பெண்மை!
தன் அக்கா, மதுமிதா வீட்டிற்கு வந்திருந்தாள், மீரா. வெகுநேரமாக, 'காலிங் பெல்'லை அழுத்தினாள். கதவு திறக்கவில்லை. 'இன்னும் துாங்கிக் கொண்டிருக்கிறாளோ?' என, எண்ணிய சற்று நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ''ஹாய், மீரா. இப்ப தான் என் வீட்டுக்கு வர வழி தெரிஞ்சுதா,'' என்று சொல்லி, அவளை அன்போடு அணைத்து, வீட்டிற்குள் அழைத்து சென்றாள், அவள் அக்கா, மதுமிதா. ''சரி என்ன சாப்பிடுற சொல்லு!'' ''எனக்கு டீ மட்டும் போதும்,'' என்றாள், மீரா. ''இதோ உடனே போட்டு கொண்டு வரேன்,'' என, கிச்சனுக்குள் சென்றாள். அவள் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள், மீரா. நாற்பத்தைந்து வயதிலும், மது எவ்வளவு அழகு. அளவான தேகம், நீண்ட கருங்கூந்தல். சிவப்பு நிறம் இல்லை என்றாலும் மாநிறம். அவளுக்கு அழகே, அவள் கட்டும் காட்டன் புடவை தான். இப்போது கூட அவள் நடந்து செல்லும் போது, காட்டன் புடவையை இடது தோள் மீது கை வைத்து சரி செய்து, முன்புறம் இருந்த ஜடையை பின்பக்கமாக போட்டபடி நடந்து சென்றது எத்தனை அழகு. சிறிதுநேரத்தில், இரண்டு டீ கப்புகளுடன், பிஸ்கட்டும் சேர்த்து எடுத்து வந்து, மீராவின் முன்பிருந்த டீ பாய் மீது வைத்தாள், மதுமிதா. அவளையே பார்த்து கொண்டிருந்த, மீராவின் கண் முன், தன் கையை நீட்டி அசைவு காட்டினாள், மதுமிதா. திடுக்கிட்டு பார்த்தாள், மீரா. ''என்ன பகல்லையே கனவு காண ஆரம்பிச்சிட்ட போல,'' என்றாள், மதுமிதா. ''அக்கா, நீ தேவதை மாதிரி இருக்க. என் கண்ணே பட்டு விடும்,'' என்றாள், மீரா. ''அப்படியா, தேங்க்ஸ்,'' என்று சொல்லி, வெட்கப்பட்டாள். ''மீரா இந்தா, இஞ்சி, ஏலக்காய், சேர்த்து சூப்பரா டீ போட்டிருக்கிறேன்,'' என்று, அவளிடம் ஒரு கப்பை எடுத்து கொடுத்து, அவளும் டீ கப்பை எடுத்து அவளுக்கு அருகில் அமர்ந்தாள், மதுமிதா. ''அக்கா, குழந்தைகள் எங்கே?'' ''இன்னிக்கு லீவு. இன்னும் துாங்கிட்டு தான் இருக்காங்க. நான் வேணும்ன்னா எழுப்பவா? மீரா.'' ''வேண்டாம் அக்கா குழந்தைகள் துாங்கட்டும்.'' ''அம்மா, அப்பா, சாரு எல்லாரும் எப்படி இருக்காங்க?'' என்று கேட்டாள், மதுமிதா. ''எல்லாரும் நல்லா இருக்காங்க, அம்மாவுக்கு எப்பவும் உன்னை பற்றித்தான் பேச்சு. 'என் பெரிய மகள், மது அமைதியானவள். அவளது சமையல் கை பக்குவமே தனி. அவள் போடும் ரங்கோலி வருவோர், போவோரை நின்று ஒரு நிமிடம் பார்த்து செல்லும்படி இருக்கும்'-ன்னு, எப்பவும் உன்னோட நெனப்பு தான், அம்மாவுக்கு, உனக்கு பிடிச்ச, தேங்காய் போளி செஞ்சி கொடுத்தாங்க,'' என்று சொல்லி, தான் கொண்டு வந்த பையிலிருந்து, டிபன் பாக்ஸ் ஒன்றை எடுத்து, அக்காவிடம் தந்தாள். டீ கப்பை கீழே வைத்து விட்டு, பாக்ஸிலிருந்து போளியை எடுத்து சாப்பிட்டாள், மது. ''அக்கா, நம்ம சாரு உங்கிட்ட ஒண்ணு கேட்டு வர சொன்னாள், நீ போடுற ப்ளவுஸ் ஸ்டிச்சிங், சூப்பரா இருக்காம். எந்த டைலர், 'ஷாப்'ல தைக்கிறேன்னு கேட்க சொன்னாள்,'' என்றாள். சிரித்தபடி எழுந்து சென்று, தன், 'ஹாண்ட் பேக்'கிலிருந்து, 'விசிட்டிங் கார்டு' ஒன்றை எடுத்து வந்து, மீராவிடம் கொடுத்தாள். ''இது தான் அந்த, 'ஷாப்'போட அட்ரஸ். சாரு கிட்ட சொல்லு,'' என்றாள், மதுமிதா. இடி இடிக்கும் சத்தம் கேட்டது, ஜன்னல் கதவை, திறந்து பார்த்தாள். வானம் கருமை படர்ந்து, துாறல் போட்டு கொண்டிருந்தது. காற்றில் மண் வாசனை இதமாக வீசியது. ''மீரா மழை துாறல் போடுது. 'கிளைமேட்' எவ்ளோ அழகா இருக்கு பாரேன்.'' ''அச்சச்சோ! அக்கா, மழையா. வீட்டுக்கு சீக்கிரம் போகணுமே,'' என்றாள், மீரா. ''மீரா, ஏன் அவசரப்படுறே. இன்னும் கொஞ்சம் நேரம் இருந்துட்டு போ.'' ''இல்ல அக்கா, அம்மா காய்கறி வாங்கிட்டு வர சொன்னாங்க. 'லேட்' ஆனா கோபப்படுவாங்க. அப்பா நேரத்துக்கு சாப்பிடுவார்ன்னு உனக்கு தான் தெரியுமே! ''அப்பாவுக்கு, இந்த ஊர்ல வேலை மாற்றம் வரும்ன்னு நாங்க நெனச்சி கூட பாக்கல. அம்மாவுக்கும், எங்களுக்கும் எவ்வளவு சந்தோஷம் தெரியுமா. சாரும், நானுமாவது உன்னை எப்பவாவது வீட்டுக்கு தெரியாம வந்து பார்ப்போம். ஆனா, அப்பாவ மீறி எங்கேயும் வரமாட்டாங்க, அம்மா. அவங்களுக்கு, உன்னை ஒரு தடவையாவது நேர்ல பாக்கணும்ன்ணு ஆசை,'' என்றாள், மீரா. மீரா சொன்னதை கேட்டு கண்கலங்கினாள், மதுமிதா. ''இந்த ஊருக்கு வந்து மூணு மாதம் ஆகிவிட்டது. பக்கத்தில் உள்ள எல்லாரிடமும் அம்மா நல்லா பழகிட்டாங்க. அவங்க, எங்கள பத்தி விசாரிக்கும் போது, 'எனக்கு மூன்று மகள்கள். பெரியவ பிள்ளைகளோட வசதியா இருக்கா. இவ ரெண்டாவது, மீரா, காலேஜ் லெக்சர். இவ, சாரு காலேஜ் பர்ஸ்ட் இயர்-'ன்னு, சொல்வாங்க,'' என்றாள், மீரா. ''அப்பா என்ன பத்தி பேசுவாரா?'' என்றாள், மதுமிதா. அமைதியாக இருந்தாள், மீரா. ''என் மேல் கோவம், இன்னும் போகலையா? இருக்கத்தானே செய்யும், உள்ளங்கையில் வைத்து தாங்கியவர் ஆச்சே, மீரா,'' என்றாள். தன் அக்கா கவலைப்படுவதை திசை திருப்ப, ''அக்கா, அம்மா நீ பண்ற, கேரட் அல்வாவ ரொம்ப மிஸ் பண்றாங்களாம். நேத்து கூட சொல்லி வருத்தப்பட்டாங்க,'' என்றாள். ''இதை வந்த உடனே சொல்லக் கூடாதா? இந்த புக்ஸ்ஸ படிச்சிட்டு இரு. அரைமணி நேரத்துல ரெடி பண்ணிடுறேன்,'' என்று கிச்சனுக்கு போக முயன்றவளை, கையை பிடித்து நிறுத்தினாள், மீரா. ''அக்கா, ஏற்கனவே, 'லேட்' ஆயிடுச்சு. ப்ளீஸ் இன்னொரு நாள் செஞ்சி கொடு. நான் கிளம்புறேன்,'' என்றாள். மதுவும் மனம் இல்லாமல் மவுனமானாள். ''மீரா அடுத்த தடவை வரும் போது, அம்மாவ அழைச்சிட்டு வரியா?'' ''அய்யோ, அக்கா. சொல்ல மறந்துட்டேன். வர வெள்ளிக்கிழமை நம்ம வீட்ல வரலட்சுமி பூஜை. அம்மா வருஷா வருஷம் பூஜை செய்வாங்க, உனக்கு தான் தெரியுமே. நம்ம வீட்டு பக்கத்துல இருக்குற எல்லாரையும் அழைச்சிருக்காங்க. உங்க அக்கா அன்னைக்கு கண்டிப்பா வரணும்ன்னு சொல்லி அனுப்பினாங்க,'' என்றாள். ''என்ன நானா?'' என்று திடுக்கிட்டவள், ''அப்பா நான் வந்தால் கோவப்படுவாறே,'' என்றாள், மதுமிதா. ''அப்பா வேலை முடிஞ்சு வீட்டுக்கு வர, நைட் ஆகும். அதுக்குள்ள நீ பூஜை முடிச்சிட்டு கிளம்பிடலாம்,'' என்றாள், மீரா. மதுமிதாவும், அரை மனதோடு சம்மதம் சொன்னாள். வ ரலட்சுமி பூஜை அன்று வீடே மங்களகரமாக இருந்தது. மதுமிதாவின் அம்மா, சுலோச்சனா வீட்டிற்கு வந்த சுமங்கலிகளை, மகிழ்ச்சியோடு வரவேற்றாள். தன் மகள், மதுமிதாவை எதிர்பார்த்தபடி, அவ்வப்போது வாசலையே பார்த்து கொண்டிருந்தாள், சுலோச்சனா. ''சாரு, என்ன உங்க அக்கா இன்னும் வரல. அப்பாவுக்கு பயந்துட்டு அவ வரலியா?'' என்றாள், மகளிடம். சி றிது நேரத்தில்... வாசலில் பெரிய கார் ஒன்று வந்து நின்றது. தன் இரண்டு மகள்களுடன் காரிலிருந்து இறங்கினாள், மதுமிதா. பச்சை நிற பட்டு புடவை கட்டியிருந்தாள். தலை நிறைய மல்லிகை பூ, கையில் கண்ணாடி வளையல்கள், கழுத்தில் தங்க ஆபரணம் அணிந்து, தன் குழந்தைகளுக்கும் நன்றாக அலங்காரம் செய்திருந்தாள். நடந்து வரும்போது அம்மனை போலவே காட்சி தந்தாள், மதுமிதா. தன் மகளை பார்த்து, மகிழ்ச்சியில் கலங்கியபடி, அவளை அணைத்து, வீட்டிற்குள் அழைத்து சென்றாள், அவள் அம்மா, சுலோச்சனா. வந்தவர்களிடம் தன் மகளை அறிமுகப்படுத்தினாள். அனைவரும் அவளை, வியப்புடன் பார்த்தனர். பூஜை தொடங்கியது. சுமங்கலிகள், கனகதாரா ஸ்தோத்திரம் பாடலை பாடி, அம்பாளை மனமார பிரார்த்தனை செய்து கொண்டனர். பூஜை முடிந்து, அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டு, மஞ்சள், குங்குமம், ரவிக்கை, தாலி சரடு, கண்ணாடி, மெகந்தி அடங்கிய தாம்பூலம் பையை தந்து கொண்டிருந்தாள், சுலோச்சனா. காவல் துறையில் பணிபுரியும், மதுமிதாவின் அப்பா, தீனதயாளன், 'ட்யூட்டி' முடிந்து சீக்கிரமா வீட்டுக்கு வந்தார். வரும் போது வாசலில் பெரிய கார் ஒன்று இருக்க, 'யார் வந்திருக்கிறார்கள்?' என்று எண்ணியபடியே வீட்டுக்குள் நுழைந்தார். தன் மனைவி, சுலோச்சனா அருகில் நின்று கொண்டிருந்த, மதுமிதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தார், தீனதயாளன். ''சுலோச்சனா, இவங்க உன் மகள்ன்னு எனக்கு இப்ப தான் தெரியும். ஆனா, எனக்கு இவங்கள, முன்னாடியே தெரியும்,'' என்றாள், வந்திருந்த பெண்மணி ஒருவர். ''அப்படியா?'' என்றாள், சுலோச்சனா. ''ஆமாம், என் மகளுக்கு முதல் பிரசவத்துக்காக மருத்துவமனையில சேர்த்து இருந்தோம். வலி வந்து துடிச்சிட்டு இருந்தா, என் மகள். டாக்டர் வந்து பார்த்துட்டு, 'நிலைமை ரொம்ப, 'கிரிட்டிகலா' இருக்கு. ஆபரேஷன் பண்ணணும்'ன்னு சொன்னப்ப, இவங்க தான், 'இல்லை கொஞ்சம், 'வெயிட்' பண்ணலாம். சுகப்பிரசவம் ஆகும்'ன்னு சொல்லி, நல்லபடியா பிரசவம் பார்த்தாங்க. என் மகளுக்கு ரெட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது,'' என்று அந்த பெண்மணி சொல்ல, தீனதயாளன் கண்கள் கலங்கியது. ''அதுமட்டும் இல்ல. சில ஆண்டுகளுக்கு முன் விபத்துல, அம்மா, அப்பாவ இழந்த, ரெண்டு பெண் குழந்தைகளை இவங்க தான் தத்தெடுத்து வளர்த்துட்டு வர்றாங்க. இந்த ஊர்ல கைராசியான மகப்பேறு பெண் மருத்துவர்ன்னு பேர் வாங்கி இருக்காங்க. இங்கு உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்,'' என்று சொல்லி, பலவாறு புகழ்ந்து பேசினாள், அந்த பெண்மணி. மதுமிதாவை நோக்கி வந்தார், தீனதயாளன். தன் அப்பாவை பார்த்ததும் கண் கலங்கியபடி அவரை அணைத்து கொண்டாள், மதுமிதா. ''என்னை மன்னித்து விடுங்கள், அப்பா. உங்களிடம் சொல்லாமல் வீட்டை விட்டு சென்று விட்டேன்,'' என்றாள், மதுமிதா. ''நீ செல்வதற்கு நான் தானே காரணம். நீதானம்மா என்னை மன்னிக்க வேண்டும்,'' என்றார், தீனதயாளன். ''என் மூத்த குழந்தை நீ. எவ்வளவு அன்பை கொட்டி வளர்த்தேன். என்னை அப்பா என்று முதலில் அழைத்தது, நீ தானே. நான் எதிர்பார்த்தபடி பள்ளியிலும், கல்லுாரியிலும் நீ தான் முதலிடம். நன்றாக படித்தாய், பட்டமும் பெற்றாய். ''ஆனால் உன்னிடம் ஏதோ சிறு சிறு மாற்றத்தை பார்த்து, நான் துடித்து போனேன். அம்மாவுடன் சமையல் அறையில் சமைக்க ஆர்வமானாய், அவள் புடவையை ஆனந்தமாய் உடுத்தி கொண்டாய். பண்டிகை நாட்களில் வீட்டு வாசலில் அழகாக கோலம் போட்டாய். ''திடீரென்று ஒரு நாள் என்னிடம் வந்து, 'அப்பா நான் பெண்ணாக மாற விரும்புகிறேன்...' என்று கூறிய போது, இதயம் நொறுங்கி போனேன். கோவத்தில் உன்னை அடித்து விட்டேன். அன்று தான் உன்னை நான் கடைசியாக பார்த்தது. ''நீ என்ன செய்வாய். இதெல்லாம் உடம்பில் ஏற்படும், 'ஹார்மோன்' மாற்றங்கள் தானே. படித்திருந்தும், நானும் சராசரி மனிதனை போல சமுதாயத்துக்கு பயந்து உன்னிடம் கடுமையாக நடந்து விட்டேன். ஆனால், நீ என்னுடைய கனவை நிறைவேற்றி, பெண் மருத்துவர் ஆகி, இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறாய். வாழ்க்கையில் சாதிக்க, நம்மிடம் இருக்கும் எந்த குறையும் தடையில்லை என்று நிரூபித்து விட்டாய். ''ஆணாக பிறந்து, பெண்ணாக ஜனனம் எடுத்தாய். இன்று பலரும் போற்றும் பெண் மகப்பேறு மருத்துவர் ஆகி, எத்தனை குழந்தைகள் இந்த பூமியில் பிறப்பதற்கு பெண் தெய்வமாக இருக்கிறாய். ''உண்மையில் நீ உயர்ந்த பெண்மணி,'' என்று சொல்லி, சுலோச்சனாவின் கையிலிருந்த குங்குமத்தை எடுத்து, 'நீ என் மகன், இல்லை மகள்...' என்று, மதுமிதாவின் நெற்றியில் வைத்தார், தீனதயாளன். கி.சுமதி கிருஷ்ணமூர்த்தி