அந்துமணி பா.கே.ப.,
பா - கே கல்லுாரி ஒன்றில், 'விஷுவல் கம்யூனிகேஷன்' படிக்கும் மாணவி அவர். பத்திரிகைத் துறைக்கு வரவேண்டும் என்பது அவரது ஆசை. அதற்காக அவ்வப்போது, படிப்பு மற்றும் பத்திரிகை சம்பந்தமான தன் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க என்னை சந்திக்க வருவார். அன்று, கல்லுாரி நேரம் முடிந்ததும், நேராக என்னை சந்திக்க வந்திருந்தார். அவர் படிப்பது ஆண் - பெண் இருவர் சேர்ந்து படிக்கும் கல்லுாரி. மாணவியரை கவர, மாணவர்கள் செய்யும் சேட்டைகள், மாணவியரின் சமாளிப்புகள் மற்றும் சமீபத்தில் நடந்த செமினாரில் பகிரப்பட்ட தகவல்கள் அனைத்தையும் என்னிடம் கூறினார். பேசிக் கொண்டிருந்தவர், திடீரென, 'மணி, உன்னிடம் ஒரு புதிர் கேட்பேன். சரியான விடை சொல்லணும்...' என்றார். 'இது வழக்கமானது தானே. கேளு... தெரிந்தால் சொல்கிறேன்...' என்றேன். 'புயலும், மழையும் மிரட்டும் ஓர் இரவு. இளைஞன் ஒருவன், காரில் செல்லும்போது, வழியில் இருந்த பஸ் நிறுத்தத்தில், மூன்று பேர் நின்றிருப்பதை பார்த்தான். அவர்களில் ஒருவர் வயதான பெண்மணி; அவருக்கு உடல்நிலை சரியில்லாமல், மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார். பேருந்து வந்தபாடில்லை. 'மற்றொருவர், அந்த இளைஞனின் கல்லுாரி தோழன். முன்பு ஒருமுறை, இக்கட்டிலிருந்து இந்த இளைஞனை காப்பாற்றியவன். 'இவர்களுடன் ஒரு இளம்பெண்ணும் நிற்கிறாள். அப்பெண்ணைப் பார்த்ததும், இவள், தனக்கு ஏற்றவள் என்ற எண்ணம் அந்த இளைஞனுக்கு தோன்றியது. 'இவர்கள் மூன்று பேருமே, 'இவன் தங்களுக்கு உதவ முன்வருவானா?' என்று எதிர்பார்த்தனர். ஆனால், அவனது கார் மிகவும் சிறியது. மூவரையும் ஏற்றிச் செல்ல முடியாது. ஒருவரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும். 'அந்த சூழ்நிலையில் அந்த இளைஞன் என்ன முடிவு எடுத்து, மூவருக்கும் உதவுவான்?' என்று என்னிடம் கேட்டாள், மாணவி. 'அவரவர் போக வேண்டிய இடத்திற்கு, ஒவ்வொருவராக ஏற்றிச் சென்று இருப்பான்...' என்றேன், நான். 'அடாத மழை, இரவு நேரம் என்று சொன்னேனே... அப்படியெல்லாம் செய்ய முடியாத சூழ்நிலை. வேறு பதில்...' என்றார், மாணவி. 'எனக்கு தெரியவில்லை, நீயே சொல்லிவிடு...' என்றேன். அவர் கூறிய விடையை கேட்டதும், இப்படியும் ஒரு வழி இருக்கா. இக்கால இளம் வயதினர் எப்படியெல்லாம் யோசிக்கின்றனர் என்று ஆச்சரியமானேன். என்ன வாசகர்களே நீங்களாவது கண்டுபிடித்தீர்களா? கண்டுபிடிக்க முடியாதவர்கள் கடைசி பாராவில் விடையை பார்க்கவும். என்னிடம் விடைபெற்று, வெளியே சென்றார், மாணவி. சிறிது நேரத்தில் உள்ளே வந்த லென்ஸ் மாமா, 'மணி... மாணவியின் பெயரை குறிப்பிட்டு, நம் அலுவலகம் வந்திருந்தாரா? வெளியே போவதை பார்த்தேன். நான் வரும்வரை, 'வெயிட்' பண்ண சொல்லக்கூடாதா...' என்றார். அருகில் இருந்த உ.ஆசிரியை, அப்பெண் வந்திருந்தார், வழக்கம் போல் புதிர் போட்டு, விடை கண்டுபிடிக்க சொன்னார். மணியால் கண்டுபிடிக்க முடியவில்லை...' என்று, போட்டுக் கொடுத்தார். 'சே... நான் இருந்திருந்தால், சரியான விடையை கண்டுபிடித்திருப்பேனே... சரி, அது என்ன புதிர் என்று சொல். ஒரு நிமிஷத்தில் கண்டுபிடித்து, அப்பெண்ணுக்கு போன் போட்டு சொல்கிறேன்...' என்று பரபரத்தார், மாமா. ஆசிரியர் அழைப்பதாக கூறி, அங்கிருந்து எழுந்து சென்று விட்டேன். ப பிறருக்கு உதவுவது அவசியமா? என்றால் நிச்சயம் அவசியம். அது நமக்கே நாம் உதவுவது போல் தான். வீடு வீடாக பொருட்களை வினியோகிக்கும் சிறுவன் ஒருவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால், கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான். அந்த வீட்டின் கதவை தட்டினான். ஒரு பெண் கதவை திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால், கூச்சம். கேட்க மனம் வரவில்லை. 'கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா?' என, தயக்கத்துடன் கேட்டான். சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனித்தவாறு, உள்ளே சென்றவள், ஒரு கப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள், அப்பெண். பாலை குடித்து பசியாறிய சிறுவன், 'நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?' என்றான். 'கடனா... அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்...' என்று, சிரித்துக்கொண்டே சொன்னாள், அப்பெண். 'ரொம்ப நன்றி...' என்று கூறி புன்னகையுடன் கடந்து சென்றான், சிறுவன். ஆண்டுகள் கடந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்தச் சிறுவன் மருத்துவம் படித்து நகரிலேயே மிகப்பெரிய டாக்டர் ஆனான். முன்பு, சிறுவனுக்கு உதவிய அந்தப் பெண்ணுக்கு ஒரு கொடிய நோய் வந்தது. அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனை ரிப்போர்ட்டும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்தப் பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு சென்று, அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான்; தன் பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான். அன்று முதல் தன் முழு கவனத்தையும் செலுத்தி, அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின், அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப் போகிறேன் என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள், திகைத்து போனாள். அந்த பில்லின் கடைசியில், 'இந்தப் பில்லுக்கான பணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டு விட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!' என்று இருந்தது. அவளுக்கு கண்கள் பனித்தன. அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல. அமெரிக்காவின் பிரபல மருத்துவராக விளங்கிய, டாக்டர் ஹாவர்டு கெல்லி தான். இதைத்தான் நம் வள்ளுவர், இரண்டே வரியில் கூறினார். அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி குறள் - 226 பொருள்: வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது, செல்வம் பெற்ற ஒருவன், பிற்காலத்துக்கு தனக்கு உதவ சேர்த்து வைக்கும் இடமாகும். - எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது. விடை:தன் நண்பனிடம் கார் சாவியைக் கொடுத்து, காரில், வயதான பெண்ணை ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி கூறினான்.தன் மனம் கவர்ந்த அந்த இளம் பெண்ணுக்கு துணையாக பஸ் நிலையத்தில் காத்திருந்து, பஸ் வந்ததும், அவளுடன் பயணம் செய்து, பத்திரமாக அவள் வீட்டுக்கு அழைத்து சென்றான். அப்படியே அவள் மனதை ஈர்த்து, அவளை திருமணம் செய்து கொள்ளவும் சம்மதம் வாங்கினான்.மூவருக்கும் உதவியது போலாகி விட்டதல்லவா!