அந்துமணி பா.கே.ப.,
பா - கே 'சமீபத்தில், 2025--26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அதாவது, நிதிநிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், எதிர்க்கட்சியினர் குறை கூறுகின்றனரே...' என்றார், 'திண்ணை' நாராயணன்.'ஒவ்வொரு முறை, வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கையை எதிர்க்கட்சியினர், நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாற்றுவது, வாடிக்கையானது தானே!''அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன் நாட்டில் வருமான வரியை ஒழிக்க வேண்டும் என்று வாதிட்டுள்ளார். அதோடு, மற்ற நாடுகள் மீது, வரிகளை விதிப்பதன் மூலம், தன் நாட்டின் நிதியை உயர்த்த முடிவெடுத்திருக்கிறார்...' என்றார், லென்ஸ் மாமா.'உலகம் முழுவதும், 'பட்ஜெட் சீசன்' நடந்து வருகிறது. பழங்காலத்தில், உலக நாடுகளில் நடைமுறையில் இருந்த, சில வினோதமான வரிகள் பற்றி தெரியுமா? என்றார், மூத்த செய்தியாளர். தெரியாது, சொல்லுங்களேன் என்றதும், கூற ஆரம்பித்தார்:பிரம்மச்சாரி வரி: ரோம் நாட்டில், ஒன்பதாம் நுாற்றாண்டில், திருமணமாகாத பிரம்மசாரிகளுக்கு, வரி விதிக்கப்பட்டது. திருமணத்தை ஊக்குவிக்கும் நோக்கில், அகஸ்டஸ் பேரரசரால் இந்த புதுமையான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.குழந்தைகள் இல்லாத திருமணமான தம்பதிகள் மீதும், வரி விதித்தார், அகஸ்டஸ். இந்த வரி, 20 முதல் 60 வயதுக்குட்பட்ட தனிநபர்களுக்கும் பொருந்தும். கடந்த, 15ம் நுாற்றாண்டில், ஒட்டோமான் பேரரசும், இந்த வரியை விதித்தது. இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும், 1924ல், இந்த வரியை அறிமுகப்படுத்தினார். இது, 21 முதல் 50 வயதுக்குட்பட்ட, திருமணமாகாத ஆண்கள் மீது விதிக்கப்பட்டது.சிறுநீர் வரி: பண்டைய ரோமில், ஒரு மதிப்புமிக்க பொருளாக, சிறுநீர் கருதப்பட்டது. சிறுநீரில் அம்மோனியா அதிகம் இருந்ததால், துணி துவைப்பதற்கும், பற்களை சுத்தம் செய்வதற்கும், அது பயன்படுத்தப்பட்டது.பொது சிறுநீர் கழிப்பிடங்களிலிருந்து, சிறுநீர் விநியோகம் செய்வதற்கு வரி விதித்தார், பேரரசர் வெஸ்பாசியன். அவரது மகன், டைட்டஸ், இதை எதிர்த்து கேள்வி எழுப்பியபோது, வெஸ்பாசியன் தன் மூக்கு அருகில் ஒரு நாணயத்தை வைத்து, 'பணம் நாற்றமடிக்காது...' என்று கூறினார்.உப்பு வரி: 14ம் நுாற்றாண்டில், உப்புக்கு வரி விதித்தது, பிரான்ஸ். இது பரவலாக எதிர்க்கப்பட்டதோடு பிரெஞ்சு புரட்சிக்கும் வித்திட்டது.அதேபோல், இந்தியாவில், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம், முதன்முதலில், 1759ல், உப்புக்கு வரி விதித்தது. 1930ல், மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகம் வரை நடைமுறையில் இருந்தது.தாடி வரி: 1535ம் ஆண்டில், இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி மன்னர், தாடி வளர்ப்பதற்கு வரி கட்டும் நடைமுறையை அறிமுகப்படுத்தினார். எட்டாம் ஹென்றிக்குப் பிறகு, அவரது மகள் முதலாம் எலிசபெத் மகாராணி, இரண்டு வாரங்களுக்கு மேல் தாடி வைத்திருக்கும் அனைவரும் வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்தை இயற்றினார்.இதில், கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால், வரி வசூலின் போது, சம்பந்தப்பட்டவர் வீட்டில் இல்லையென்றால், பக்கத்து வீட்டுக்காரர் வரி செலுத்த வேண்டும்.கடந்த, 1698ம் ஆண்டில், ரஷ்யாவின், ஜார் பீட்டர் தி கிரேட் என்பவரும், தாடி வரியை விதித்தார். பீட்டர், ரஷ்ய சமூகத்தை, ஐரோப்பிய நாடுகளைப் போல நவீனமயமாக்க விரும்பியதால், தாடி வளர்ப்பதற்கு, மக்கள் வரி செலுத்த வேண்டியிருந்தது.ஜன்னல் வரி: 1696ல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மன்னர் மூன்றாம் வில்லியம், ஒரு அசாதாரண வரியை அறிமுகப்படுத்தினார். அதாவது, நாட்டு பொதுமக்களின் வீட்டிலுள்ள ஜன்னல்களுக்கு வரி விதித்தார்.அதன்படி, அந்நாட்டு மக்கள், தங்கள் வீடுகளில் உள்ள ஜன்னல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, வரி செலுத்த வேண்டியிருந்தது.அரசரின் கருவூலம் காலியாக இருந்ததும், அதை நிரப்பவே, அவர் இந்த வரி விதிப்பைக் கொண்டு வந்தார் என்கிறது வரலாறு.பத்து ஜன்னல்களுக்கு மேல் உள்ள வீடுகள், வரி செலுத்த வேண்டியிருந்தது. அவ்வாறு வரி செலுத்துவதை தவிர்க்க, பலர் தங்கள் ஜன்னல்களை, கற்களால் மூடி விட்டனராம். இதனால், நல்ல காற்றோட்டம் மற்றும் வெளிச்சம் இன்றி, உடல்நலம் குன்றி மோசமான நிலையில் வாழ்ந்துள்ளனர்.இந்த வரி, கிட்டதட்ட, 156 ஆண்டுகள் நீடித்தது. இறுதியாக, 1851ல் தான் நீக்கப்பட்டிருக்கிறது.ஆன்மா வரி: 1718ம் ஆண்டில், பீட்டர் தி கிரேட், ரஷ்யாவில், ஆன்மா வரி என்று ஒரு வரியை அறிமுகப்படுத்தினார். இந்த வரி, ஆன்மாக்களை நம்புபவர்களுக்குப் பொருந்தும். ஆன்மா மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, மதத்தில் நம்பிக்கை இல்லாததற்காக, வரி விதிக்கப்பட்டனர்.தாடி வரியைப் போலவே, இதற்கும் வரி வசூலிப்பின் போது, சம்பந்தப்பட்ட நபர் வீட்டில் இல்லாதிருந்தால், அவர்களின் அண்டை வீட்டார் வரி செலுத்த வேண்டியிருந்தது.மார்பக வரி: 19ம் நுாற்றாண்டில், கேரளாவின் திருவிதாங்கூர் மன்னர், சில தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள், தங்கள் மார்பகங்களை மறைக்க வேண்டி, ஒரு வரியை விதித்தார்.இந்த வரியை செலுத்தாத பெண்கள், தங்கள் மார்பகங்களை மறைக்க அனுமதிக்கப்படவில்லை. வரி செலுத்த மறுத்து, எதிர்ப்புத் தெரிவித்து, தன் மார்பகங்களை வெட்டிய, நங்கேலி என்ற பெண்ணின் துணிச்சலால், இந்த வரி இறுதியாக ரத்து செய்யப்பட்டது. அப்பெண், அதிக ரத்தப் போக்கால் இறந்தார். இதனால், மன்னர் அந்த வரியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.பாலியல் வரி: ஜெர்மனியில் பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது என்றாலும், அது, பாலியல் சட்டத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.பான் நகரில், விலைமாதர்கள், ஒவ்வொரு நாளும், ஆறு யூரோக்கள் செலுத்த வேண்டும். இந்தப் பாலியல் வரி, அந்த நாட்டிற்கு, சுமார் ஒரு மில்லியன் யூரோக்கள் என்ற அளவிலான ஆண்டு வருமானத்தைப் பெற்றுத் தந்தது. - என்று கூறி முடித்தார், மூத்த செய்தியாளர். அக்காலத்தில் இது மாதிரியான கேலி கூத்துக்கள் எல்லாம் நடந்திருக்கிறதா! எதிர்க்கட்சியினர் யாரும் இதையெல்லாம் விமர்சிக்கவில்லையா? அதுபற்றி தகவல் ஏதும் உண்டா? என்றேன், நான். யாருக்கும் பதில் தெரியவில்லை.