அன்பு சகோதரிக்கு, நான், 48 வயது ஆண். மிக்ஸி, கிரைண்டருக்கான உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்துள்ளேன்; 300 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். எனக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர். மனைவியின் வயது: 40. மூத்த மகன் படித்து, என்னுடன், தொழிற்சாலையை கவனித்துக் கொள்கிறான். இளையவன், வெளிநாட்டில் படித்துக் கொண்டிருக்கிறான். என் மனைவி தான் எனக்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கிறாள். எங்கள் குடும்பத்தை விட, மனைவியின் குடும்பம் வசதி படைத்தது. வீட்டிற்கு ஒரே மகள்; செல்லமாக வளர்ந்தவள். அவர்களாகவே விரும்பி வந்து, என்னை மாப்பிள்ளையாக்கி கொண்டனர். தற்பெருமையும், 'ஈகோ'வும் அதிகம் உள்ளவள். எனக்கு இரு சகோதரிகள். இருவருக்கும் திருமணமாகி விட்டது. திருமணமானதிலிருந்தே எங்கள் வீட்டினருடன் நெருங்கி பழக மாட்டாள், என் மனைவி. யாருடைய வீட்டு விசேஷத்துக்கும் வர மாட்டாள். என் வீட்டிற்கும், எந்த உறவினரும் வரக் கூடாது என்பாள். அக்கம்பக்கத்தினரிடமும் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டாள். எது கேட்டாலும் எடுத்தெறிந்து தான் பேசுவாள். என் பெற்றோரையும் மரியாதைக் குறைவாக பேச, அவர்கள் தனியாக சென்று விட்டனர். நான் தான் வாரம் ஒருமுறை சென்று பார்த்து வருவேன். நல்லவேளை மகன்கள் இருவரும், எல்லாருடனும் சகஜமாக பேசி பழகுவர். அதற்கு காரணம், என் பெற்றோர் தான் அவர்களை வளர்த்து ஆளாக்கினர். அதற்கும் குறை கூறுவாள்; நான் கண்டுகொள்ள மாட்டேன். பிரச்னை வரக்கூடாது என்று, முடிந்த அளவு, மனைவியின் போக்கிலேயே சென்று விடுவேன். வீட்டில் எல்லாவற்றுக்கும் பணியாட்கள் இருப்பதால், வேலை பளுவும் மனைவிக்கு இல்லை. ஆனால், எப்போதும், 'கடுகடு'வென்றே இருப்பாள். என் தங்கைகள், வீட்டு விசேஷத்துக்கு அழைக்க வந்தால், முகத்தை துாக்கி வைத்துக் கொள்வாள். என்னையும் போகக்கூடாது என்று தடுப்பாள். அப்படியெல்லாம் ஒதுங்கி இருக்க முடியாது, என்று கட்டாயப்படுத்தி அழைத்து சென்று விட்டால், அவ்வளவு தான். வீட்டிற்கு திரும்பியதும், கையில் கிடைத்த பொருட்களை துாக்கி வீசி, பெரிய ரகளை செய்து விடுவாள். இதெல்லாம் தவறு என்று பலமுறை அறிவுறுத்தி விட்டேன். அவளது பெற்றோரிடமும் சொல்லி பார்த்து விட்டேன். அவளுடன் பேசாமல் ஒருவாரம் கூட இருந்து விட்டேன். வெளியூர் சென்று ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தேன். எதற்கும் திருந்தியபாடில்லை. இவளை விவாகரத்து செய்து விடலாம் என்று கூட தோன்றுகிறது. என் மூத்த மகனுக்கு திருமணம் செய்து வைக்க விரும்புகிறேன். ஆனால், வரும் மருமகளை என்ன பாடுபடுத்துவாளோ என்றும் பயமாக இருக்கிறது. என் மகனும் கஷ்டப்படுவான். மனைவியை எப்படி திருத்துவது, சகோதரி.
-இப்படிக்கு, உங்கள் சகோதரன். அன்பு சகோதரருக்கு, உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் திருமணமாகி, 22 ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன். அவரது பணத்தில் தான், நீங்கள் தொழிற்சாலையை நிறுவி இருப்பீர்கள் எனவும் யூகிக்கிறேன். 21 வயதில், மூத்த மகன். 18 வயதில், இரண்டாவது மகன். இத்தனை ஆண்டுகள் நீங்கள் குற்றப்பட்டியல் தயாரித்து சுமத்தும் இதே மனைவியுடன் தான் குடும்பம் நடத்தி உள்ளீர்கள். அப்போதெல்லாம் உங்களுக்கு விவாகரத்து எண்ணம் வரவில்லை. 22 ஆண்டுகள் ஒரு பொருளை பயன்படுத்திய பிறகு அதை துாக்கியெறிய ஆசைப்படுகிறீர். பொதுவாக ஆண்கள் பிறபெண்களிடம் அனுதாபம் தேட, தங்கள் மனைவியை குறை கூறுவர். வாழ்க்கை எனும் விமானத்தை செலுத்தும் தலைமை பைலட் நீங்கள். உதவி பைலட் உங்கள் மனைவி. பயண துாரத்தில் முக்கால்வாசி பறந்து விட்டு, கோ பைலட்டை நடுவானில் வீசியெறிய முடியுமா? திருமணமான புதிதிலேயே மனைவியுடன் பேசி, அவளை ஆணவத்திலிருந்தும், முன்கோபத்திலிருந்தும் வெளியே கொண்டு வந்திருக்க வேண்டும். அப்போதெல்லாம் பொருளாதார ஆதாரத்துக்காக மவுனியாக இருந்து விட்டு, இப்போது கலகக்குரல் எழுப்புவது ஏன்? உங்கள் மனைவிக்கும், உங்கள் தங்கைகளுக்கும் இடையேயான உறவுமுறை சிக்கலில் இரு தரப்பாரும் தவறு இழைத்தவர்களாக இருப்பர். உங்களுக்கும், உங்கள் மகன்களுக்கும் இடையேயான தகவல் தொடர்பு எப்படி இருக்கிறது? உங்கள் மனைவிக்கும், உங்கள் மகன்களுக்கும் இடையே உள்ள தகவல் தொடர்பு எப்படி இருக்கிறது? உங்களுக்கு, உங்கள் மனைவி எட்டிக்காயாக கசக்கலாம். உங்கள் மகன்களுக்கு, அவர்களது தாய், தேனாக இனிக்கலாம். உங்கள் தங்கைகளை உங்கள் பெற்றோரை அந்நியமாக கருதும் உங்கள் மனைவி, தன் மகனையும், அவனுக்கு மனைவியாக வரும் மருமகளையும் வெறுத்து ஒதுக்குவாரா? எழுதி வைத்துக் கொள்ளுங்கள் சகோதரரே... உங்கள் மனைவி தனக்கு வரும் மருமகளை கொஞ்சி, அரவணைத்துக் கொள்வார். உங்களுக்கு, என்னுடைய எளிமையான அறிவுரை... கடந்த, 22 ஆண்டுகள் திருமண வாழ்க்கையை எப்படி நகர்த்தினீர்களோ, அதே சூட்சமத்தில் மீதி வாழ்நாளை நகர்த்துங்கள். அவ்வப்போது சக்சரவுகள் இல்லாத பேச்சுவார்த்தையை மனைவியுடன் நிகழ்த்துங்கள். மனைவியிடம் சொல்ல விரும்பும் விஷயங்களை, மகன் மூலம் மனைவிக்கு கடத்துங்கள். கடந்த, 22 ஆண்டுகளில் மனைவியுடன் இருந்த சந்தோஷமான தருணங்களை எண்ணி, மனைவி மீதான வெறுப்பை விட்டொழியுங்கள்.
- உங்கள் சகோதரி, சகுந்தலா கோபிநாத்.