உள்ளூர் செய்திகள்

மனிதநேய பரிசு!

ஆக., 13 - உலக உடலுறுப்பு தான தினம்உடலுறுப்பு தானம் என்பது, உயிரை இழந்த பின்னரும், பலருக்கு புதிய வாழ்க்கையை அளிக்கும், அற்புதமான மனிதநேயப் பரிசாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13 அன்று, 'உலக உடலுறுப்பு தான தினம்' அனுசரிக்கப்படுகிறது. உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைப்பதும், மரணத்திற்குப் பிறகு, உறுப்புகளை தானமாக வழங்க முன்வர ஊக்குவிப்பதும், இந்த நாளின் முக்கிய குறிக்கோள். தானம் தரும் ஒருவரது உறுப்புகள், பலரின் உயிரைக் காப்பாற்றும் என்பதால், மனிதநேயத்தின் உயர்ந்த செயலாக, இது கருதப்படுகிறது. உடலுறுப்பு தானம் என்பது, உயிருடன் இருக்கும் போதோ அல்லது மூளைச்சாவுக்குப் பிறகோ, மருத்துவ விதிமுறைகளின்படி உடலுறுப்புகளை, மற்றொரு நோயாளிக்கு மாற்றுவதைக் குறிக்கிறது. சிறுநீரகம், கல்லீரல், இதயம், நுரையீரல், கணையம் மற்றும் குடல் போன்ற உறுப்புகளும், கண் விழித்திரை, தோல், எலும்பு போன்ற திசுக்களும், தானமாக வழங்கப்படுகின்றன. உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் ஆண்டுதோறும் நடைபெறும், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை, தேவை உள்ளவர்களின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே பூர்த்தி செய்கிறது. உலகம் முழுவதும், லட்சக்கணக்கானோர் உறுப்புக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். இந்தியாவில், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தின் தகவல்படி, ஆண்டுதோறும், 1.8 லட்சம் பேருக்கு சிறுநீரகம், 30 ஆயிரம் பேருக்கு கல்லீரல், 50 ஆயிரம் பேருக்கு இதயம் தேவைப்படுகிறது. ஆனால், நடைபெறும் மாற்று அறுவை சிகிச்சைகள், இந்தத் தேவையை விட மிகவும் குறைவாக உள்ளன. நம் நாட்டில், ஒருவரது மறைவுக்கு பிந்தைய உடலுறுப்பு தான விகிதம், 10 லட்சம் பேரில், 0.6 முதல் 0.8 சதவீதம் என்ற அளவிலேயே, தானம் தருபவர்களின் எண்ணிக்கை உள்ளது. இது, ஸ்பெயின் போன்ற முன்னணி நாடுகளின் விகிதத்தை விட, மிகவும் குறைவு. தமிழகத்தில், தமிழ்நாடு உடலுறுப்பு மாற்று ஆணையம் மூலம், உடலுறுப்பு தானம் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதேபோல், நாட்டிலேயே, இறப்புக்கு பிந்தைய உடலுறுப்பு தானத்தில், தொடர்ந்து முன்னணியில் உள்ள மாநிலங்களில், தமிழகமும் ஒன்று. இறப்பிற்கு பிறகும் வாழ்வை பரிசளிப்போம்! மு.ஆதித்யா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !