கவிதைச்சோலை: அன்பால் ஆசீர்வதிக்கப்படும்!
மார்ச் 8 - மகளிர் தினம்பெண்ணின் பெருமை உயரும் நாட்டில் சமூகத்தின் மாண்பும் இமயமென ஓங்கும்! பெண்ணின் மகிழ்வு பெருகும் நாட்டில் அனைவரின் புன்னகையும் கடலலையாய் அதிகரிக்கும்! பெண்ணின் மரியாதை தழைக்கும் நாட்டில் சேவைகளின் எண்ணிக்கை தினந்தோறும் கூடும்! பெண்ணின் திறமை வளரும் நாட்டில் நவீனத்தின் வருகை உச்சத்தை தொடும்! பெண்ணின் பாதுகாப்பு காக்கப்படும் நாட்டில் குற்றங்களின் சுவடுகள் துடைத்து எறியப்படும்! பெண்ணின் அறிவு ஒளிவீசும் நாட்டில் அர்த்தமற்ற மூடத்தனங்கள் இல்லாமல் போகும்! பெண்ணின் கல்வி பொலிவுறும் நாட்டில் திடமான சிந்தனைகள் அடுக்கடுக்காய் பிறந்திடும்! பெண்ணின் உரிமைகள் வழங்கப்படும் நாட்டில் தடையற்ற நற்பணிகள் தொடர்ச்சியாய் நடந்திடும்! பெண்ணின் ஆலோசனைகள் ஏற்கப்படும் நாட்டில் புத்துலகின் வாசல்கள் விரைவாய் திறக்கப்படும்! பெண்ணின் தேவைகள் பூர்த்தியாகும் நாட்டில் உலகத்தின் உயிர்களெல்லாம் அன்பால் ஆசீர்வதிக்கப்படும்! - எஸ்.வி.ராஜசேகரன், மதுரை. தொடர்புக்கு: 98651 07396