இது உங்கள் இடம்!
புதுவித திருடர்கள்... ஜாக்கிரதை பெண்களே!சமீபத்தில், உறவினர் மகன் திருமணத்திற்கு முதல் நாள், பெண் வீட்டார் அழைப்பின் போதே எல்லா உறவினர்களும் வந்திருந்தனர். மண்டபத்திலிருந்த அறைகளில் தங்கியவர்கள் போக, மற்ற அனைவரும் ஆங்காங்கே படுத்து உறங்கினர்.விடியற்காலையில் எழுந்த போது, மண்டபத்தில் படுத்துறங்கிய பெண்கள் பலரும், கொத்துக் கொத்தாக தங்களின் தலைமுடி கத்தரிக்கப்பட்டிருப்பது கண்டு, சோகத்தில் ஆழ்ந்தனர்.மண்டப உரிமையாளரிடம் விஷயத்தைக் கூறி, 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டோம். அடையாளம் தெரியாத சில வெளி நபர்கள், குரங்கு குல்லாவும் முகக்கவசமும் அணிந்து வந்து, உறக்கத்திலிருந்த பெண்களின் தலைமுடியை கத்தரித்து எடுத்துப் போவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, காவல்நிலையத்தில் புகார் அளித்தோம்.திருமண மண்டபங்களில் உறங்கும் பெண்கள், பேருந்துகளில் உறங்கியபடி பயணிக்கும் பெண்கள், வீட்டிற்கு வெளியே காற்றோட்டத்திற்காக உறங்கும் பெண்களை குறி வைத்து, தலைமுடியைத் திருடும் புதுவித திருட்டு கும்பல் தற்போது திரிகிறது. பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமென எச்சரித்தனர், போலீசார். இப்படியும் திருட்டு நடக்கிறது... உஷார் பெண்களே!- சி.அருள்மொழி, கோவை.பள்ளிக்கூடங்களா, பலி பீடங்களா?இப்போதெல்லாம் பள்ளி, கல்லுாரிகளில் அடிக்கடி நிகழும், மாணவ, மாணவியரின் தற்கொலை மரணங்கள், மனதைப் பதற வைக்கின்றன. எத்தனை காரணங்கள் கூறி, சப்பைக்கட்டு கட்டினாலும், அகால மரணங்களை ஏற்கவோ, ஜீரணிக்கவோ இயலவில்லை.எத்தனையோ கனவுகளோடு, ஆண்டுக்கணக்கில் செலவு செய்து, பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்ட குழந்தைகளை, அற்பாயுளில், அகாலமாக சாகக் கொடுப்பதென்பது, எவ்வளவு பெரிய வேதனை; அதை அனுபவிப்பவர்களுக்கே தெரியும்.இன்றைய காலக்கட்டத்தில், பள்ளி, கல்லுாரிகளில், கல்வியோடு சேர்த்து, குழந்தைகளுக்கு மன தைரியத்தை முதல் மற்றும் முக்கிய பாடமாக எடுக்க வேண்டியது, அவசியமும், கட்டாயமும் கூட. என்ன நடந்தாலும், அதை எதிர்கொண்டு எவ்வாறு வாழ்வது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் இருக்கிறது.மதிப்பெண்களுக்காக குழந்தைகளை செக்கு மாடுகளாக வதைக்கும் போக்கு, இன்றைய பெரும்பான்மையான பெற்றோர் மற்றும் பயிலும் இடங்களில் இருப்பது கண்கூடு. இந்த கொடூர நிலை களையப்பட வேண்டும்.எந்த பிரச்னையையும் துணிச்சலோடு எதிர்கொள்ள, தோல்விகளையும், அவமானங்களையும் கடந்து செல்ல, பாலியல் ரீதியான சீண்டல்களைத் தைரியமாக எதிர்த்திட, உயிர் வாழ்தலின் உன்னதத்தை உணர என, நேர்மறை உணர்வை மாணாக்கர்களிடம் வளர்க்க வேண்டும். கல்வித்துறையும், ஆசிரியர்களும் மற்றும் சமூக ஆர்வலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது.இனியும், படிக்கும் குழந்தைகளின் தற்கொலைகள் நிகழவே கூடாது. பள்ளிக்கூடங்கள் பலி பீடங்கள் ஆகக்கூடாது. தள்ளிப்போட்டு ஆற்ற வேண்டிய செயலல்ல; இன்றே செய்யப்பட வேண்டிய அதிவிரைவான, அதிமுக்கியமான செயல். சம்பந்தப்பட்டவர்கள் விரைந்து செயலாற்றுவர் என்று, நம்புவோம்!- வி.நர்மதா, உளுந்துார்பேட்டை.டியூஷனுக்கும் நுழைவு தேர்வா?தோழியின் மகள், ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள். கணிதப்பாடம் புரியவில்லை என்று, நகரின் பிரபலமான டியூஷன் சென்டரில், அவளை சேர்க்க முயற்சித்தார், தோழி.அந்த டியூஷன் சென்டரில் சேர்வதற்கே, மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு வைத்தனர். அதில், மகள் தேர்ச்சி பெறவில்லை என்று, மன உளைச்சல் அடைந்தார், தோழி. மேலும், பள்ளிக் கட்டணத்தை விட அதிக தொகை வசூலிக்கும் அந்த டியூஷன் சென்டரில், கணிதப் பாடத்தில் தோழியின் மகள் தேர்ச்சியடைய வாய்ப்பில்லை என்று குறிப்பு எழுதிக் கொடுத்தனர்.பள்ளிக்கூடத்தில் சரியாக படிக்காதவர்கள் தான், தனிப்பயிற்சி வகுப்புகளுக்குச் செல்கின்றனர். டியூஷனில் நுழைவுத் தேர்வு வைத்தால், அவர்கள் நிலை பரிதாபத்துக்குரியதாக ஆகி விடாதா?கல்வியின் பெயரால் நடக்கும் இது போன்ற சுரண்டல்கள் எப்போதுதான் நிற்குமோ!- பா. சிவானந்தம், திருச்சி.