உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவுக்கு, நான், 29 வயது பெண். திருமணமாகி விட்டது. கணவர் வயது: 34. பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். திருமணம் நிச்சயமானது. நிச்சயதார்த்தத்துக்கும், திருமண நாளுக்கும் ஆறு மாத கால இடைவெளி இருந்தது. நிச்சயமானதிலிருந்து, தினமும் என்னுடன் போனில் பேசுவார், என்னவர்.அவர் பெற்றோர், எங்களிடம் கூறாத விஷயங்கள், தன்னுடைய விருப்பு வெறுப்புகள் மற்றும் சிறுவயதில் விபத்தில் சிக்கி, காலில், 'பிளேட்' பொருத்தியிருப்பது வரை அனைத்து விஷயங்களையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.அவரது வெளிப்படையான பேச்சால், அவர் மீது பிரியம் அதிகமானது.திருமணத்துக்கு பின், என்னை அன்பாக கவனித்துக் கொண்டார். எனக்கு தேவையானதை பார்த்து, பார்த்து செய்தார், கணவர்.பெற்றோருக்கு ஒரே மகனான அவரது அன்பும், வயதான மாமியார் -மாமனாரின் அனுசரணையும் எனக்கு புது உலகை காட்டியது.மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட, நான் செய்து வந்த வேலையிலிருந்து நின்று விட்டேன். கண்ணும், கருத்துமாக கவனித்து கொண்டேன். உடல்நலம் தேறினார், மாமியார். ஆனாலும், வீட்டு வேலைகள் செய்ய முடியாததால், நான் மீண்டும் வேலைக்கு போகும் எண்ணத்தை விட்டொழித்தேன்.திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்று, இப்போது என்னை குறை கூறுகிறார், மாமியார். அவர்களது உறவினர்களிடமெல்லாம், இதைப்பற்றியே பேசி, மனதை நோகடிக்கிறார்.மருத்துவரிடம் நானும், கணவரும் சென்று சோதித்ததில், இருவரிடமுமே சிறு சிறு குறைகள் இருப்பது தெரிந்தது.தொடர்ந்து சிகிச்சை எடுத்தால், குழந்தை பிறக்கும் என்றும் உறுதியளித்தார், டாக்டர்.ஆனால், நாளுக்கு நாள், மாமியார் என்னை மட்டுமே குறை கூறி, திட்டி வருகிறார். நான் படும் வேதனையை பார்த்து, என் கணவர், தனிக்குடித்தனம் போய் விடலாம் என்கிறார்.ஆனால், நான் தான் வயதான பெற்றோரிடமிருந்து மகனை பிரிப்பது பாவம் என்று மறுத்து விட்டேன்.குழந்தை பிறக்கும் வரை, மாமியார், என்னை வெறுக்காமல் இருக்க நான் என்ன செய்யட்டும் அம்மா?இப்படிக்கு, உங்கள் மகள்.அன்பு மகளுக்கு,வாழ்க்கையில், உறவுகள் காலம் முழுக்க கரைபுரண்டோடும் ஜீவநதியாய் இருக்காது. பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும். அன்பாய் இருப்போர், அதிருப்தியாய் மாறுவர். அதிருப்தியாக இருந்தோர், அன்னியோன்யமாக நெருங்குவர். சில சமயங்களில், உறவுகள் தேனாய் தித்திக்கும்; சில சமயங்களில், எட்டிக்காயாய் கசக்கும். மாமியார்கள், மருமகள்களை மகள் என்றழைப்பதும், மருமகள்கள், மாமியாரை அம்மா என்றழைப்பதும், 'சினிமாட்டிக்' விஷயம். யதார்த்தத்துக்கு துளியும் உதவாது.ஆயிரம் அடித்துக்கொண்டாலும் அம்மாவும், மகளும் கூட்டணிக்கட்சி தலைவர்கள் போல ஒரு பொழுதில் கட்டிக்கொள்வர்.மாமியார்-மருமகள் உறவுக்கு யாரும் ஆயுட்கால உத்திரவாதம் கொடுக்க முடியாது.உன் கணவரின் காதலும், பிரியமும் அப்படியேதானே தொடர்கிறது; அதில் ஒரு குறையும் இல்லையே... கணவருடனான புரிதல் தொடர்ந்து நீடிக்க இறைவனை பிரார்த்தி, மகளே.மருத்துவ பரிசோதனையில் இருவரிடமும் குறை இருப்பதாக தெரிகிறது. மகனை திட்ட ஒரு தாய்க்கு மனம் வருமா?கணவர், 'தனிக்குடித்தனம் போய் விடலாம்...' என்கிறார். இது நல்ல விஷயம். 'சென்டிமென்ட்' கருதி, அவர் யோசனைக்கு எதிர் வார்த்தை பேசாதே.குழந்தைப்பேறு இல்லாத தம்பதியினருக்கு செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பிறக்க வைக்கும் சாத்தியம், 99 சதவீதம் இருக்கிறது.மூன்று ஆண்டுகள் தனிக்குடித்தனம் போங்கள். அடிக்கடி மாமியார் வீட்டுக்கு, 'விசிட்' அடியுங்கள்.செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவர் மூலம் சிகிச்சையைத் தொடருங்கள். கணவரின் அரவணைப்பில் சிகிச்சையை நீ எதிர்கொள்ளலாம்.அடுத்த ஆண்டிற்குள், உனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கும். அப்போது, உன் மாமியார் உங்களுடன் வந்து சேர்ந்து கொள்வார்.குழந்தைகள், இறக்கை இல்லாத குட்டித் தேவதைகள். உனக்கும், உன் மாமியாருக்கும் இருக்கும் பிணக்கு அகன்று விடும்.வாழ்த்துகள்!என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 20, 2026 18:43

குழந்தையின்மைக்கு நான் மட்டும் காரணமல்ல. கணவரிடமும் சிறுசிறு குறைகளிருப்பதை மாமியாரிடம் பக்குவமாய் எடுத்துக்கூறு. Treatment மூலம் குழந்தை பாக்கியம் சாத்தியமென்பதையும் டாக்டர் சொன்னதாக சொல். அப்படியும் இடித்துக்காட்டிக்கொண்டிருந்தால் கிளம்பு தனிகுடித்தனம்.


Ganesun Iyer
ஜூலை 19, 2026 10:39

இதையே மனைவியின் வீட்டார்கள் என் மீது மட்டும் பழி போட்டால் என்ன செய்வார்கள் என்று தாயை கேள்வி கேட்டு, அந்த மாமியாரை ஆப் செய்ய வேண்டும்.