அந்துமணி பா.கே.ப.,
பா கர்சீப்பால், மூக்கை பொத்தி, சர்சர்ரென உறிஞ்சியபடியே அலுவலகத்தினுள் வந்தார், 'திண்ணை' நாராயணன். 'ஓய், நாணா... ரொம்பவும் மூக்கை அழுத்தி சிந்தாதீர்... மூக்கு நீளமாகி விடப் போகிறது...' என்று நக்கலடித்தார், லென்ஸ் மாமா. 'கடுப்பேத்தாதீங்க லென்சு... சளி, இருமலால் நானே அவதிப்பட்டு கொண்டிருக்கிறேன். உமக்கு கிண்டலாக போய் விட்டதா?' என்றார், நாராயணன். 'கோச்சுக்காதே, நாணா... ஒருவரின் முகம் அழகாக தெரிவதற்கு, அவரது மூக்கு தான் காரணமாகிறது. திருமணத்துக்கு பெண் பார்க்க செல்லும் போது, 'பொண்ணு, மூக்கும், முழியுமா லட்சணமா இருக்கா...' என்கிறோம். பண்டைய காலத்திலிருந்து இன்று வரை, மூக்கு ஒரு முக்கியமான, முக அழகுக்கான அம்சமாக இருந்து வருகிறது. அந்த வகையில், மூக்கால் புகழ் பெற்றவர்கள் நிறைய பேர் உள்ளனர்...' என்றார், லென்ஸ் மாமா. 'உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவுகள், ஓவியர்கள் மற்றும் தலைவர்கள் பற்றி தெரியும். அதென்ன உலகப் புகழ்பெற்ற மூக்குகள்?' என்றேன், நான். 'நாணாவுக்காக இல்லாவிட்டாலும், உனக்காக சொல்கிறேன்...' என்று கூற ஆரம்பித்தார், லென்ஸ் மாமா: மூக்கு வடிவங்களை பற்றிய கருத்து, சூழல் மற்றும் கலாச்சாரத்தை பொறுத்து மாறிக்கொண்டே வந்துள்ளன. மனித வடிவத்தின் சிறந்த படைப்பாக கருதப்பட்டனர், பண்டைய கிரேக்கர்கள். அவர்களுக்கு மூக்குகள் பெரியதாகவும், நேராகவும் சற்று புடைப்புடனும் இருந்தன. ஆப்ரிக்க சமூகங்களில், கொக்கி வளைவு மூக்கு, புத்திசாலித்தனத்தின் அடையாளமாக காணப்பட்டன. பண்டைய எகிப்திய மற்றும் கிரேக்க கலைகளில், அகன்ற, தட்டையான மூக்குகளை கொண்டவர்களை, அழகின் அடையாளமாக காண்பிப்பது வழக்கமாக இருந்தது. ஐரோப்பாவில் மெல்லிய, நீண்ட மூக்குகள் கொண்டவர்கள் மதிப்புமிக்கவர்களாக கருதப்பட்டனர். ஆசிய நாடுகளில், பரந்த நாசி துவாரங்கள், பாரம்பரியமாக விரும்பப்பட்டன. கிழக்கு ஆசியாவில் மூக் கின் மேல் பாகம் உயர்ந்திருந்தால் கவர்ச்சிகரமானதாக கருதப்பட்டது. ஒரு சிறந்த மூக்கு, நீளமாகவும், மெல்லியதாகவும், கூர்மையாகவும் இருக்கும். இங்கிலாந்தில், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, தாமஸ் வாட்ஹவுஸ் என்பவர், தன் மூக்கிற்காகவே உலகப் புகழ் பெற்றார். இவரது மூக்கு, 7.5 இன்ச் நீளம் இருந்ததாக கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர், சர்க்கஸில் பிரபலமான கலைஞராக பணியாற்றியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக இவரது மூக்கு இருப்பதால் இவரைப் பார்ப்பதற்காகவே துாரப் பகுதிகளிலிருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருவார்களாம். அந்த அளவுக்கு பிரபலமான, தாமஸின் மெழுகுச் சிலை லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவருக்கு பின், இவ்வளவு நீளம் கொண்ட மூக்கு அளவு யாருக்கும் இல்லை; 300 ஆண்டுகளாக இவரின் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. துருக்கியை சேர்ந்த, மெக்மெட் ஓசுரெக் என்பவர், தற்போது, மிகவும் நீளமான மூக்குக்கான உலக சாதனையாளராக கருதப்படுகிறார். இவரது மூக்கு, 3.46 இன்ச் நீளம் கொண்டதாக, சில ஆண்டுகளுக்கு முன் அளவிடப்பட்டு, கின்னஸ் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது. ஒரு நபரின் மூக்கின் வடிவம் தான், பெரும்பாலும் அவர்களது அழகையும், சமூக அந்தஸ்தையும் தீர்மானிக்கிறது. நம்மூர் சினிமா நடிகர்களில் பலர், அழகான மூக்கு அமைய பெற்றிருக்கின்றனர். நடிகர்களில், எம்.ஜி.ஆர்., அரவிந்த்சாமி போன்றவர்களை சொல்லலாம். நடிகையரில், சிம்ரன், த்ரிஷா, ஸ்ரீலீலா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களை சொல்லலாம். - என்று கூறி முடித்தார், லென்ஸ் மாமா. 'மூக்கு பற்றி இவ்வளவு ஆராய்ச்சி செய்து வைத்துள்ளாரே...' என்று நினைத்துக் கொண்டேன், நான். கே வாழ்க்கையில், பெண்களால் மிகவும் அலைக்கழிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் மனம் நொந்து புலம்பிய புலம்பல் இது: ஆ யாவோ, ஆன்ட்டியோ எத்தனை பேர் எங்களிடம் வந்து, 'லவ் யூ' சொன்னாலும், சட்டுன்னு கோபப்படாமல், செருப்பை கழற்றாமல், பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு பொறுமையா சொல்லிடுவோம் * பஸ்ல, ஆண்கள் சீட்டுல பொண்ணுங்க உட்கார்ந்தா கண்டக்டர்கிட்ட, 'கம்ப்ளைன்ட்' பண்ண மாட்டோம் * மனைவி எம்புட்டு அடிச்சாலும், எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டாங்க * சொத்தை எல்லாம், தன் மனைவி பெயரில் வாங்கி, எல்.ஐ.சி., மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வோம். அதுவும், எங்கள் காலத்துக்கு பின் மனைவிக்கே செல்ல வழி செய்வோம் * 'லிப்ட்' கேட்கிற பொண்ணுங்களை, நாங்க திட்டினதே கிடையாது * எந்த ஒரு அப்பனும், மகனை தனியா அழைத்து, 'மருமகள் உன்னை நல்லா பார்த்துக்கிறாளாப்பா?' என்று சந்தேகமாய் கேட்டதில்லை * படித்து முடித்தவுடன், வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை * சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது, அடுத்த தோசைக்கு, 'டிவி' சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம் * தன் மொபைலுக்கு, நாங்களே, 'ரீசார்ஜ்' செய்து கொள்வோம் * முக்கியமா எங்ககிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒருத்திக்காக நிப்பாட்டி விடுவோம் * பெண்கள் சீரியல் பார்க்கிறதுக்காக, இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல், விட்டு கொடுத்து விடுவோம் * அமேசான் காடு வரை போய், பெண்களுக்கு முடி வளர, மூலிகை தைலம் வாங்கி வந்து தருவோம். ஆண்கள்ல நல்லவன், கெட்டவன்லாம் கிடையாது. ஆண்கள்னாலே நல்லவங்க தான். - இது எப்படி இருக்கு? ப நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, பொதுவாக வணக்கம் தெரிவிக்கிறோம். இந்த வணக்கம் சொல்லும் விதம் இடத்துக்கு இடம், நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஜ ப்பானியர்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கிற போது, 'வாழ்க்கை எனும் நதிக்கு வெற்றி' என்று துவங்குவர் * ஆங்கிலேயர்கள், 'காலை வணக்கம், உங்கள் உடல் நலம் எப்படி?' என்பர் * எகிப்து நாட்டினர், 'நீங்கள் எவ்வளவு வியர்வை சிந்தினீர்கள்?' என்று கேட்பர் * சீனர்கள், 'உங்கள் வயிறு எப்படி இருக்கிறது? உணவு உட்கொண்டீர்களா?' என்பர். இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நலம் விசாரிக்கப்படுகிறது. நம் அண்டை மாநிலமான, கர்நாடகத்தில், ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, வணக்கம் கூறியவுடன், 'ஊட்டா ஆயித்தா?' என்று கேட்பர். அதாவது சாப்பிட்டீர்களா? என்பது அதன் அர்த்தம் தமிழர்கள் இருகரம் கூப்பி, 'வணக்கம், நலமா?' என்று சந்திப்பை துவங்குகின்றனர். எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.