ஞானானந்தம்: பெரியோரை மதித்தல்!
பாண்டவர்கள், தம் ஆரண்யவாச காலத்தில், நாராயண ஆசிரமம் எனும் இடத்தில் தங்கி இருந்தனர். ஒரு நாள், ஆயிரம் இதழ்கள் உள்ள அதிசய தாமரை மலரைப் பார்த்தாள், திரவுபதி. அது மிக இனிமையான மணத்தை வீசியது. தன் அருகில் இருந்த பீமனிடம், 'இதுபோன்ற மலர்கள் மேலும் கொண்டு வரமுடியுமா...' என்று வினவினாள், திரவுபதி. உடனே கொண்டு வருவதாகக் கூறிப் புறப்பட்டான், பீமன். பலவித மலர்களைக் கொண்டுள்ள, கந்தமாதன மலையை நெருங்கினான். வழியில் வாழைத் தோட்டம் ஒன்றில் அமர்ந்து, ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார், பீமனின் மூத்த சகோதரர், அனுமன். பீமன் மற்றும் அனுமன் இருவருமே வாயு பகவானின் புத்திரர்கள். பீமன் வரும் பாதையில் வயதான தோற்றத்தில் தன் வாலை நீட்டியவாறு அமர்ந்திருந்தார், அனுமன். பீமன் வாலை கவனித்து, உயிருடன் இருக்கும் எதையும் தாண்டிச் செல்வது தவறானதால், அனுமனை ஒரு பெரிய குரங்கென நினைத்து, உரத்த குரலில், 'ஏய் குரங்கே! உன் வாலை வழியிலிருந்து அகற்று...' என்று அதட்டினான். அதற்கு அனுமன், 'பண்பாளரே! நான் மிகவும் வயதானவன். இந்தப் பெரிய வாலை என்னால் அகற்ற முடியாது. அதைப் பாதையிலிருந்து தள்ளி வைத்துவிட்டு, நீ போகலாம்...' என்றார். குரங்கின் வாலை அகற்ற முயன்றான், பீமன். தன் முழு பலத்தைப் பயன்படுத்தியும், அதை அசைக்கக் கூட முடியவில்லை. கிழட்டுக் குரங்காக காட்சியளிக்கும் இவர், ஒரு மகானாக இருக்கலாம் என்று உணர்ந்தான். அவரிடம், 'வணக்கத்திற்குரியவரே... நீங்கள் மகானாக இருக்கக் கூடும். தயவு செய்து உங்கள் உண்மை வடிவினை வெளிப்படுத்த வேண்டுகிறேன்...' என்று பிரார்த்தித்தான். மேலும், 'என் பெயர், பீமன், குந்தி தேவியின் மைந்தன், யுதிஷ்டரின் சகோதரன்...' என்று தன்னை, அனுமனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டான். அனுமன் முறுவலுடன், 'நான் உன் சகோதரன், அனுமன். நீ தேடி வந்த தாமரை மலர்கள் நிறைந்த குளம் அருகில் உள்ளது. அங்கு சென்று மலர்களைப் பறித்துக் கொள்...' என்றார். 'என் இறுமாப்பான போக்கைப் பொறுத்து அருள்வீராக! உங்கள் உண்மை வடிவினைக் காட்டி அருளுங்கள்...' என்று, அனுமனிடம் வேண்டினான், பீமன். பீமனின் வேண்டுகோளை ஏற்று, அவனுக்கு தன் விஸ்வரூப தரிசனத்தைக் காட்டி அருளினார், ஆஞ்சநேயர். 'தம்பி, பீமசேனா! மலர்களைக் கொய்து போக நினைக்கும் உன் முயற்சி வெற்றி பெறட்டும்...' என்று வாழ்த்தி மீண்டும் ராமநாம ஜபத்தில் ஆழ்ந்தார். மலர்களைப் பறித்துக் கொண்டு திரவுபதியிடம் சென்று கொடுத்தான், பீமன். பலம் மிக்கவன் என்ற அகம்பாவத்தை விட்டுவிட்டு, பெரியோரை மதிக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டால், இறைவனின் ஆசிர்வாதம் நிச்சயம் கிட்டும். அருண் ராமதாசன்அறிவோம் ஆன்மிகம்!நெய் தீபம், வீட்டின் சுகத்தை அதிகரிக்கும். எள் எண்ணெய் தீபம், சகல பரிகாரங்களுக்கு ஏற்றது. விளக்கெண்ணெய் தீபம், புகழ், ஜீவன சுகம், உறவினர் நலம், விருத்தி ஆகியவற்றை தரும்.