தெரியாத எதிரிகள்!
அலுவலகத்திற்கு வந்ததும், தன் இருக்கையில் அமர்ந்து, கம்ப்யூட்டரை, 'ஆன்' செய்து, ஏதாவது இ - மெயில் வந்துள்ளதா என்று பார்த்தார், ராம்பிரகாஷ். வந்த சில லெட்டர்களில், முதல் செய்தி அவரை சூடாக்கியது.'இந்த ஜி.எம்.,முக்கு பெரிய இவன்னு நினைப்பு... இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்துடுறேன்...' என்று நினைத்தபடியே, சிஸ்டத்தை, 'ஆப்' செய்து, ஜி.எம்., அறைக்கு சென்றார்.''எஸ்...'' அர்த்த புஷ்டியுடன், ராம்பிரகாஷை ஏறிட்டார், ஜி.எம்.,''உங்க மெயில்ல என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா சார்...'' நேரடியாக விஷயத்திற்கு வந்தார், ராம்பிரகாஷ்.''உங்க அதிகாரத்திற்குட்பட்ட, 'பெட்டிகேஷை' விட, அதிகமாக செலவு செய்திருக்கீங்க... இது மூணாவது முறை; ஏற்கனவே, ரெண்டு முறை, இதப்பத்தி உங்க கிட்ட சொல்லியிருக்கேன். இப்ப, 'மெமோ'... அடுத்த முறை, 'பனிஷ்மென்ட்' தான்... நீங்க போகலாம்,'' அலட்டிக்காமல் சொன்னார், ஜி.எம்.,''சார்... அதுக்கான காரணம், பில்ஸ் எல்லாம் உங்ககிட்ட ஒப்படைச்சுட்டேன்.''''எல்லாம் முடிஞ்சப்புறம் பில் கொடுக்கிறீங்க... செலவு செய்றதுக்கு முன், 'பர்மிஷன்' வாங்கணும்ங்கிறது தான் கம்பெனியோட சட்டம்!''''எனக்கும், 'ரூல்ஸ்' தெரியும் சார்... நுாறு சதவீதம் சட்டப்படி கம்பெனி நடத்த முடியாதுங்கிறத புரிஞ்சுக்கங்க. நான், 15 வருஷ சீனியர்; சில விஷயத்துல, 'அட்ஜெஸ்ட்மென்ட்' வேணும்... இதுக்கு முன் இருந்த ஜி.எம்., இப்படி கேட்டதில்ல,'' என்றார், ராம்பிரகாஷ்.''இதெல்லாம் தேவையில்லாத பேச்சு; முதல்ல எப்படி பேசணும்ங்கிறத கத்துக்குங்க... நீங்க ஒரு செக் ஷனோட ஆபீசர் தான்; நான் கம்பெனியோட ஜி.எம்.,''''நான் பேச கத்துக்கணும்; இல்லன்னா வேலைக்கு பிரச்னை வரும்... அதத்தானே சொல்ல வர்றீங்க...'' என்று சொல்லி, வெளியேறினார் ராம்பிரகாஷ்.அடுத்த சில நாட்களில், பெங்களூரு கிளைக்கு மாற்றியதால், வேலையை விட்டு நின்றார், ராம் பிரகாஷ். அவர் படிப்பிற்கு, சில நாட்களிலேயே வேறு வேலை கிடைத்தாலும், அவர் மனைவி கீதா தான், சற்று வருத்தப்பட்டாள்.''ஏங்க... இது தேவையா... ஜி.எம்.,கிட்ட கொஞ்சம் பணிஞ்சு போயிருக்கலாமே... நிர்வாகிக சில சமயம் அப்படி இப்படி தான் இருப்பாங்க; நாமதான் பாத்து நடந்துக்கணும்,'' என்றாள்.''என்ன நீ... எனக்காக பேசுறத விட்டு, என்னோட எதிரிக்கு பரிஞ்சு பேசுற... எதுக்காகவும், என்னால தன்மானத்தை விட முடியாது,'' என்று மனைவியை அடக்கினார்.திருமணமாகி வெளியூரில் இருக்கும் மகள் வர்ஷினியிடம் போனில் கவலைப்பட்டாள், கீதா. ''விடும்மா... அப்பா பத்தி தான் தெரியுமே,'' என்று ஆறுதல் கூறினாள், மகள்.சில வாரங்கள் கடந்தன.அன்று காலை, கைக்குழந்தையுடன், டாக்சியில் வந்திறங்கினாள், வர்ஷினி.''என்னடி, போன் கூட செய்யாம வந்திருக்க... ஏதாவது பிரச்னையா...'' என்றாள் கீதா.''ஏன்... பிறந்த வீட்டிற்கு பொண்ணு வந்தாலே பிரச்னைன்னு தான் நினைப்பீங்களா...'' என்று வர்ஷினி கோபமாக கேட்க, அமைதியானாள், கீதா.அலுவலகம் முடிந்து வந்த கணவரிடம் தன் கவலையை சொல்ல, மாப்பிள்ளைக்கு போன் செய்தார், ராம்பிரகாஷ்.''எல்லாத்தையும் உங்க மக கிட்டயே கேளுங்க,'' என்று சொல்லி, பட்டென்று, போனை வைத்து விட்டான், வர்ஷினியின் கணவன், தினேஷ். அப்போது தான் விஷயத்தின் தீவிரம் புரிந்தது. உடனே மகளை கூப்பிட்டார்.''என்னப்பா... உங்க மாப்பிள்ளை என்ன சொன்னாரு... அவர் பேசுறது, செய்றது எல்லாம் சரின்னாரா...''வர்ஷினி வேகம் காட்ட, ''இல்லம்மா எதுவும் சொல்லல... உன்கிட்ட கேக்க சொன்னாரு...'' என்றார், அமைதியாக!''ஒண்ணுமில்லப்பா... தினேஷோட சித்தப்பா பையனுக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல அட்மிஷன் கிடைச்சிருக்குன்னு எங்க வீட்டுக்கு வந்திருக்கான். ரெண்டு நாள் தங்கிட்டு, ஹாஸ்டல்ல சேருவான்னு நினைச்சா, நாலு வருஷமும் எங்க வீட்டுல தங்கித் தான் படிக்கப் போறான்னு தினேஷ் சொன்னாரு. என்கிட்ட, 'கன்சல்ட்' செய்ய வேணாமா... ஏற்கனவே நான், அவரு, மாமியார், மச்சினன்னு நாலு பேர்; இப்ப, அந்தப் பையனோட சேர்த்து அஞ்சு பேர்... எனக்கு, 'பிரைவசி' குறையுமேன்னு சொன்னா, கோபிக்கிறாரு. நன்றிக்கடனாம்... குடும்பம்ன்னா அப்படித்தான் இருக்கும்; அது, இதுங்கிறாரு... இதுல ரெண்டு பேருக்கும் வாக்குவாதம் முற்றி, பிரச்னையாயிடுச்சு... அதான், கிளம்பி வந்திட்டேன்,'' என்றாள். ''திடீர்ன்னு குடும்பத்துல ஒரு ஆள் அதிகமானா சங்கடமாத் தான் இருக்கும்; அதேநேரம் அதை கண்மூடித்தனமா எதிர்க்கவும் முடியாதே...'' என்றாள், கீதா.''இது, சாதாரண விஷயமில்ல கீதா... மாப்பிள்ளை, தன் மனைவிகிட்ட முதல்ல ஆலோசனை செஞ்சிருக்கணும்... அதுதான், அவர் தன் மனைவிக்கு தர்ற மரியாதை. அப்புறம், இத கண்டுக்காம விட்டா, நாளைக்கு வேற ஒரு ரிலேடிவ் வருவாங்க...''அப்ப போய் ஏன்னு கேக்க முடியாது. இப்பல்லாம் தனிக்குடித்தனம் போய், கணவனோட சுதந்திரமாக வாழணும்ன்னு பெண்கள் நினைக்குறாங்க... நம்ம பொண்ணு, மாமியார், மச்சினன்னு சேர்ந்து தான் இருக்கா. இதுல இன்னொரு நபரா... இத கேட்டுத் தான் ஆகணும்,'' என்றதும், முகம் மலர்ந்தாள், வர்ஷினி. தினேஷிற்கு போன் செய்து, ''உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்; நீங்க வர்றீங்களா இல்ல நான் வரட்டுமா...'' என்றார், ராம்பிரகாஷ். மாமனாரின் தொனி கண்டு, ''நீங்களே வாங்க,'' என்று கூறி, போனை வைத்தான். உடனே, ராம்பிரகாஷ் கிளம்ப, கூடவே, கீதாவும், கிளம்பினாள்.தினேஷ் வீட்டில் அனைவரும் இருந்தனர்.ராம்பிரகாஷும், கீதாவும் ஹாலில், சோபாவில் அமர்ந்திருக்க, எதிரில் இரண்டு காபி காத்திருந்தது.''சொல்லுங்க அங்கிள்,'' என்றான், தினேஷ்.''உங்க வீட்டு விஷயத்துல, நான் தலையிடுறது தப்பு தான்... ஆனா, அது, என் மகளை பாதிக்கும்போது, ஒரு அப்பாவா நான் கேக்க வேண்டியிருக்கு...'' என்று ராம்பிரகாஷ் சொல்ல, எல்லாரும் அமைதியாக இருந்தனர். அவரே தொடர்ந்தார்... ''குடும்பத்துல, 'கெஸ்ட்' வர்றது, போறது சாதாரண விஷயம் தான். ஆனா, ஒரு வயசு பையன் நாலு வருஷம் கூடவே இருக்கறது, கொஞ்சம் யோசிக்க வேண்டிய விஷயமில்லயா... கட்டின மனைவிகிட்ட, 'கன்சல்ட்' செய்யணும் தானே...'' என்றார், தினேஷின் அம்மாவைப் பார்த்து!அந்த அம்மாள் பேச வாயெடுக்க, சைகையால் அதை தடுத்த தினேஷ், ''அங்கிள்... இதுல முடிவெடுக்க வேண்டியது எங்கம்மா... அவங்க முடிவெடுத்து, சரின்னு மனசுல பட்டதால தான் இது நடந்திருக்கு. இந்த குடும்பத்துக்கு நானோ இல்ல உங்க மகளோ, 'ஹெட்' இல்ல... வீட்டுக்கு மருமகளா வந்தா, விட்டு கொடுத்து தான் போகணும். எங்கப்பா இறந்ததுக்கப்புறம், எங்க குடும்பத்துக்கு, சித்தப்பா தான் அப்பாவா இருந்தாரு... இதை, உங்க மககிட்ட சொல்லியாச்சு. அவ, உங்க வீட்ல வளர்ந்தத பத்தியே பேசுறா... எப்படி பிறந்த வீடும், புகுந்த வீடும் ஒண்ணா இருக்க முடியும்... இந்த, 'ஆர்க்யூமென்டே' தப்பு; போய் உங்க மகளுக்கு அறிவுரை சொல்லி அனுப்புங்க,'' என்றான், கறாராக!தினேஷை முறைத்துப் பார்த்தார், ராம்பிரகாஷ்.திருமணத்தின் போது, வர்ஷினியின் அழகு மற்றும் ஸ்டேட்டஸ் காரணமாக, ஆசையாக திருமணம் செய்து கொண்டவன், இப்போது, அதையெல்லாம் மறந்து பேசுவது, எரிச்சலைத் தந்தது.சட்டென்று எழுந்த ராம்பிரகாஷ், தினேஷின் அம்மாவைப் பார்த்து,''அம்மா... நீங்க தான் இந்த வீட்டுக்கு தலைவின்னு உங்க மகன் சொல்றாரு; ஆனா, உங்கள பேச விடல. புகுந்த வீடு, பிறந்த வீடுன்னு, 50 வருஷத்துக்கு முன்னால உள்ள ஆளு மாதிரி பேசுறாரு... அவருக்கு தான் ஆண், கணவர்ன்னு, 'ஈகோ' இருக்கு; நான், என் மகளை சொகுசா தான் வளர்த்தேன். மனைவிங்கிற காரணத்தால, அவ, இங்க வந்து அடிமையா வாழணும்ன்னு தலைவிதி இல்ல... என்னால என் மகளை காப்பாத்த முடியும்; அதுக்கான வசதியை ஆண்டவன் எனக்கு கொடுத்திருக்காரு...'' பட்டென்று சொல்லி, வெளியேறினார் ராம்பிரகாஷ். வேறு வழியின்றி, கீதாவும் பின் தொடர்ந்தாள். விஷயம் தெரிந்த வர்ஷினி, அப்பாவை கட்டிப் பிடித்து, ''பொண்டாட்டி தேவைன்னா வரட்டும்ப்பா...'' என்று ஆதரித்தாள்.சில வாரங்கள் சென்றது; தினேஷிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை. கீதா அரிக்க ஆரம்பித்தாள்; வர்ஷினி கவலைப்பட்டாள். 'ஏதாவது செய்யுங்கப்பா... குழந்தைக்கு அவ அப்பா முகம் மறந்து போவுது...' என்று புலம்பினாள்.குழம்பினார் ராம்பிரகாஷ். 'சே... மீண்டும் நான் தான் சென்று பேசணுமா...' என நினைத்து, அந்த பிரச்னையை தள்ளிப் போட்டார். மனைவியும், மகளும் புலம்ப ஆரம்பிக்க, ராம்பிரகாஷிற்கும் அழுத்தம் ஆரம்பித்தது.காலையில், தற்செயலாக வீட்டிற்கு வந்திருந்த கீதாவின் ஒன்றுவிட்ட மாமா, விஷயம் தெரிந்து, ராம்பிரகாஷிடம், ''குடும்பம், சமூகம் இதுல நாம ரொம்ப கண்டிப்பாக செயல்பட முடியாது; மனிதனுக்கு மனசுங்கிறது, 'சென்டிமென்ட்'ல ஊறினது. விட்டு கொடுத்தா தான் மகிழ்ச்சி வரும்; யார் விட்டுக் கொடுக்குறதுன்னு பிரச்னை வந்தா, முதல்ல விட்டு கொடுக்குறவன் தான் ஜெயிக்கிறான்னு அர்த்தம்.''உன் மக விஷயத்தை எடுத்துக்க... அவளே இப்ப பயப்படுறா... ஏன்... உன் கூடவே காலம் தள்ள முடியுமா? அவ குடும்ப பிரச்னை, அவங்களுக்குள்ளே தீர்த்துக்குவாங்க. நீ, உனக்கு பணம், வசதி இருக்குங்குற மிதப்புல வார்த்தைய விட்டுட்ட; இப்ப திரும்ப போய் பேச தயங்குற... உனக்கு எதிரா பேசுற எதிரிய விட, உன்கிட்ட இருக்கிற, 'தான்'ங்கிற, 'ஈகோ' தான் உன் முதல் எதிரி. அது இல்லாம இருந்தா, இப்ப, உன் மகள் அந்த வீட்ல இருந்திருப்பா... இப்பவும் கெட்டுப் போகல... பேசாம வர்ஷினியை கொண்டு போய் மாப்பிள்ளை வீட்ல விடு; உன் மாப்பிள்ளைக்கு அவரோட அம்மா, சித்தப்பா இவங்கள அனுசரிக்கணும்... வர்ஷினிக்காக அவங்க மனச புண்படுத்த முடியாது...'' மாமாவின் அனுபவம் பேசியது.யோசித்த போது, மாமா சொல்வது சரியென்றே பட்டது. மனிதனின் மிகப் பெரிய எதிரியே, கோபம், கர்வம், அலட்சியம், பொறாமை போன்றவை தான் என்பது புரிந்தது. மறுநாள், மகளை அழைத்துக்கொண்டு தினேஷ் வீட்டிற்கு சென்றார், ராம்பிரகாஷ். முகம் மலர வரவேற்றான், தினேஷ். அவளை அங்கு விட்டுவிட்டு திரும்பும் போது, வழியில், தன் பழைய, ஜி.எம்.,மை பார்த்தார்; அவரைப் பார்த்ததும், தன் பக்க தவறு என்ன என்று யோசித்தார். அதிகாரிக்கு கட்டுப்படுதல் என்ற முறையை மீறி, ஜி.எம்.,மை சீண்டியது தவறு என்பதையும், அந்த விஷயத்தில் எதிரி, ஜி.எம்., அல்ல; தான் படித்தவன், நேர்மையானவன் என்ற அகந்தையே, தனக்கு எதிரி என்பதை உணர்ந்தார்.உடனே, தன் காரில் இருந்து, இறங்கி, ஜி.எம்.மை நோக்கிச் சென்றவர், சிரித்தபடியே நலம் விசாரித்தார். ஆச்சரியத்துடன் பதிலுக்கு நலம் விசாரித்த ஜி.எம்., ''ராம்பிரகாஷ்... நீங்க எப்ப வேணும்ன்னாலும் திரும்ப வேலைக்கு வரலாம்...'' என்று சொல்ல, அந்த வார்த்தைகள், அவருக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்தது. தெரியாத எதிரிகளை வென்றதால் வந்த மகிழ்ச்சி அது!டி.சீனிவாசன்