உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

சமூக வலைதள காதல் வேண்டாமே!எனக்கு தெரிந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த, 20 வயது இளைஞன், தனியார் கல்லுாரியில் படிக்கிறான்.வெளி மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் முகநுால் வலைதளத்தில், அறிமுகமாகி, நட்பாகப் பழகியுள்ளான். அவள், அவனை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளாள்.ஒருமுறை நேரில் சந்தித்து பேசிய போது, அவள் அப்பாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய அவசரமாக பணம் தேவை எனக் கூறியிருக்கிறாள். அவளின் பேச்சில் மயங்கிய அவன், பெற்றோருக்கு தெரியாமல், வீட்டில் இருந்த 15 பவுன் நகை மற்றும் 80 ஆயிரம் ரூபாயையும் அவளிடம், கொடுத்திருக்கிறான், பின்னர், சில நாட்களில், அவன் தொடர்பை துண்டித்து விட்டிருக்கிறாள், அவள்.வீட்டில் நகையும், பணமும் காணாமல் போனதை பெற்றோர் கண்டறிந்து விசாரித்தபோது, உண்மையை ஒப்புக்கொண்டான், இளைஞன். இப்போது, போலீசில் புகார் கொடுத்து, அவளை தேடி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் அறிமுகமாகும் நபர்களை, முழுமையாக நம்புவது ஆபத்து. பின்னணியை சரிபார்க்காமல், உணர்ச்சி வசப்பட்டு பணமோ, பொருளோ கொடுப்பது, மோசடிக்கு வழிவகுக்கும்.அதனால், சமூக வலைதள காதலில் விழும் இளைய சமுதாயத்தினர், விழிப்புடன் இருக்க வேண்டும்; உஷாராக எதையும் பெற்றோருடன் பகிர்ந்தே, முடிவெடுக்க வேண்டும்.- வ. முருகன், விழுப்புரம்.டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை... உஷார் !பேருந்தில், நானும், நண்பரும் பயணித்துக் கொண்டிருந்தோம். எனக்கு முன் இருந்த இளைஞர்களிடம், டிக்கெட் கொடுக்க வந்த கண்டக்டர், என்னிடம், 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை வசதி இல்லப்பா. பணமா கொடுங்க. இல்லேன்னா அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக்குங்க...' என்று கூறினார்.அதில் ஒருவன், என் நண்பரிடம், 'சார், 30 ரூபாய் கொடுங்க. உங்கள், மொபைல் நம்பருக்கு, ஜி.பே.,யில அனுப்பிடுறேன்...' என்று கேட்டான்.'முப்பது ரூபாய் சில்லரை இல்லப்பா. 100 ரூபாய் தான் இருக்கு...' என்றார், நண்பர்.'பரவாயில்ல குடுங்க சார்...' என்று வாங்கி கொண்டான்.பின்னர், 'சாரி சார், 100 ரூபாய்க்கு பதிலா, அவசரத்தில், ஆயிரம் ரூபாயை, உங்கள் ஜி.பே. கணக்குக்கு அனுப்பிட்டேன்...' என்றான்.நண்பர் தன் மொபைல் போனை பார்த்து, 'ஆமாம்பா, ஆயிரம் ரூபாய் வந்திருக்கு. பார்த்து அனுப்பக் கூடாதா?' என்றார்.'ஒரு சின்ன ஹெல்ப் சார், என் நண்பனின் வங்கி 'அக்கவுன்ட்' நம்பர் தரேன். மீதிப் பணத்தை, 'நெட் பேங்கிங்'ல அவன், 'அக்கவுன்ட்' நம்பருக்கு அனுப்பிடுங்க சார்...' என்றான்.எனக்கு ஏதோ நெருட, நண்பரிடம், 'இவங்க ஏமாற்று பேர்வழிகளா, நல்லவங்களான்னு தெரியாது. ஆனால், இந்த, 'நெட் பேங்கிங்' வேலை எல்லாம் பண்ணாதே...' என்று மெதுவாக சொல்லி, என்னிடமிருந்த பணத்தை தந்து, 'அவர்களுக்கு கொடுத்து விடு...' என்றேன்.அந்தப் பணத்தை தயங்கிக் கொண்டே வாங்கியவன், என்னை முறைத்து கொண்டே அடுத்த ஸ்டாப்பில் நண்பனுடன் இறங்கினான்.அவர்கள் ஏதோ ஏமாற்ற முயற்சி செய்தது என் நண்பருக்கு அப்போது தான் புரிந்தது. 'நல்ல வேளை, நீ உஷார்ப்படுத்தியதால் தப்பிச்சேன்...' என்றார், நண்பர்.தயவு செய்து முன் பின் தெரியாதவர்கள், 'ஆன்-லைனில்' 'நெட் பேங்கிங்'ல பணம் அனுப்ப சொன்னால், தவிர்த்து விடுங்கள், வாசகர்களே!பூவை சுபவாணன், கோயம்புத்துார்.ஓய்வூதியதாரர் குழுவினரின் உறுதிமொழி!உறவினர் ஒருவர், அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுபவராக இருக்கிறார்.சமீபத்தில், எங்கோ சென்று திரும்பிய அவரிடம், 'எங்கே சென்று வருகிறீர்கள்? ஏதாவது தேவை என்றால், என்னிடம் சொல்லியிருக்கலாமே?' என்றேன்.அதற்கு, 'வரும் புத்தாண்டில் இருந்து, எங்கள் ஓய்வூதியதாரர்கள் குழு, பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்ய முடிவு செய்துள்ளோம். அதில் ஒரு பகுதியாக, இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஆலோசனைகள், மாணவர்களுக்கு கல்வி உதவி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளை மேற்கொள்ள இருக்கிறோம்.'இதற்காக, அவரவர் ஓய்வூதிய தொகையில் இருந்து, குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். அதற்கான ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளத்தான் சென்று வருகிறேன்...' என்றார், அவர்.அதைக்கேட்டு வியந்த நான், மக்கள் நலனுக்காக பாடுபட உறுதியேற்றுள்ள, அந்த ஓய்வூதியதாரர் குழுவை, மனதார பாராட்டினேன்.- ஆர்.ஜெயசங்கரன், விழுப்புரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !