இது உங்கள் இடம்!
விபத்தின் போது உதவாத,'ஸ்மார்ட்' போன்!சமீபத்தில், வாகனத்தில் பயணிக்கும் போது, இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் ஒருவர், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து, விழுந்து கிடந்தார். அவரது மொபைல் போனை எடுத்து அவரது உறவினருக்கு தகவல் கூற நினைத்தால், அந்த, 'ஸ்மார்ட்' போன், 'லாக்' ஆகி இருந்தது. அதனால், எங்களால், அவரது உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துப் போனோம்.இன்று பலர், மொபைல் போனை, 'லாக்' செய்து, உபயோகிக்கின்றனர். இதனால், இம்மாதிரி சமயங்களில், பிறரால் அதில் பதிவு செய்துள்ள எண்களை பார்க்க முடியாது.இப்பிரச்னையை தீர்க்க, சில தற்காப்பு வழிமுறைகள் உள்ளன. அவை:'ஸ்மார்ட்' போனில் தொடர்பு எண்களை, 'ஜி - மெயில்' அக்கவுண்டில் தான் பெரும்பாலானோர் பதிவு செய்கின்றனர். அதை தவிர்த்து, சில முக்கிய எண்களை, 'சிம்' கார்டில், பதிவு செய்ய வேண்டும். அதனால், இம்மாதிரியான விபத்துகளின் போது, 'சிம்' கார்டை மற்ற போனில் மாற்றி, நம்பர்களை தொடர்பு கொள்ள இயலும்.மேலும், ஆண்ட்ராய்டு போன் பயனீட்டாளர்கள், தங்கள் போன், 'செட்டிங்ஸ்' மூலம், குறிப்பிட்ட நம்பரை, 'லாக்' செய்த பின்பும், போனில், 'டிஸ்ப்ளே' செய்ய முடியும். இந்த செட்டிங்கை பயன்படுத்தி, பெயர், நம்பர், ரத்த வகை போன்ற தகவல்களை, 'டிஸ்ப்ளே' செய்யலாம். வயதானவர்கள் முதல் படிக்காதவர் வரை ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் இச்சூழ்நிலையில், விவரம் அறிந்தவர்கள், இதை, அவர்கள் போன்களில், 'செட்' செய்வதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 'ஸ்மார்ட்' போனை, 'ஸ்மார்ட்'டாக பயன்படுத்த தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே!— ஸ்ரீரகுராம், கருவம்பாளையம்.பள்ளி மாணவர்களின் அர்த்தமுள்ள சேவை!சமீபத்தில், தனியார் பள்ளியில் படிக்கும் என் மகன், 'அம்மா... இன்றைக்கு மட்டும் ரெண்டு பேர் சாப்பிடுற அளவுக்கு சாப்பாடும், கொஞ்சம் கூடுதலாக தின்பண்டமும் வேணும். அதோட என்னோட ஒரு, 'டிரஸ்'சும் வேணும்...' என்று கேட்டான். 'எதற்கு?' என்று கேட்ட போது, 'எங்க எல்லாரையும் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்திற்கு அழைச்சுட்டு போகப் போறார் எங்க ஆசிரியர்; அதற்கு தான்...' என்றான். நானும் அவன் கேட்டதை எல்லாம் கொடுத்து அனுப்பினேன்.பின், பள்ளி முடிந்து வீடு திரும்பியவனிடம், 'இன்றைக்கு ஆதரவற்றோர் இல்லத்தில என்ன செய்தீங்க?' என்று கேட்ட போது, என் மகன் உற்சாகமாக, 'அங்க இருக்கிற சிறுவர்களுடன் விளையாடினோம்; நாங்க எடுத்துட்டுப் போன சாப்பாட்டை அவங்களோட பகிர்ந்து சாப்பிட்டு, நாங்க கொண்டு சென்ற ஆடைகளை அவங்களுக்கு தந்தோம். அவங்களும், எங்களுக்கு திருக்குறள் புத்தகத்த பரிசாக தந்தாங்க...' என்று கூறியதோடு, 'விருப்பப்பட்டா இனி, மாதந்தோறும் ஆதரவற்றோர் இல்ல சிறுவர்களை நீங்க தனிப்பட்ட முறையில போய் பாக்கலாம்'ன்னு எங்க ஆசிரியர் கூறினார்...' என்றான்.அத்துடன், 'இனிமே, அங்க இருக்கும் என் நண்பர்கள அடிக்கடி போயி பாப்பேன்...' என்றும் கூறினான்.வெள்ளை உள்ளம் கொண்ட மாணவ பருவத்தில், ஆதரவற்றோருக்கு உதவி செய்யும் மனப்பான்மையை வளர்க்கவே, ஆசிரியர் இப்படி புத்திசாலித்தனமாகவும், மனிதாபிமானமாகவும் யோசித்ததை தெரிந்து கொண்டேன். சமூக அக்கறை கொண்ட அந்த ஆசிரியரை மானசீகமாக பாராட்டினேன்.— டி.மனோன்மணி, திருப்பூர்.இந்தி கற்றுக் கொள்ள...என் நண்பர் வீட்டிற்கு சென்றிருந்த போது, அந்த தெரு சிறுவர் மற்றும் சிறுமியர், 'டிவி' முன் அமர்ந்து, தங்கள் கையில் உள்ள நோட்புக்கில் ஏதோ எழுதிய வண்ணம் இருந்தனர். நண்பனை விசாரித்ததில், 'நெட்டில், 'ஸ்போக்கன்' இந்தியை, சி.டி.,யில் பதிவிறக்கம் செய்து, அதை 'டி.வி.டி.,' மூலம், 'டிவி'யில் போட்டு, தெரு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கின்றனர் ஆசிரியர்களாக பணிபுரியும் என் மனைவி மற்றும் மகன்கள். பிள்ளைகளும் ஆர்வத்துடன் இந்தி படிக்கின்றனர்...' என்றார்.'வாழ்க உங்கள் தொண்டு...' என்று சொல்லி, வாழ்த்தி விட்டு வந்தேன்.— தி.சடகோபன், நெய்வேலி.