கேப்டன் விஜயகாந்த்! (19)
கடந்த, 1991ல், அரசியல்வாதிகள் தேர்தலை எதிர்கொண்ட சமயத்தில் வெளியானது, கேப்டன் பிரபாகரன் படம். அதன் உரையாடலின் ஒவ்வொரு வரியும், நாட்டை ஆண்டவர்களை அதிர வைத்தது. பராசக்தி படத்தில், குணசேகரனாக நடித்த, சிவாஜிக்கு எந்த விதத்திலும் குறைந்து விடாமல், கேப்டன் பிரபாகரன் படத்தில் சிறப்பாக நடித்திருந்தார், விஜயகாந்த். லியாகத் அலிகானின் எழுத்து தோட்டாக்களிலிருந்து, புறப்பட்ட வெடிகுண்டு வசனங்கள், விஜயகாந்தால் பிரபலம் அடைந்தன. பெ ரும்பாலான நா யகர்களின், 101வது படம் எதுவும் எடுபட்டதில்லை. ஒரே விதிவிலக்கு, மாநகரக்காவல். ஏவி.எம்., நிறுவனத்தின் 150வது படம் இது.கதாநாயகனாக நடித்த, விஜயகாந்தின் 101வது படம். மாநகரக்காவல் படத்தை, 100 நாட்களுக்கு மேல் ஓட வைத்ததில், கேப்டனுக்கும் முக்கிய பங்கு உண்டு. கேப்டன் பிரபாகரன் படத்தைப் போல், மற்றுமொரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்தான், மாநகரக்காவல். உலக அரங்கில் ஒப்பற்ற தலைவியாக வலம் வந்தவர், முன்னாள் பாரத பிரதமர் இந்திரா. அவரது பாதுகாப்பு அதிகாரிகளாலேயே துப்பாக்கிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த நிஜ கதை, படமான போது, அன்னை இந்திராவாக நடித்த, லட்சுமியும், அவரைக் காப்பாற்ற துடிக்கும் காவலராக, விஜயகாந்தும் நடித்து பிரமாதப்படுத்தியிருந்தனர். திரைப்படக் கல்லுாரி மாணவர், எம்.தியாகராஜன் இயக்கத்தில் உருவான படம், மாநகரக் காவல். வி ஜயகாந்த் நடித்து சாகாவரம் பெற்ற திரைச்சித்திரம், சின்னக் கவுண்டர். இப்படத்தில் கதர் சட்டை, வேட்டி, துண்டு மட்டுமே, விஜயகாந்தின் உடைகளாக இருந்தன. படம் பார்த்து, 'கதருக்கு மிகப்பெரிய கவுரவத்தை தேடித் தந்து விட்டீர்கள்...' என்று, விஜயகாந்திடம் சொன்னார், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான, கருப்பையா மூப்பனார். தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும் போதும், முன்னாள் முதல்வர், கருணாநிதிக்கு அதை போட்டுக் காட்டத் தவற மாட்டார், விஜயகாந்த். அதுபோல், சின்னக் கவுண்டர் படத்தையும் அவருக்கு போட்டு காட்டினார். 'உன் படங்களிலேயே இதுதான்யா பெஸ்ட்...' என்று நெகிழ்ந்து சொன்னார், கருணாநிதி. சி னிமாவில் எந்தவித முன் அனுபவமும் இல்லாமல் ஒருவர், விஜயகாந்தின் வெற்றிச் சித்திரத்தை இயக்கி இருக்கிறார் என்றால், அவர், சபா என்று சுருக்கமாக அழைக்கப்படும் சபாபதி என்ற இயக்குனர் மட்டும்தான். எவரிடமும் துணை இயக்குனராகப் பயிற்சி பெறாமலேயே சாதித்துக் காட்டினார், சபாபதி. சென்னை தேனாம்பேட்டையிலிருந்து, திரையுலகில் நுழைந்தவர், சபா. 1988ல், திரைப்படக் கல்லுாரி மாணவராக, 'டூ யூ ரிமெம்பர்' மற்றும் கண் தானத்தை வலியுறுத்தும், 'விஷன்' ஆகிய இரு குறும்படங்களை இயக்கியிருந்தார், சபா. கடந்த, 1990ல், நேரடியாக, விஜயகாந்தின் அலுவலகம் இயங்கும் ரோஹிணி லாட்ஜில் பிரவேசித்தார், சபா. விஜயகாந்த் - ராவுத்தர் இருவருக்கும், அவரை, பிடித்து போனது. உடனடியாக, காயல் என்ற ஹிந்திப் படத்தின், 'ரீ-மேக்' துவங்கியது. ஹிந்தி நடிகர் தர்மேந்திரா, மூன்று கோடி ரூபாயில் தயாரித்து, அவருக்கு பத்து மடங்கு லாபத்தை கொட்டிக் கொடுத்த படம் அது. காயல் ஹிந்தி படம் தமிழில், பரதன் என்ற பெயரில், 1992, சித்திரை திருநாளில், வெளியானது. பரதன் படத்தில், விஜயகாந்த் மற்றும் நடிகை, பானுப்பிரியா ஜோடியாக நடித்திருந்தனர். புன்னகை என்று பல்லவி துவங்கினாலே, வாலிபக் கவிஞர் வாலிக்கு ஒவ்வொரு வரியிலும் அவர் வாங்கி வந்த வரமாக செம்மொழித் தேன் ஊறும். புன்னகை என்ற வார்த்தையில், எண்ணற்ற அமுத கானங்களை அவ்வப்போது அழகாக நெய்தவர், கவிஞர், வாலி. ஆட்டோ ராஜா படத்தில், 'சங்கத்தில் பாடாத கவிதை...' என்ற பாடல், விஜயகாந்துக்காக, இசையமைப்பாளர், இளையராஜா பாடிய காலத்தை வென்ற, 'டூயட் பாடல்.' 10 ஆண்டுகள் கடந்து, பரதன் படத்தில், இசையமைப்பாளர், இளையராஜா மற்றும் பாடகி, எஸ்.ஜானகி குரல்களில், 'புன்னகையில் மின்சாரம்...' என்ற பாடல், பலரையும் கவர்ந்தது. ராகதேவனின் இசையில், ஒப்பற்ற நாட்டிய நங்கை, நடிகை, பானுப்ரியாவோடு, விஜயகாந்த் இணைந்து நாட்டியமாடிய விதம் கண்கொள்ளாக் காட்சி. கடந்த, 1990களில், டான்ஸ் என்றால், அதுவும் விஜயகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரம் ஆடுவதென்றால், கூடவே நுாற்றுக்கணக்கான நடன கலைஞர்கள் பங்கேற்கும் குழு நடனமாகவே முதலில் இருந்தது. ஆனால், அதை தகர்த்து, தவிடு பொடியாக்கினார், 'டான்ஸ்' மாஸ்டர், பிரபுதேவா. 'புன்னகையில் மின்சாரம்...' பாடலுக்கு, நாயகன் - நாயகி இருவர் மட்டுமே தனித்து ஆடுவது போல் மாற்றினார், படத்தில் 'டான்ஸ்' மாஸ்டராக பணிபுரிந்த, பிரபுதேவா. தினுசு தினுசான வண்ண வண்ண ஆடைகள், நவீனத்தை பிரதிபலிக்கும் விதமாக, விஜயகாந்துக்கு மாறுபட்ட தோற்றங்கள். ஆட வேண்டும் என்றால், ஆயிரம் முறை யோசிக்கிறவர், விஜயகாந்த். அவரை விதவிதமாக ஆடவைத்து, விஜயகாந்தை பின்னி எடுத்து விட்டார், பிரபுதேவா. விஜயகாந்தின் திரை வாழ்க்கையில், நவீன நர்த்தனமாக அமைந்தது, 'புன்னகையில் மின்சாரம்...' பாடல். அதை, வெள்ளை வெளேர் என்று வெண்மைப் புரட்சியின் பின்னணியில், மாபெரும் அரங்கில் வித்தியாசமாக காட்சிப்படுத்தியவர், ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர், பாலு மகேந்திராவின் சீடரான ஒளிப்பதிவாளர், ராஜராஜன். ஒன்றல்ல இரண்டல்ல... 182 'கட்-ஷாட்'டுகள் கொண்ட ஒரே தமிழ், 'டூயட்' பாடலாக இன்றும் நம்மை ரசிக்க வைக்கிறது, பரதன் படத்தின், 'புன்னகையில் மின்சாரம்...' பாடல். பு லன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் மற்றும் மாநகரக் காவல் என்று அடுத்தடுத்து அதிரடி, 'ஆக்ஷன்' வெற்றிச் சித்திரங்கள் வசூலில், விஜயகாந்தை உச்சாணிக் கொம்பில் துாக்கி வைத்தன. விஜியும், கிராமிய கதைகளில் நடித்து அழியாப் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை, ராவுத்தருக்கு. தன் சகாவுக்கு மேலும் சக்தியூட்ட, இயக்குனர், ஆர்.வி.உதயகுமாரிடம் கலந்து பேசினார். ஊமை விழிகள், உழவன் மகன் போன்ற, ஆபாவாணனின் படைப்புகளில் உதவி இயக்குனராக இருந்தவர், ஆர்.வி.உதயகுமார். ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் நடிக்க, விஜயகாந்திடம் பலமாக சிபாரிசு செய்தார், ராவுத்தர். அவரே சொல்லிவிட்ட பின், விஜி மறுப்பாரா என்ன! அதைப்பற்றி அடுத்த வாரம் பார்ப்போம். - தொடரும் பா. தீனதயாளன்நன்றி : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் தொலைபேசி எண்: 7200050073