கேப்டன் விஜயகாந்த்! (3)
மூத்தமகள் விஜயலட்சுமி, மருத்துவப் படிப்பில் சேர, இளைய மகன், விஜயராஜை தன் வியாபாரத்தில் இழுத்துப் போட்டு நிம்மதி பெருமூச்சு விட்டார், அழகர்சாமி. அக்கா, தங்கைகளின் அன்புக்கு கட்டுப்பட்டவர்; அழகர்சாமியின் குலசாமியாக விஜயராஜ் வெளிப்பட்டத் தருணம், அது. விஜியின் இளமைக்காலம், அரிசி மில்லில் கல்லா கட்டுவதாகவும், தோழர்களோடு உல்லாசமாக ஊர் சுற்றுவதாகவும், விறுவிறுப்பாக போய் கொண்டிருந்தது. ஏற்கனவே கட்டான தேகம். அதற்கு மேலும் மெருகூட்டும் விதத்தில், தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டார், விஜயராஜ். விஜயராஜை சினிமாவில் அறிமுகப்படுத்த, தன்னாலான முயற்சிகளில் இறங்கினார், மர்சூக் என்ற நண்பர். முதல் கட்டமாக, விஜயராஜின் அப்பா, அழகர்சாமியிடம் சம்மதம் பெற வேண்டி இருந்தது. காமராஜரின் துாய தொண்டர் அவர். அவரிடம் போய், விஜயராஜை நடிகராக்க போவதாக சொன்னதும் அதிர்ந்து போனார். 'விஜயராஜுக்கு எதுக்கு நடிக்கிற உத்தியோகம். உருப்படாத பசங்க ஒண்ணா சேர்ந்துக்கிட்டு, என் புள்ளையையும் கெடுக்கறீங்களா?' என்றார். பெரியவரிடம் அத்தனை சீக்கிரம் ஒப்புதல் பெற முடியாமல், மாதங்கள் ஓடின. இறுதியாக, அழகர்சாமியின் பரிபூரண ஆசிகளோடு, விஜயராஜை சென்னைக்கு அழைத்து வந்தார், மர்சூக். சென்னை, சாலிகிராமத்தில் தங்கி, ஒரு சினிமா கம்பெனி விடாமல் ஏறி இறங்கினர். இயக்குனரும், தயாரிப்பாளருமான, பி.மாதவனிடம் விஜயராஜை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார், மர்சூக். விஜயராஜின் தோற்றமும், தேகப் பொலிவும் மாதவனை கவர்ந்தன. 100 ரூபாய் தாளை எடுத்து, விஜயராஜிடம் கொடுத்து, 'கருப்பா இருந்தாலும் களையான முகமா இருக்கு. இப்ப நான் எடுத்துக்கிட்டு இருக்கிற படத்துல நீதான், ரஜினிக்கு தம்பி...' என்றார். என் கேள்விக்கென்ன பதில் படத்தில், புதுமுகம் விஜயராஜ் நடிப்பதை புகைப்படங்களுடன், 'பிலிமாலயா' இதழ் வெளியிட்டது. அதைப் பார்த்ததும், மகிழ்ச்சி மழையில் நனைந்தனர், மதுரை நண்பர்கள். அது, துாறலோடு நின்று போனது. படப்பிடிப்பு நடைபெற்ற நாலாவது நாளில் படத்திலிருந்து நீக்கப்பட்டார், விஜயராஜ். விஜயராஜை விடவும், மிகவும் மனமுடைந்து போனார், மர்சூக். 'துாங்கா நகரத்தில், கோவில் காளையாக வலம் வந்த வாலிபனுக்கு, சினிமா ஆசை காட்டி, அவன் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டோமே...' என, வருந்தினார். மர்சூக், விஜயராஜ் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் எல்லாரும் மதுரைக்கு திரும்பினர். டி சம்பர் 9, 1978ல், மீண்டும் ஒரு தீர்க்கமான முடிவோடு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார், விஜயராஜ். ஹோட்டல் ரீஜென்ட்டில் தங்கி வாய்ப்பு தேட ஆரம்பித்தார். விஜயராஜ் இல்லாமல், நண்பர் இப்ராஹிம் ராவுத்தருக்கு மதுரையில் இருப்பு கொள்ளவில்லை. ராவுத்தருக்கும் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற ஆசை அதிகரித்தது. அவரும் சென்னை வந்து, விஜயராஜுடன் இணைந்து, தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டார். அழகர்சாமி ஆளுமைமிக்க மனிதராக இருந்ததால், அப்பாவுக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்கள் மூலமாக, அவர்களின் தயவோடும் வாய்ப்பு தேடினார், விஜயராஜ். மாதங்கள் ஓடியதே தவிர, ஏமாற்றம் தான். அழகர்சாமிக்கு, தன் மகன் மீது ஆத்திரம் அதிகரித்தது. மீண்டும் மதுரைக்கு வந்து வியாபாரத்தை கவனிக்க சொல்லி, விஜயராஜுக்கு கடிதங்களில் கட்டளை பறந்தது. மகன் மசிவதாக இல்லை. எரிவதை நிறுத்தினால், கொதிப்பது அடங்கி விடும் என, தோன்றியது. தன் மகனுக்கு பணம் அனுப்புவதை அடியோடு நிறுத்தி விட்டார், அழகர்சாமி. அப்பாவிடமிருந்து அப்படியொரு கெடுபிடியை எதிர்பார்க்கவில்லை, விஜயராஜ். ராவுத்தர், வீட்டிலிருந்து ஓரளவு பணம் கைச்செலவுக்காக அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. விஜயராஜின் சோகக் கதையை அறிந்த மதுரை சிநேகிதர்கள், தங்களால் இயன்ற பணத்தை நண்பனுக்கு அனுப்பினர். விஜயராஜ் நிலைமையை கேள்விப்பட்டு மனம் கலங்கினார், மர்சூக். இயக்குனரும், தயாரிப்பாளருமான, எம்.ஏ.காஜா, தன் சொந்த முதலீடுகளின் மூலம், இனிக்கும் இளமை என்ற படத்தை துவங்கிய தருணம். அவரிடம், விஜயராஜை அறிமுகம் செய்து, வாய்ப்பு தருமாறு கோரிக்கை வைத்தார், மர்சூக். விஜயராஜை தன் படத்தில் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டார், காஜா. 'விஜயராஜ், உங்க பேரை டைட்டில்ல, விஜயகாந்த்ன்னு காட்டப் போறேன். புது பேரு புடிச்சிருக்கா?' என, எம்.ஏ.காஜா கேட்ட போது, ஆனந்த கடலில், உல்லாசத் தோணியில் மிதந்தார், விஜயராஜ். இனிக்கும் இளமை திரைப்படத்தை, கடையநல்லுார் சினி ஆர்ட்ஸ் சார்பில், எம்.ஏ.காஜா சொந்தமாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து, இயக்கி இருந்தார். படத்தில், விஜயகாந்த், அருண் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றினார். வண்ணப்பட யுகம் துவங்கிய நேரம் அது. விஜயகாந்தின் அதிர்ஷ்டம், முதல் படமே வண்ணச்சித்திரமாக உருவானது. கூடுதல் அன்பளிப்பாக, முதன் முதலில் சென்னையில் நான்கு, 'ஏசி' திரை அரங்குகளான, அலங்கார், ஈகா, ராஜகுமாரி மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றில் தினசரி, மூன்று காட்சிகளாக வெளியானது. ஆனால், படம் தோல்வி அடைந்தது. அ ன்னக்கிளி படத்தின் மூலம், இளையராஜா மட்டுமல்ல, அதை எழுதிய, ஆர்.செல்வராஜும் பிரபலமாயினர். ஆர்.செல்வராஜ், கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரையாவின் மிக நெருங்கிய உறவினர். பாரதிராஜாவின், கிழக்கே போகும் ரயில் மற்றும் புதிய வார்ப்புகள் போன்ற வெள்ளி விழாச் சித்திரங்கள், ஆர்.செல்வராஜின் கற்பனையில் களை கட்டியவை. பொண்ணு ஊருக்கு புதுசு படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் அறிமுகமானார், ஆர்.செல்வராஜ். - தொடரும் பா. தீனதயாளன் நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் மொபைல் எண்: 72000 50073 'இனிக்கும் இளமை வந்ததும், என் பெயர் கொஞ்சம் வெளியே தெரியவந்தது. அதை வைத்து, பல இயக்குனர்களை சந்தித்தேன். பார்க்கிறவர்கள் அனைவருமே, 'அது தான் ஒரு ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு ஒரு விஜயகாந்த்'ன்னு, சொல்வாங்க...' என, ஒரு பேட்டியில் கூறியிருந்தார், விஜயகாந்த்.