லை. அந்த சிறுவனிடம், 'உனக்கு, 'சாக்லேட்' இல்லையா...' என, கேட்டேன்.'அந்த ஆன்ட்டி, அவனுக்கு மட்டும் தான், 'சாக்லேட்' கொடுப்பாங்க... என்னை கண்டாலே அவங்களுக்கு பிடிக்காது... துரத்தி விடுவாங்க... இவனை தனியே அழைத்து, 'சாக்லேட்' சாப்பிட வைத்து தான், வெளியே அனுப்புவாங்க; இன்னிக்கு, உங்களை கண்டதும், ஓடி வந்துட்டான்...' என்றான்.'உன்னை ஏன், அந்த ஆன்ட்டிக்கு பிடிக்காது...' என்றேன்.'அவன் தான், ஆன்ட்டிக்கு, அப்பப்ப உடம்பு புடிச்சு விடுவான்... அவங்க ரெண்டு பேரும், படுக்கையறைக்கு சென்று கதவை பூட்டிக்குவாங்க...' என, அப்பாவியாக சொன்னான்.அதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்து, எதிர் வீட்டு பெண்ணைப் பற்றி தோழியிடம் விசாரித்தேன்.'அவள் கணவர், வெளியூரில் பணிபுரிவதால், இங்கு தனிமையில் இருக்கிறார்...' என்றாள், தோழி.விஷயத்தை அவளிடம் கூறினேன். அதைக் கேட்டு, அதிர்ச்சியடைந்தாள், தோழி.'இதோடு நிறுத்தி விடு; இனி, பையனை அங்கு செல்ல அனுமதிக்காதே...' என, தோழியிடம் எச்சரித்து வந்தேன்.விவரம் தெரியாத சிறுவர்களுக்கு, 'சாக்லேட்' ஆசை காட்டி, தொடு இன்பம் காணும் இதுபோன்ற பெண்களை, என்னவென்று சொல்வது!நம் குழந்தைகளை, நாம் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும்!
- இலக்கியா மகேஷ், கோவை.யோசித்தால் சம்பாதிக்கலாம்!
எனக்கு பணம் எடுக்க வேண்டியிருந்தது. ஊரடங்கு அமலில் இருந்தபோது, முக கவசம் அணிந்து, வங்கிக்கு நடந்தே தான் செல்ல வேண்டியிருந்தது. வங்கியில், ஏ.டி.எம்.,ல் பணம் எடுத்துக் கொள்ள சொல்லி விட்டனர்.வங்கி வாசலில், ஏ.டி.எம்., முன், நீண்ட வரிசை. இடைவெளி விட்டு நின்றதால், பக்கத்திலிருந்த தெருக் கோடியையும் தாண்டியிருந்தது வரிசை.கடைசி ஆளாக போய் நின்றேன்; வெயில் சுட்டெரித்தது; உட்காரவும் இடமில்லை. அப்போது, தெருவில் போய் கொண்டிருந்த, 15 வயதுள்ள பையன், என் பக்கத்தில் வந்து, 'மேடம்... உங்களுக்கு பதிலா வரிசையில் நிக்கிறேன். 20 ரூபா கொடுக்கறீங்களா...' என்றான்.எனக்கும் நிற்க முடியாததால், சம்மதித்து, அவனை நிறுத்தினேன்.ஒரு மணி நேரம் கடந்தது. ஏ.டி.எம்., அருகில் வந்ததும், அவன் கையசைக்க, நான், சென்று, பணம் எடுத்துக் கொண்டேன். அவனுக்கு பேசிய, 20 ரூபாயை கொடுத்தேன். சந்தோஷமாக வாங்கிச் சென்றான்.எனக்கும் சிரமம் குறைந்தது; அவனுக்கும் சும்மா நின்றதில், காசு கிடைத்தது. பிழைக்க தெரிந்த பையன் என்று மனதுக்குள் பாராட்டிக் கொண்டேன்.யோசித்தால், நியாயமாக சம்பாதிக்க ஆயிரம் வழிகள் உண்டு என்பது புரிந்தது!—
எஸ்.என். விஜயலட்சுமி, மதுரை.