வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டுகிறேன்.
வணங்குகிறேன் இந்த உழைப்பாளியை
'தினமலர்' - வாரமலர் அந்துமணியை எல்லாருக்கும் பிடிக்கும், அந்துமணிக்கோ சிலரை ரொம்பவே பிடிக்கும். அவர்களில் வீடு வீடாகச் சென்று பேப்பர் போடும், பேப்பர் பையன்களை ரொம்பவே பிடிக்கும். பல இடங்களில் அவர்கள்தான், தான் முதலாளியாக கருதும் வாசகர்களோடு தன்னை இணைக்கும் துாதுவர்கள், என்று வாஞ்சையோடு குறிப்பிடுவார். அப்படிப்பட்டவர்களில் ஒருவரை பற்றித்தான் குறிப்பிடுகிறது இக்கட்டுரை. ஒரு சின்ன திருத்தம் என்னவென்றால் அவர் பேப்பர் பையன் அல்ல, 'பேப்பர் தாத்தா!' ஆம், 94 வயதாகியும் இப்போதும் குளிர், மழை பாராமல் நாள் தவறாமல் பேப்பர் போடும் சண்முகசுந்தரம் தான் அவர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்தவரான இவர் தன்னை, சண்முகம் என்று அறிமுகப்படுத்திக் கொண்டாலும், 'பேப்பர் தாத்தா' என்றே கோபாலபுரம் பகுதி முழுவதும் அறியப்படுகிறார். பத்தாம் வகுப்பு படித்து, மோட்டார் வாகனம் தொடர்பான தொழிலில், 50 ஆண்டுகாலம் ஈடுபட்டிருந்தார். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அந்த தொழிலை அவர் கைவிட நேர்ந்தது. அடுத்து என்ன செய்வது என்று யோசித்த போது அவரது கோபாலபுரம் பகுதியில் பேப்பர் போட ஆரம்பித்தார். 'ஒரு முதலாளியா இருந்துட்டு எப்படிப்பா இப்ப தொழிலாளியா உன்னை நினைக்கிறது?' என்றபோது, 'உண்மையா, நேர்மையா உழைச்சு சாப்பிடணும் அது, எந்த தொழிலா இருந்தா என்ன?' என்று கூறி, பேப்பர் போட ஆரம்பித்தார். கடந்த, 2000 ஆம் ஆண்டு முதல் பேப்பர் போட ஆரம்பித்தார். இதோ, 25 ஆண்டுகளாகி விட்டது. பேப்பர் போடுவதுடன், பால் பாக்கெட் போட்டால் இன்னும் கொஞ்சம் கூடுதல் வருமானம் கிடைக்குமே என்று ஒருவர் கூற, 'போட்டுட்டா போச்சு...' என்று, வீடு வீடாக பால் பாக்கெட்டும் போடுகிறார். 'பகலில் சும்மாதானப்பா இருக்க ஒரு வழிபாட்டு மண்டபத்தை பொறுப்பாளரா இருந்து பார்த்துக்க முடியுமா? சம்பளம் தர்றோம்...' என்ற போது, அதையும் பார்த்துக் கொள்கிறார். அதிகாலை 3:00 மணிக்கு எழும் சண்முகம், 4:00 மணி வரை தன்னையும், மண்டபத்தையும் தயார் செய்து, சிறு வழிபாட்டை முடிப்பார். அதன்பின், வீடு வீடாக பால் போடப் போனால், காலை 6:00 மணி வரை போடுகிறார். பின், கோபாலபுரம் பகுதியில் வீடு வீடாக, 'தினமலர்' உள்ளிட்ட நாளிதழ்களை 8:00 மணிவரை சைக்கிளில் சென்று போடுகிறார். அதன்பின், வீட்டிற்கு போய் மனைவி, லட்சுமிக்கு வேண்டியதை செய்து கொடுத்துவிட்டு, மண்டபத்திற்கு வருகிறார். மண்டபத்தில் தான் ஒய்வு, உறக்கம் எல்லாம். இது தான், சண்முகத்தின் அன்றாட பணி. எவ்வளவு குளிர், மழை என்றாலும், ஒரு நாளும் கடமையில் இருந்து தவறியதில்லை. 'இத்தனை நாளில் அதிகமாக போனால் எப்போதாவது தலைவலி வந்துருக்கும். மற்றபடி உடம்புல பிரச்னை எதுவும் இல்ல. எங்கே போனாலும் என் சைக்கிள்ல தான் போவேன். எளிமைதான் வலிமைன்னு வாழ்கிறேன். 'மகன், மகள்கள், பேரன்கள் எல்லாரும் நல்ல நிலையில் உள்ளனர். என்னையும், மனைவியையும் நன்கு பார்த்துக் கொள்கின்றனர். உழைச்சது போதும் வீட்ல இருங்க என்றுதான் சொல்கின்றனர். எனக்கென்னவோ நானே உழைச்சு அதில வர்ற காசுல சாப்பிடறதுதான் சந்தோஷமா இருக்கு. 'நான் பேப்பர் போடுற வீடுகள்ல இருக்கிற அதிகாரிகள் எத்தனையோ பேர், 'ஒரே ஒரு கையெழுத்து போடு உனக்கு முதியோர், 'பென்ஷன்' வாங்கித் தர்றேன்...' என்று கூறுவர். 'எனக்கு என்னவோ அது உழைக்காம வாங்கற காசு மாதிரி தோணுறதால இதுவரை வேண்டாம்ன்னு உறுதியா இருந்துட்டேன்...' என்று சொல்லும் சண்முகம், பேப்பர் தாத்தா மட்டுமல்ல ஒரு வைராக்கிய தாத்தாவும் கூட. இவரை போனில் தொடர்பு கொள்ள முடியாது, வாழ்த்த வேண்டும் என்றால் மனதார வாழ்த்துங்கள்! எல்.முருகராஜ்
கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் வழங்க வேண்டுகிறேன்.
வணங்குகிறேன் இந்த உழைப்பாளியை