முயற்சி இருந்தால் சிகரம் தொடலாம்!
ஒரு காலத்தில், மகாராஷ்டிரா மாநில தலைநகரான மும்பை, காட்கோபர் என்ற சேரி பகுதியில், தெரு தெருவாக பூ விற்பனை செய்து வந்த பெண், இப்போது, அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்றில், உயர் கல்வி பயின்று வருகிறார்.இப்பெண்ணின் பெயர், சரிதா மாலி. பூ விற்பதை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு உதவியாக இருந்தார். படிப்பில் கெட்டிக்காரியான இவர், பள்ளியில் எல்லா பாடத்திலும் முதல் மதிப்பெண் பெற்றார். கல்லுாரியில் சேர்ந்து படிக்க விரும்பியபோது, டில்லியில் உள்ள, ஜே.என்.யு., என்ற பல்கலைக் கழகம் இவருக்கு இடம் கொடுத்தது. தங்கப்பதக்கம் பெற்று, பட்டமேற்படிப்பை முடித்தார்.அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க ஆலோசனை வழங்கி, அதற்கான வழிகாட்டி உதவினார், நண்பர் ஒருவர். நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, 'சான்சலர் பெல்லோஷிப்' கல்வி உதவி பெற்று, தற்சமயம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலையில் சேர்ந்து பயின்று வருகிறார். முயற்சி இருந்தால், எந்த உயரத்துக்கும் போகலாம் என்று நிரூபித்துள்ளார், சரிதா மாலி.— ஜோல்னாபையன்