உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்!

உறவுகளை பேணிக் காப்போம்!எ ன் வீட்டுக்கு எதிரே வசிக்கும் என் உறவினருடன் முன்பு சுமூகமான உறவு இருந்தது. தினமும் சின்னச் சின்ன விஷயங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தோம். ஆனால், ஒருநாள், அவர் வீட்டின் முன் என் வாகனத்தை நிறுத்தியது தொடர்பாக பெரிய மனக்கசப்பு ஏற்பட்டது. தவறு எங்கே இருந்தாலும், 'நான், ஏன் முதலில் பேசணும்?' என்ற அகங்காரம், எங்கள் இரு குடும்பத்தினரையும் பிரித்து வைத்தது. நாட்கள் கடந்து போனாலும், அந்த மனக்கசப்பு இருக்கவே செய்தது. ஆனால், அது மனதை எவ்வளவு சோர்வடைய செய்கிறது என்பதையும் உணர்ந்தேன்.ஒருநாள், எதிர்வீட்டில் இருந்த அந்த உறவுக்காரருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் அது. என்னிடம் உதவி கேட்க, எந்த தயக்கமும் இல்லாமல் ஓடிச் சென்று உதவினேன். அந்த நிமிடமே மனதில் இருந்த கசப்பு எல்லாம் ஓடி மறைந்தது.என் கையை பிடித்து, 'சரியான சமயத்தில், நீ உதவியதால் தான் நான் உயிர் பிழைச்சேன்...' என்று சொன்ன அந்த நொடியில், எல்லா பகையும் கரைந்து விட்டது. நாங்கள் பழையபடி நெருக்கமாகி போனோம்.அந்த அனுபவம் எனக்கு ஒரு பெரிய உண்மையை உணர்த்தியது. வாழ்க்கை மிகவும் குறுகியது. அதில், பகையை வைத்துக் கொள்வது சரியல்ல. முன்பு நடந்த சண்டையை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஆனால், அது எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் மிகப்பெரியது. உறவுகளை போற்றிப் பாதுகாப்பது தான் உண்மையான பெருமை; அதுவே வாழ்க்கையை இனிமையாக்கும் என்பது புரிந்தது.- பே.ராமலட்சுமி, ராஜபாளையம்.தன் தகுதி அறிந்து...நண்பரின் மகன், பிளஸ்2 தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றிருந்தார். நண்பர் ஓரளவு வசதி படைத்தவர். அதனால், பணம் கொடுத்தாவது மகனை பொறியியல் கல்லுாரியில் சேர்த்து படிக்க வைக்க விரும்பினார். ஆனால், நண்பரது மகனோ, 'எனக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லை. 'டூ-வீலர் மெக்கானிக்' ஆவது தான் என் ஆசை...' என்றான், உறுதியாக. நண்பருக்கு இதில் விருப்பம் இல்லையென்றாலும், மகனது உறுதியான முடிவால், அவருக்கு தெரிந்த, 'டூ-வீலர் ஒர்க்ஷாப்'பில் சேர்த்து விட்டார்.இரண்டே ஆண்டுகளில் அனைத்து, 'டூ-வீலர் மெக்கானிசத்தை'யும் கற்றுக்கொண்ட நண்பரது மகன், வங்கியில் கடன் பெற்று, சொந்தமாக, 'டூ-வீலர் ஒர்க்ஷாப்' துவங்கினான். அவனது தொழில் திறமையால், மிக விரைவாக முன்னேறி, இன்று அவனது, 'ஒர்க்ஷாப்'பில் மேலும், இரண்டு இளைஞர்களுக்கு வேலை கொடுத்துள்ளான்.இன்று மாதம் ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறான், நண்பரின் மகன். முதலில் தன் மகன், 'மெக்கானிக்' ஆக இருக்கிறானே என வருந்திய நண்பர், இரண்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து, முதலாளியாக முன்னேற்றம் அடைந்ததையும், லட்ச ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பதையும் கண்டு பெருமைப்படுகிறார்.தனக்கு படிப்பு வரவில்லை என்று, தெரிந்தும் சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து, வாழ்க்கையில் வெற்றி பெற்ற நண்பரது மகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.க.சரவணகுமார், திருநெல்வேலி.கோவில் நிர்வாகத்தினரின் சிறப்பான நடைமுறை!அண்மையில், பூர்வீக கிராமத்திலுள்ள குலதெய்வ கோவிலுக்கு, குடும்பத்துடன் சென்றிருந்தேன். அப்போது, கிராம முக்கியஸ்தர்கள், உண்டியலை திறந்து காணிக்கை பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.கோவில் அருகே ஆட்டுக் குட்டிகளும், சில ஆட்டு வியாபாரிகளும் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தேன்.அதுபற்றி உள்ளூர் உறவினரிடம் விசாரித்தேன். அவர் கூறியது... கோவிலின் உண்டியல் நிரம்பியதும், உண்டியல் பணத்தில் ஆட்டு வியாபாரிகளிடமிருந்து, ஆட்டுக் குட்டிகளை வாங்கி, அவற்றை வளர்க்க விரும்பும் கிராம மக்களிடம் ஒப்படைப்பர்.அவை வளர்ந்து, குட்டிகளை ஈன்ற பிறகு, பெரிய ஆடுகளை விற்றுக் கிடைக்கும் வருமானத்தை, கோவிலின் தினசரி பூஜைகள், திருவிழா செலவுகள் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.நன்கொடை கேட்டு மக்களை சிரமப்படுத்தாமல், காணிக்கையை வருமானமாக மாற்றும் இந்த சிறந்த நடைமுறை, என்னை மிகவும் கவர்ந்தது.தன்னிறைவு, பொறுப்புணர்வு, தொலைநோக்கு சிந்தனை ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும், அந்தக் கோவில் நிர்வாகத்தினரை, மனதாரப் பாராட்டி வந்தேன்.-எஸ்.அலமேலு, கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !