தீபாராதனா! (13)
முன்கதைச் சுருக்கம்: 'தீ பா ஷிப்பிங்' கம்பெனியில் பணிபுரியும் யாரோ ஒருவன் தான், தன் அம்மா மீது, 'ஆசிட்' வீசியதாக, ஆராதனா சொன்னதை பற்றி, கம்பெனி ஜி.எம்., முத்துராமனிடம் விசாரித்தாள், தீபா. 'அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தனக்கோ, கம்பெனி வக்கீலுக்கோ தெரியாது. இதில், ஏதோ குழப்பம் உள்ளது...' என்று கூறினார், முத்துராமன். அடுக்கடுக்கான பிரச்னையில், மன உளைச்சலுக்கு ஆளான, தீபா, 'ரிலாக்ஸ்' செய்து கொள்வதற்காக, காதலன் திலகனுடன், சினிமாவுக்கு சென்றாள். தியேட்டரில் படம் பார்த்து கொண்டு இருக்கும்போது, தீபா வீட்டு பணியாள், அவள் அம்மா, மஞ்சுளா மயங்கி கீழே விழுந்து விட்டதாக தகவல் தெரிவிக்க, பதறியபடி வீடு திரும்பினாள்.அம்மாவை மருத்துவமனையில் சேர்க்க, மூளையில் கோளாறு இருப்பதாகவும், உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சொல்லி, தீபாவிடம் சில பேப்பர்களில் கையெழுத்து வாங்கி, உடனே, இரண்டு லட்சம் ரூபாய் பணம் கட்டும்படி கூறினார், டாக்டர். 'மூளை அறுவை சிகிச்சைக்கு, குறைந்தது, 15 லட்சம் ரூபாய் செலவாகும். தயார் செய்துடுங்க...' என்று, மூத்த செவிலி கூற, மயங்கி விழுந்தாள், தீபா. மெல்லக் கண் திறந்தாள், தீபா. மருத்துவமனையில் ஒரு கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். அருகில் அமர்ந்திருந்தார், குடும்ப டாக்டர் நஞ்சுண்டன். ''நீயும் ரொம்ப, 'வீக்'காயிருக்க. அதான், 'டிரிப்ஸ்' போடச் சொல்லியிருக்கேன்.'' தன் இடது கையில் நரம்பு வழியே, ஐ.வி., திரவம் செலுத்தப்படுவதை கவனித்தாள், தீபா. ''டாக்டர், அம்மாவை சரிபண்ண, 15 லட்ச ரூபாயா செலவாகும்?'' என்றாள். நினைவு திரும்பியதும், அவளுடைய முதல் கேள்வி இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை, டாக்டர். ''யாரும்மா சொன்னது?'' என்றார். ''அவங்கதான்,'' என, அந்த மூத்த செவிலியை காட்டினாள், தீபா. கோபமாக எழுந்தவர், ''இங்க வாம்மா. இந்த நாற்காலில நீயே உட்காரு. நீதானே, 'சீனியர் டாக்டர்!' என்று தன் நாற்காலியைக் காட்டி, அந்த செவிலியிடம் இரைந்தார், டாக்டர் நஞ்சுண்டன். செவிலிக்கு அச்சத்தில் உடல் நடுங்கியது. கண்கள் தாமாக நனைந்தன. ''இல்லை, டாக்டர். நான் சாதாரணமாத்தான்...'' என்று ஏதோ சொல்ல முனைந்து, டாக்டர் முறைத்ததும், சட்டென்று வெளியேறி விட்டாள், செவிலி. மீண்டும், தீபாவின் அருகில் அமர்ந்தார், டாக்டர் நஞ்சுண்டன். ''தீபா, செலவு பற்றி மனசுல போட்டுக் குழப்பிக்காத. உனக்குத் தெரியும், தமிழ்நாட்டுலயே, இதுதான், 'நம்பர் ஒன் ஹாஸ்பிட்டல்' இங்க வர அத்தனை டாக்டரும் அவங்கவங்க துறையில, 'டாப்'ல இருக்கறவங்க. செலவுக்கு பயந்து, வேற இடத்துக்குப் போயிருந்தா, உங்கம்மா இந்நேரம் கோமாவுல போயிருப்பாங்க,'' என்றார். ''டாக்டர், நீங்க என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லல...'' ''மூளை வீங்கி, மண்டையோட்டுக்குள்ள முட்டிட்டு இருக்கும் போது அதை மொதல்ல கவனிக்கறதுதாம்மா முக்கியம். மண்டையோட்டுல ஒரு சின்ன சதுரத்தை வெட்டி எடுத்து மூளை காயப்படாம தடுத்திருக்கோம். எந்த, 'இன்பெக்ஷனும்' வரக்கூடாதுன்னா, அம்மா ஐ.சி.யூ.,ல இருக்கணும். மருந்து கொடுத்து, மூளை வீக்கத்தை குறைச்சு, நார்மலாக்கணும். ''அப்புறம், வெட்டி எடுத்த போர்ஷனை, மண்டையோட்டுல அதே இடத்துல வெச்சு பொருத்தணும். எல்லாமே, 'எக்ஸ்பர்ட்ஸ்' செய்ய வேண்டிய வேலை. செலவு கொஞ்சம் கூடுதலாத்தான் ஆகும். நீ ஏன் கவலைப்படறே? 'இன்ஷ்யூரன்ஸ்'ல கவர் ஆயிடும்,'' என்றார். அப்படியே கட்டிலில் எழுந்து அமர்ந்தாள், தீபா. ''இன்ஷ்யூரன்ஸ் இல்லேன்னா?'' ''என்னம்மா சொல்றே?'' ''எனக்கும், அம்மாவுக்கும் வழக்கமா கம்பெனி எடுக்கற, 'மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ்' இந்த வருஷம் எடுக்கலையாம்.'' டாக்டர் சற்று நேரம் அமைதியாக இருந்தார். தீபாவின் தோளில் தட்டிக் கொடுத்தார். ''என்னால முடிஞ்ச அளவுக்கு, 'பில்' தொகையை குறைக்கப் பார்க்கறேம்மா,'' என்று சொல்லி எழுந்தவர், ''ஒரு மணி நேரம், 'ரெஸ்ட்' எடுத்திட்டு, நீ வீட்டுக்குப் போகலாம்,'' என்றார், டாக்டர். மெல்லக் கட்டிலில் சாய்ந்து கொண்டாள், தீபா. அவ்வளவு பெரிய தொகையை எப்படி ஏற்பாடு செய்வது? மிரண்டாள், தீபா. பெ சன்ட் நகரில் இருந்த அந்த பிரபலமான உணவு விடுதிக்குள் நுழைந்தாள், ஆராதனா. அங்கொரு மேஜைக்கு பின், உட்கார்ந்திருந்தவன் கையாட்டி அவள் கவனத்தை ஈர்த்தான். ''சாரி, ரெண்டு நிமிஷம், 'லேட்'. 'ரிப்போர்ட்' கொண்டு வந்திருக்கியா, யுவா?'' என்று கேட்டவாறு அவன் எதிரில் அமர்ந்தாள், ஆராதனா. யுவா என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட, யுவராஜ் தன் ஆரோக்கிய பற்கள் மின்னிட அகலமாகப் புன்னகைத்தான். ''ஒரு ஹலோ கிடையாது. நல்லா இருக்கியான்னு விசாரிப்பு கிடையாது. நேரா, 'ரிப்போர்ட்' பற்றித்தான் பேசுவியா, ஆரூ?'' ''சாரி, நீ போன் செய்து முக்கியமான விஷயம், நேரே வான்னு சொன்னதும், ஒரு 'எக்ஸைட்மென்ட்!' சொல்லு, நல்லா இருக்கியா?'' என்று சொல்லி, புன்னகைத்தாள், ஆராதனா. ''நல்லா இருக்கேன். அம்மா, வருண்லாம் சவுக்கியமா? தீபா வந்துட்டுப் போனதும், அம்மா கொஞ்சம் ஆடிப்போயிருந்தாங்கன்னு சொன்னியே, ஆரூ!'' ''ஒரு நாள் அந்த அதிர்வு இருந்தது. இப்ப ரெண்டு வாரத்துக்கு மேல ஆச்சே! நார்மலுக்கு வந்துட்டாங்க, யுவா.'' அடுத்த சில வாக்கியங்கள் பொதுவான விசாரிப்பில் கடந்தன. எம்.பி.ஏ., முடித்து பி.ஹெச்.டி. செய்தபோது, பெங்களூருவில், யுவராஜுடன், ஆராதனாவுக்கு பரிச்சயமானது. மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற பின், சில மாதங்கள் அவனுடனும் பணியாற்ற நேர்ந்தது. அப்போது ஏற்பட்ட நட்பு. எந்தத் தலைப்பிலும், அவனுடன் சண்டையின்றி ஆரோக்கியமாக கருத்து பரிமாற்றம் செய்ய முடிந்தது. அவளுடைய திறமையை முற்றிலும் மதிக்கும் பக்குவம் மிகுந்த அவனுடைய அணுகுமுறை அந்த நட்பை இறுகச் செய்திருந்தது. ஆராதனாவை பார்த்ததும், அவன் கண்கள் பிரகாசமாவதும், அவனைப் பார்த்ததும், அவள் கண்களில் மின்னல் தோன்றுவதையும் இருவரும் பரஸ்பரம் கவனிக்காமல் இல்லை. ஆனால், இருவருமே தாங்களாகவே ஓர் எல்லைக்கோடு போட்டு, அதைவிட்டு வெளியே அடியெடுத்து வைக்க தயங்கி கொண்டிருந்தனர். சென்னைக்கு, யுவராஜ் இடம் பெயர்ந்து, 'பைனாக்குலர்ஸ்' என்ற தனியார் துப்பறியும் நிறுவனம் துவங்கியதும், தன் நிறுவனம் சார்ந்த பல பணிகளை அவனிடம், ஆராதனா ஒப்படைப்பதும் வாடிக்கையானது. ''தீபா ஷிப்பிங் கம்பெனி பத்தி, 16 விஷயம் கேட்டிருந்தியாமே,'' என்று ஆரம்பித்தான், யுவராஜ். தொடர்ந்து, ''உனக்கு இது இவ்ளோ முக்கியம்ன்னு தெரிஞ்சிருந்தா, நானே களத்துல இறங்கியிருப்பேன். ராகேஷ் நெறைய தகவல் திரட்டியிருக்கான். 12 கேள்விக்கு எல்லா விபரமும் இதுல இருக்கு. மிச்ச நாலுக்கு விபரம் கிடைக்க கொஞ்சம் நேரம் பிடிக்கும்,'' என்று அவன் நீட்டிய, கோப்பை வாங்கிப் புரட்டினாள், ஆராதனா. ''அப்புறம் வீட்டுல போய் நிதானமாப் பாரு. இப்ப என்கூட ரெண்டு வார்த்தை பேசலாமில்ல?'' என்றான், யுவா. ''பில்லு என் பேர்ல போடச் சொன்னேன்.'' ''ஏய், இப்ப அதுக்காகவா, உன்னை வரச் சொன்னேன்? அவங்க கம்பெனி தொடர்பில்லாம, தீபா பத்தி ஒரு விஷயம் உன்கிட்ட சொல்லணும்.'' குறுக்கிட்ட விடுதி ஊழியரிடம் உணவுக்கான தேர்வுகளை குறிப்பிட்டு, யுவராஜ் தொடர்ந்தான்... ''ஞானசேகரனோட மனைவி, இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க. 'பெராலிடிக் ஸ்ட்ரோக்' போலத் தெரியுது.'' அதிர்ந்து நிமிர்ந்தாள், ஆராதனா. ''ஐயையோ! ஏற்கெனவே மனசளவுல அடிபட்டிருக்கா ங்க. இது வேறயா? எந்த ஹாஸ்பிட்டல்?'' எ ழும்பூரில் இருந்தது அந்த நிறுவனம். அசையும் மற் றும் அசையாச் சொத்துகளின் பேரில் கடன் கொடுக்கும் நிறுவனம். இணையத்தில் தேடியறிந்து, அங்கே வந்திருந்தாள், தீபா. ஏதோ முக்கியமான வேலை இ ருக்கிறது என்று நழுவி விட்டான், திலகன். இருக்கைகளில் நகைக்கடன் வாங்கும் மக்கள் நிறைய பேர் காத்திருந்தனர். வரிசையில் உட்கார விருப்பமில்லாமல், செயலர் என்று குறிப்பிடப்பட்ட அறைக்கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள், தீபா. மேஜைக்குப் பின்னால் அமர்ந்திருந்த மனிதருக்கு, 50 வயது இருக்கலாம். தலைமுடிக்கு சாயம் பூசுபவர் என்று முகத்தோலில் இறங்கியிருந்த வண்ணம் சொன்னது. மீசையும் சாயத்தால் அடர்கருமையாக இருந்தது. அகல நெற்றி சுருங்க, ''யெஸ்?'' என்றார், ஏதோ காகிதத்தில் கையொப்பமிட்டபடி. தன்னை அறிமுகம் செய்து கொண்டாள், தீபா. கொண்டு வந்திருந்த ஆவணங்களை அவர் மேஜையில் வைத்தாள். ''தனக்கு, 50 லட்சம் ரூபாய் வரை அவசரத் தேவை,'' என்றாள். ஆவணங்களை புரட்டிவிட்டு, அவர் நிமிர்ந்தார். ''வீடு, ஞானசேகரன் பேர்ல இருக்கேம்மா?'' ''ஆமா. அப்பா சுயமா சம்பாதிச்ச பணத்துல கட்டுன வீடு. உயில்ல, அம்மாவுக்கும், எனக்கும் சேர்த்து எழுதி வச்சிருக்காரு. உயில் காப்பியும் வெச்சிருக்கேன், பாருங்க,'' என்றாள். ''அதெல்லாம் புரியுது. வீட்டை உங்க பேருக்கு மாத்தியாச்சா?'' ''இல்ல. இப்படி ஒரு அவசரத் தேவை வரும்ன்னு நினைக்கல,'' என்றாள், தீபா. ''எல்லாம் சரிம்மா. ஆனா, உயில் பிரகாரம் ரெண்டு பேர் பேர்லயும் வீடு, 'ஜாயின்ட்'டா இருக்கே. அம்மாவோட கையெழுத்தும் இல்லாம அடமானத்துக்கு எடுக்க முடியாதே. எங்க வக்கீல் சம்மதிக்க மாட்டாரு,'' என்று கூறி, அவர் பத்திரங்களை திருப்பிக் கொடுத்தார். ''கையெழுத்துப் போடற நிலைமைல அம்மா இல்லை, சார்!'' என்றாள், தீபா. ''நான் என்னம்மா செய்யறது? எங்க, 'சொஸைட்டி'யில அதுதான், 'ரூல்.' என் இஷ்டத்துக்கு மாத்த முடியாதே.'' ''சார், எங்க வீடு இப்ப, 'மார்க்கெட் ரேட்ல' 29 கோடி ரூபாய்க்கு போவும். 50 லட்சம் ரூபாய் தானே கேக்கறேன்,'' என்றவளிடம், ''சாரிம்மா, எனக்கு அந்த அதிகாரம் இல்ல,'' என்றார். தீபாவின் கண்கள் கலங்கின. தன் மொபைல் போனை எடுத்து, பத்மனாபனுக்கு போன் செய்தாள். பத்மனாபன், தீபாவின் குரலைக் கேட்டதுமே விறைப்பானார். விபரங்களைச் சொன்னாள். ''அங்கிள், அம்மா ஆஸ்பத்திரில இருக்காங்க. அவசரத் தேவை. நீங்க கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்க.'' ''நான் வளவளன்னு பேசினாத்தான் உனக்குப் பிடிக்காதே,'' என்றவரிடம், ''அங்கிள், நான் அப்ப சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு பழிவாங்கற நேரமா இது?'' என்றாள், தீபா. ''அவங்க, சொன்னது சரிம்மா. இதையே தான், 'லீகல் அட்வைஸரா' நான் இருந்தாலும், சொல்லியிருப்பேன். வீடு ரெண்டு பேர் பேர்ல இருக்கிறப்ப, ஒருத்தர் அதை, அடமானம் வைக்கறது கஷ்டம்மா,'' என்றார், பத்மனாபன். தீபாவின் பொறுமை போயிற்று. ''அப்ப, எங்கம்மா சாகட்டும்ன்னு விட வேண்டியது தானா, அங்கிள்?'' என்று அழுகையும், ஆத்திரமுமாய் தொடர்பை கத்தரித்தாள். ஆவணங்களை அள்ளிக் கொண்டாள். ''தங்க நகை ஏதாச்சும் இருந்தா கொண்டுவாம்மா. நல்ல, 'ரேட்' போட்டு கடன் குடுக்க கையெழுத்துப் போடறேன்,'' என்று செயலர் சொல்லச்சொல்ல, எழுந்து புயலாக வெளியேறினாள், தீபா. ம ருத்துவமனை. 'கவுன்ட்டரில்' இருந்த பெண், 'கம்ப்யூட்டரில்' பார்த்தாள். ''உங்க பேரு, மேடம்?'' ''ஆராதனா.'' ''மேடம், நீங்க அனுப்புன, ஆறு லட்சம் ரூபாய், 'க்ரெடிட்' ஆயிருச்சு. 'பேஷன்ட்' மஞ்சுளா பேர்ல வரவு வெச்சிட்டோம்.'' ''தேங்க்ஸ். அவங்க எந்த வார்டு?'' ''இப்ப, 'க்ரிட்டிக்கல் ஐ.சி.யூ.ல' இருக்காங்க. இன்னும் வார்டுக்கு மாத்தல.'' ''அவங்களப் பார்க்க முடியாதா?'' ''டாக்டர் நஞ்சுண்டன்னு முதல் மாடில போட்டிருக்கும். அவரைக் கேளுங்க. 'ஐ.சி.யூ., பேஷன்ட்'ஸை பார்க்க பொதுவா 'விசிட்டர்ஸ்'க்கு 'பர்மிஷன்' தர்றதில்ல.'' 'டாக்டரைப் போய் பார்ப்பதா, வேண்டாமா...' என்று சற்று நேரம் தயங்கினாள், ஆராதனா. வேண்டாம் என்று முடிவு செய்து வெளியேறினாள். படிகளில் அவள் இறங்கி கொண்டிருக்கையில், அவசரமாக அதே படிகளில் ஏறிக்கொண்டிருந்தாள், தீபா. ஒரு கட்டத்தில் இருவரும் எதிரெதிரே வந்து விட்டனர். இருவருக்கும் அரை அடிதான் இடைவெளி இருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் பார்த்தனர். ஆராதனாவின் உதடுகளில் மெல்லப் புன்னகை மலர்ந்தது. ''ஹலோ, தீபா. எப்படியிருக்கீங்க? அம்மா 'ஐ.சி.யூ.,'ல இருக்காங்கனு சொன்னாங்க.'' கனல் கக்கும் பார்வையை அவள் மீது வீசினாள், தீபா. ''எங்கம்மா செத்துட்டாங்களான்னு பார்க்க வந்தியா?'' என்ற, தீபாவின் வார்த்தைகளில், ஆராதனாவின் புன்னகை உறைந்தது. தோளோடு, ஆராதனாவை உரசிக் கொண்டு, வேகமாக படியேறினாள், தீபா. அவள் கண்களிலும், மூச்சிலும் அதீத உஷ்ணம் தகித்தது. - தொடரும்.சுபா