இது உங்கள் இடம்!
'லிப்ட்' கொடுக்காதீர்!'டாஸ்மாக்' சென்று, சரக்கு வாங்கி, இரு சக்கர வாகனத்தை எடுக்க முயற்சிக்கையில், ஒருவர் வந்து, 'லிப்ட்' கேட்டார். ஆள் பார்ப்பதற்கு, 'டீசன்டாக' இருந்தார்.அவர் சொன்ன இடம் தாண்டி தான், நான் போக வேண்டும் என்றாலும், 'என்னால், 'டபுள்ஸ்' ஓட்ட முடியாது...' என்றேன்.'சரக்கு அடித்திருந்தாலும், நிதானமாக, நான் ஓட்டறேன் சார்...' என்று, வண்டியை, 'ஸ்டார்ட்' செய்தார். நான், பின் சீட்டில் அமர்ந்து கொண்டேன்.சிறிது நேரத்தில், அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், இறங்கி, வண்டியை பிடித்துக் கொண்டேன்.வண்டியை விட மறுத்து, 'எதுக்கு வண்டியை பிடிக்கறீங்க. இது, என்னுடையது...' என்றார்.வந்த கோபத்தில், காச்மூச்சுன்னு கத்தினேன். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளோர் விபரம் கேட்க, கூறினேன். வந்தவர்கள், சோதனையில் இறங்கினர்.உட்காரும் சீட்டுக்கு கீழே உள்ள டப்பாவை திறந்து, லைசென்ஸ் மற்றும் இன்சூரன்ஸ் ஜெராக்ஸ் காப்பியை எடுத்து காண்பித்து, 'வண்டி, என்னுடையது தான்...' என்றேன்.'சாரி பிரதர்...' என்று, அந்த ஆள் மன்னிப்பு கேட்டான்.'டாஸ்மாக்' சென்று வரும் அன்பர்களே... பழக்கமில்லாத யாரும், முக்கியமாக, சரக்கு அடித்தவர்களுக்கு தயவுசெய்து, 'லிப்ட்' கொடுக்காதீர்கள். அப்படியே மீறி, 'லிப்ட்' கொடுத்தால், என் நிலைமை தான் உங்களுக்கும்.- எம்.எம்.முத்தையா, திருப்பூர்.கைக்கொடுக்கும் பாட்டி வைத்தியம்!எனக்கு பேரக் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. குழந்தையை பார்க்க என் தோழி வந்திருந்தார்.குழந்தைக்கு சளி பிடித்து, மூச்சு விட சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். 'மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்...' என்று கூறினேன்.'நோய் தொற்று காலத்தில் வெளியே செல்ல வேண்டாம். வீட்டில் வேப்ப எண்ணெய், பூண்டு உள்ளதா...' என்று, கேட்டார்; எடுத்து கொடுத்தேன். கேஸ் அடுப்பில் இரும்பு சட்டியை வைத்து, வேப்ப எண்ணெயை ஊற்றி, சூடு வந்ததும் பூண்டு பற்களை போட்டு சிவந்ததும் இறக்கி, ஆற வைத்தார். கைசூடு பொறுக்கும் அளவில் குழந்தையின் மார்பு, இடுப்பு பகுதிகளில் தடவினார். அடுத்த சில மணி நேரத்தில் கழிவு மூலம் சளி வெளியேறியது. குழந்தையும் சுலபமாக மூச்சு விட ஆரம்பித்து விட்டான். பாட்டி வைத்தியத்தின் மவுசே தனி. அதை மறந்து போனது தான், நம் துரதிருஷ்டம்!பா. சீதாலக்ஷ்மி, சென்னை.கல்வி தடைபடாமல் இருக்க...மொபைல் போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார், நண்பர். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களில் ஒரு சிலர், தேவையில்லை என விற்கும் பழைய, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன்களை, விலைக்கு வாங்கிக் கொள்கிறார்.இதுபற்றி நண்பரிடம் கேட்டபோது, 'கொரோனா பரவல் காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால், 'ஆன்லைன்' வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 'ஆன்லைன்' வகுப்புகளில் கலந்துகொள்ள, 'ஆண்ட்ராய்டு' மொபைல்கள் அவசியம் தேவைப்படுகின்றன. பெரும்பாலான ஏழை மாணவர்களிடம், இந்த வகையான மொபைல் போன்கள் இருப்பதில்லை; வாங்கவும் வசதி இருக்காது.'எனவே, பழைய பழுதடைந்த, 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன்களை குறைவான விலையில் வாங்கி, அவற்றை சரி செய்து, 'ஆன்லைன்' கல்வி கற்கும் வகையில், ஏழை மாணவ - மாணவியருக்கு இலவசமாகவே வழங்கி வருகிறேன்...' என்றார்.'கொரோனா' பரவல் காலத்திலும், ஏழை மாணவர்களின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, தன்னால் இயன்ற அளவு உதவி செய்து வரும் நண்பரை பாராட்டி வந்தேன்.பொருளாதார பிரச்னை காரணமாக, ஏழை மாணவர்களின் கல்வி தடைபடாமல் இருக்க, அவர்களுக்கு ஏதேனும் ஒருவிதத்தில் நாமும் உதவியாய் இருப்போம்.- மு. சம்சுதீன் புஹாரி, துாத்துக்குடி.