அந்துமணி பதில்கள்!
எல்.பார்வதி, சென்னை: தமிழகத்தில், பிரதான தொழிலாக இருந்த வேளாண் துறையில், தற்போது, 25 சதவீத மக்களே உள்ளனராமே... கோத்தகிரியிலிருந்து, செல்வராஜ் என்ற வாசகர், 'கடந்த ஏழு ஆண்டுகளில், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 6,300 ஏக்கர் விவசாய நிலங்கள், வணிக பயன்பாட்டுக்கென மடை மாற்றம் செய்யப்பட்டுள்ளது...' என, கடிதம் எழுதியுள்ளார். உண்மை தான் அது! அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பணம் ஈட்ட நிலங்களை கூறு போடுவதை நிறுத்தினால் தவிர, இந்த பிரச்னை தீராது! எஸ்.கந்தவடிவேல், மதுரை: அமெரிக்கா - ஈரான் போரின் எதிரொலியாக சமையல் காஸ் விலை உயர்ந்துள்ளது. வணிகர்களும், இல்லத்தரசிகளும் அதிர்ச்சியில் உள்ளனர். இல்லத்தரசிகளின் எதிர்கால சமையல் நிலை என்ன? மாற்று எரிபொருள் தேட வேண்டியது தான், கந்தவேல். அதற்காக, விறகடுப்பில் சமைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. மின்சாரத்தில் இயங்கும் அடுப்புகள் சந்தையில் உள்ளன. சமையல் வேலையும் சீக்கிரம் முடிவதாக, பெண்கள் கூறக் கேட்டேன்! எம்.மகாலிங்கம், திருப்பூர்: தமிழக கவர்னர் மாற்றப்பட்டிருப்பது, தி.மு.க., அரசுக்கு, மகிழ்ச்சியாக இருக்கும் அல்லவா? தமிழகத்தில், கவர்னராக இருந்த ரவி, இங்கிருந்து வங்கதேச ஊடுருவல்காரர்கள் அதிகம் இருக்கும் மாநிலமான மே.வங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். மத்திய உளவுத் துறையினரால், 'கில்லாடி' என, பெயர் பெற்றவர், ரவி. அவர் தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டதற்கும், தற்போது மே.வங்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதற்கும் காரணம் புரிகிறதல்லவா, மகாலிங்கம்! அரசியல் பழிப்புகள், அனைத்தையும் பின் தள்ளுங்கள்! * பி.பாலு, நெல்லை: ஈரானுக்கு அருகே உள்ள, ஹார்முஸ் ஜலசந்தி வழியே நம் நாட்டிற்கான எண்ணெய் கப்பல்கள் கடந்து செல்ல, ஈரான் அனுமதி அளித்துள்ள செயல், மத்திய அரசின் ராஜதந்திர அணுகுமுறைக்கு கிடைத்த வெற்றியல்லவா?நிச்சயமாக! நம் வெளியுறவுத் துறை அமைச்சர், ஜெய்சங்கருக்கு, ஒரு, 'சபாஷ்' போடலாம். மேலும், பிரதமர் மோடி வெளிநாடு செல்லும் ஒவ்வொரு முறையும், கேலி செய்தவர்களுக்கு, இன்று அவரின் ராஜதந்திரங்கள் புரிந்திருக்கும்! எல்.மூர்த்தி, கோவை: தேர்தலுக்காக முன்கூட்டியே மதுபானங்களை, கட்சிகள் வாங்கி பதுக்கி வைத்திருப்பதாக, தகவல் வெளிவருகிறதே... தேர்தல் சமயத்தில் ஓட்டு வாங்கித் தரக்கூடிய, மிக முக்கிய சரக்கல்லவா! கட்சி பேதமின்றி அனைவரும் இப்போதே வாங்கி, பதுக்கிக்கொண்டால், உரிய நேரத்தில், 'அள்ளி விட' தேவைப்படுமே!* எஸ்.யோகானந்தம், ஈரோடு: 'இனி எனக்கு எல்லாமே அரசியல் தான். குடும்பம், நட்பு என, எல்லாவற்றையும் விட்டுவிட்டு தான், முழு நேர அரசியலில் இறங்கி உள்ளேன்...' என்கிறாரே, த.வெ.க., தலைவர் விஜய்? சொந்த வாழ்க்கை தோல்விகளை வைத்து, அனுதாப அலை உண்டு பண்ணப் பார்க்கிறார். விவாகரத்து வழக்கு கூட, அதற்கான, 'செட்-அப்'பாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது!மு.க.இப்ரஹிம், துாத்துக்குடி: தனிமரம் தோப்பாகுமா? யாரைச் சொல்கிறேன் என புரிகிறதா?அ.இ.பு.த.ம.மு.க., என்று தன் கட்சியின் பெயரை வைத்துள்ளாரே... அவரைப் பற்றிய கேள்வி தானே இது, இப்ராஹிம்! கட்சி பெயரைச் சொல்வதற்குள், நாக்கு சுளுக்கிக் கொள்கிறது... இதில், கட்சிக் கொடிக்கும், நிறைய தொண்டர்கள் இருப்பது போலவும் அலப்பறை செய்கிறார், ஜெ.,வுக்கு எடுபிடியாக இருந்த, சசிகலா. நடிகர் வடிவேலுவின், 'நானும் ரவுடி தான்...' காமெடி நினைவுக்கு வருகிறதல்லவா! எஸ்.ராமானுஜன், பெங்களூரு: 'தமிழக பெண்கள் அச்சுறுத்தப்படும் சூழல் நிலவுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத மாநிலமாக, தமிழகம் மாறியுள்ளது. பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை, நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது...' என்று, கமல்ஹாசன் தெரிவித்துள்ளாரே... தி.மு.க., கூட்டணியில் இருந்தாலும், தமிழகத்தில் நடப்பவற்றை, புட்டு புட்டு வைத்திருக்கிறார், கமல்ஹாசன். இந்த முறை, அனைவருக்கும் புரியும்படியும் பேசியுள்ளார். அவரது தைரியத்துக்கும், பேச்சுக்கும் ஒரு, 'சல்யூட்' வைப்போம்!