உள்ளூர் செய்திகள்

காலத்தின் கணக்குப் புத்தகம்!

காலண்டர் என்பது வரப்போகும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லும், 'போஸ்ட் டேடட் டைரி!' இந்த விஷயத்தில், நம் பஞ்சாங்கத்தை விஞ்சிய எதிர்கால டைரி எதுவுமே கிடையாது. என்றைக்கு எந்த நேரத்தில் அமாவாசை, பவுர்ணமி, கிரகணங்கள் மற்றும் கிரக மாற்றங்கள் நிகழும், எந்தத் தேதியிலிருந்து கோடை, எப்போதிலிருந்து மழை, உலகின் எந்தப் பகுதியில் பெருமழை, புயல், பூகம்பம் என்று இயற்கை சீற்றம் நிகழும், எந்தவகை நோய் எங்கெல்லாம் பரவும் என்பன போன்ற, வெகு துல்லியமாக கணிக்கப்பெற்ற பல தகவல்களை முன்கூட்டியே அறிவிக்கிறது, நம் பஞ்சாங்கம். இதில் வியப்பு என்னவென்றால், இந்தத் தகவல்கள், எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எதிர்கால கிரக சஞ்சாரம் இப்படித்தான் அமையும். அப்படி அமையும் போது, பலன்களும் இப்படித்தான் இருக்கும் என்று கூறும், கச்சிதமான வான சாஸ்திரக் கணக்கியல் அது. இந்த ஞான பொக்கிஷத்திலிருந்து, அந்தந்த ஆண்டுக்காக, தனித்தனியே பிரித்தெடுத்து, தொகுத்து, அச்சிட்டு பஞ்சாங்கமாக கொடுக்கின்றனர். தமிழ் சம்பிரதாயப்படி, மொத்தம் 60 தமிழ் ஆண்டுகள். ஆனால், ஒவ்வொரு ஆண்டுக்கும் சமஸ்கிருதப் பெயர் சூட்டியுள்ளனர். கும்பகோணத்துக்கு அருகிலுள்ள, சுவாமி மலையில், இறைவனுக்கே தத்துவம் போதித்த முருகப் பெருமானை தரிசிக்க, 60 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்தப் படிகள், ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டின் பெயர்களை எழுதி வைத்திருக்கின்றனர். முற்றிலும் தமிழ் கொள்கை என்ற நோக்கில், திருவள்ளுவர் ஆண்டு என்றும், இப்போது புழக்கத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ் ஆண்டுகளை போல, 60 ஆண்டுகளுக்கு பிறகு, சுழற்சியாக மீண்டும் ஆரம்பிக்காது. கி.மு., 31ம் ஆண்டிலிருந்து, அந்த காலகட்டத்தில் தான், திருவள்ளுவர் பிறந்தார் என்ற அனுமானத்தில், திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடப்படுகிறது. அதாவது, இப்போதைய ஆங்கில ஆண்டு, 2025 என்பது, 2056ம் திருவள்ளுவர் ஆண்டாகும். 2056 திருவள்ளுவர் ஆண்டு என்றாலும், 2025 காலண்டரில் உள்ள தேதி, கிழமை எல்லாம் அப்படியே பின்பற்றப்படுகின்றன. ரோமாபுரி நாட்டில், ஒரு வழக்கம் இருந்தது. ராஜ ஜோதிடர்கள் கணித்துக் கொடுப்பதை வைத்து, ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று, அரசாங்க ஊழியர் ஒருவர் ஒவ்வொரு தெருவாக சென்று, அன்று மாதப் பிறப்பு என்று, குரலெடுத்து அறிவிப்பார். குறிப்பிட்ட மாதத்துக்கு பெயர் கிடையாது. தோராயமாக, 30 இரவுகள், 30 பகல்கள் கடந்த பிறகு, அடுத்த நாள், மாதத்தின் ஆரம்பம் என்று தெரிவிக்கும் பழக்கம் இருந்தது. இவ்வாறு அறிவிப்பதை, 'கனோர்' என்றனர். அதுவே, 'காலண்டர்' என்ற பெயருக்கு காரணமானது. தன்னிச்சையாக இரவும், பகலும் மாறி மாறி வந்து கொண்டிருந்தாலும், நடைமுறை பழக்கத்துக்கு காலண்டரை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. அதில், பல சிக்கல்களும், கருத்து வேறுபாடுகளும் எழுந்தன. இப்போது, இரண்டாம் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் பிப்ரவரி மாதம், கி.மு., 713 ரோமானிய காலண்டர்படி, 12வது மாதமாக இருந்தது. இப்படி ஒரு மாதத்தை உருவாக்கியவர், நியூமா என்ற ரோமானியப் பேரரசர். அவருக்கு அடுத்து வந்தவர்கள், ஆளாளுக்கு ஏதேதோ கணக்குப் போட்டு, பிப்ரவரியை இரண்டாவது மாதமாக்கி அதற்கு, 28 நாட்களே கொடுத்தனர். ஏற்கனவே ஜனவரி, மார்ச், மே, ஜூலை, ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு, தலா 31 நாட்களும், ஏப்ரல், ஜூன், செப்டம்பர், நவம்பருக்கு தலா, 30 நாட்களும் ஒதுக்கிய பிறகு, மிச்சம் 28 நாட்கள் தான் இருந்தன. அதை, அப்படியே துாக்கி பிப்ரவரிக்கு கொடுத்து விட்டனர். ஆனால், துல்லியமான கணக்குப்படி ஒரு ஆண்டுக்கு, 365.25 நாட்கள். இந்த, கால் நாளை எப்படி கணக்கில் எடுத்துக்கொள்வது? வெறும், 28 நாட்கள் மட்டுமே பெற்று வருந்திக் கொண்டிருந்த பிப்ரவரிக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஒரு நாளை அதிகரித்து, 29 நாளாக மாற்றினர். கடந்த, 1752ம் ஆண்டில், வருடத்திய ரோமாபுரி மன்னனின் ஆணைப்படி, செப்டம்பர் மாதத்துக்கு, 19 நாட்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. இதே ஆண்டில் தான் இங்கிலாந்து நாடு, ரோமன் - ஜூலியன் காலண்டர் முறையிலிருந்து , கிரிகோரியன் முறைக்கு மாறியது. ஆனால் , ஜூலியன் காலண்டரிலோ, கிரிகோரியனை விட, 11 நாட்கள் அதிகம் இருந்தன. ஆகவே, இங்கிலாந்து மன்னர் ஒரு கணக்கு போட்டார். ஜூலியனில் செப்டம்பருக்கு, 19 நாட்கள் என்றிருந்ததை கிரிகோரியனில், 30 நாட்கள் என்று மாற்றினார். பொதுவாக ஒட்டுமொத்தக் கணக்கு, 365.25 ஆக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். இன்னொரு தமாஷ்: ரோமன் - ஜூலியன் காலண்டரில் முதல் மாதமாக ஏப்ரல் தான் இருந்தது. ஆனால், கிரிகோரியன் காலண்டர் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு, அதாவது, ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள வரிசையை அநேக பழமைவாதிகள் ஏற்றுக்கொள்ளவே இல்லை. அவர்கள் தம் பழமை வழக்கப்படி ஏப்ரல் முதல் தேதியே, ஆண்டு பிறப்பு என்று கொண்டாடினர். இந்தப் பழமைவாதத்தை ஒழிப்பதற்காக, இங்கிலாந்து மன்னர் எவ்வளவோ முயற்சித்தும் பயனில்லை. முடிவாக, அந்தப் பழமைவாதிகளை அவமானப்படுத்தும் விதமாக ஓர் அறிவிப்பு செய்தார்... 'ஜனவரி தான் வருடத்தின் முதல் மாதம்; இதை ஏற்றுக்கொள்ளாமல் ஏப்ரலை முதல் மாதமாக கொண்டாடுபவர்கள் எல்லாரும் முட்டாள்கள்...' என்றார். இதற்கு பின் தான், இந்த பழமைவாதிகளை இழிவுப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 1ம் தேதியை, 'முட்டாள்கள் தினம்' என, அறிவித்தனர். பிரபு சங்கர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !