கவிதைச்சோலை: சபதம் எடுப்போம்!
வள்ளுவன் தந்த திருக்குறளின் தெள்ளிய உண்மைகளை தேர்ந்து நடப்போம்! எல்லா வளங்களும் கொண்ட ஞான பூமி இது... முன்னோர் காட்டிய வழிமுறைகளை ஊரறிய உணர்த்த உறுதியெடுப்போம்! உலகத்தில் போர் பயம் நீங்கவும் மக்கள் உள்ளத்தில் அன்பு ஓங்கவும் மதவெறி ஆதிக்க வெறி அனைத்தும் தரணியில் பொசுங்க செய்வோம்! அச்சமும் கோழைத்தனமும் அழிய கொள்கைகள் சோர்வு அடையாமல் கருத்தாய் அடைக்காப்போம்! அடிமைத்தனத்தை விட்டோம் அன்பை மறந்து கெட்டோம் மடமையை வென்றோம் - ஆனால் மமதை நிறைந்து நின்றோம்! கொடுமைகளை எதிர்த்தோம் கொள்கைகளை உதிர்த்தோம் பதவிகளை ஏசியபடியே அதன்மீது ஆசை வைத்தோம்! நரையும் திரையும் அணுகுவதற்குள் மூடப்பழக்கங்களுக்கு வைப்போம் முற்றுப்புள்ளி... அத்தனை தடைகளையும் உடைத்து பூமி பிளந்து வர காலமும் காத்திருக்கிறது! ஞானமும் கல்வியும் சிறந்திட இயற்கை வளம் பல இருக்க தொழில் பல பெருக திறமைகளை வளர்த்திடுவோம்! கூழைக்கும்பிடு போடாது கொச்சை வெற்றிகளை நாடாது கள்ளத்தனமும் பொய்யும் அழிந்திட கருணை எனும் நறுமணம் கமழ்ந்திட இன்பமாய் யாவரும் வாழ்ந்திடலாம்! பூமி நமக்கான மைதானம் போராடிக் கொண்டே இருப்போம் ஜெயிக்கும் வரை மட்டுமல்ல ஜெயித்த பிறகும் வாழ வேண்டியவர்கள் நாம்! - செல்வி நடேசன், சென்னை. sel.dharam@gmail.com