விண்ணையும் தொடுவேன்! (4)
முன்கதைச் சுருக்கம்: கலெக்டர் ஆவதே தன் லட்சியம் என்றிருந்த புகழேந்தி, ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தற்காலிகமாக, அரசு துறையில் உயரதிகாரியாக பணியில் இருந்தான். கூடிய விரைவில், கலெக்டர் போஸ்ட் கிடைத்துவிடும் என, எதிர்பார்த்திருந்தான். நிறைய புத்தகங்கள் படிப்பதும், தன் நண்பர் பிரபாகர், ஆசிரியராக இருக்கும் பத்திரிகையில் நிறைய கட்டுரைகள் எழுதுவதும், புகழேந்தியின் பொழுது போக்கு.புகழேந்தியின் கூடுதல் தகுதியால், அவ்வப்போது, பல கல்லுாரிகளில் நடக்கும் விழாக்களுக்கு தலைமை தாங்க அவனை அழைப்பர். அப்படி ஒருமுறை, கல்லுாரி நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றபோது, அங்கு படிக்கும் சுபாங்கி என்ற பெண், புகழேந்தியின் அழகில் மயங்கி, அவனை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாள். அதற்காக, அமைச்சரான தன் தந்தையை, புகழேந்தியின் வீட்டுக்கு அனுப்புகிறாள். அமைச்சரின் எதேச்சதிராக போக்கால் அதிருப்தி அடையும் புகழேந்தியும், அவன் அப்பாவும், பிடிக்கொடுக்காததால், ஒருநாள், நேரிலேயே, புகழேந்தி வீட்டுக்கு வந்து விடுகிறாள், சுபாங்கி- வீட்டுக்குள் வந்த சுபாங்கி, புகழேந்தியை நேரிடையாக பார்த்து புன்னகைத்தாள். அவனுக்குள் மின்னல் வெட்டியது.பின்புறமிருந்து வந்த அப்பாவைக் கண்டதும், அருகில் போய் பாதங்களைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டாள், சுபாங்கி; மிரண்டு போய் பார்த்தார், அப்பா.'அம்மா எங்கே?' என, சகஜமாக கேட்டாள்.சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்த அம்மாவை, 'வாங்கம்மா. வந்து இப்படி மாமா பக்கத்துல நில்லுங்க...' என்றாள்.ஒன்றும் புரியாமல் அந்தம்மா வந்து, அவர் அருகில் நின்றதும், மீண்டும் இருவரையும் வணங்கினாள்.'ரெண்டு பேரும் என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க...' என்றாள்.'நல்லாயிரும்மா... நல்லா இரு...' என்றார், அப்பா.'ஊஹும், அது போதாது, அங்கிள். மனசுல நினைக்கிறது நடக்கணும்ன்னு ஆசீர்வாதம் பண்ணுங்க...' என்றாள்.'அப்படி என்னம்மா நினைக்கிற?' 'உங்க மகனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைக்கிறேன்...'முதலில் ஆடிப் போனவர், 'அம்மா, நீ யாருன்னு...' அப்பாவின் கேள்வி முடிவதற்குள் பதில் வந்தது. 'சுபாங்கி, அங்கிள். மினிஸ்டர் பரமசிவத்தின் பொண்ணு...' என்றாள்.'உட்காரும்மா...' என்றதும், உட்கார்ந்து கொண்டாள். 'என்னம்மா சாப்பிடற, காபியா, டீ யா?' என, புகழேந்தியின் அம்மா கேட்டாள்.'ரெண்டும் வேணாம்மா. குடிக்க கொஞ்சம் தண்ணீர் மட்டும் கொடுங்க போதும்...''அப்பா வரலையாம்மா?' 'இல்ல அங்கிள். உங்ககிட்டயிருந்து பதில் வராததால், நானே புறப்பட்டு வந்தேன்...'ஒரு விநாடிக்கு பின் தானாக தொடர்ந்தாள்...'உங்க மகன் புகழேந்தியை, எனக்கு மிகவும் பிடிக்கும், அங்கிள். முதன் முதலாக எங்கள் காலேஜ் விழாவுக்கு வந்த போது தான், அவரைப் பார்த்தேன். பார்த்த அந்த விநாடியே, அவர் என் மனசுல பதிஞ்சுப் போயிட்டாரு...' நடப்பதெல்லாம் கனவு மாதிரி தோன்றியது, புகழேந்திக்கு. அவள் பேசும் போது குறுக்கிட விருப்பப்படாமல், அப்பா, அவளைப் பேச விடுவது புரிந்தது.'அதிலிருந்து, உங்கள் மகனை பற்றி விபரங்கள் ஒவ்வொன்றாக சேகரிக்க ஆரம்பித்தேன். உங்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். எளிமை, அன்பு, கொள்கை பிடிப்பு, லட்சியம்ன்னு நீங்க இருக்கிறதும், உங்க மகனை அதுபோலவே வளர்த்திருப்பதும் தெரியவந்தது.'அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையும், என்னைக் கவர்ந்தது. வந்தால், இந்த மாதிரி குடும்பத்துக்கு வரணும். வாழ்ந்தால், இந்த மாதிரி மனிதரோடத்தான் வாழணும்ன்னு, அப்பாவை பொண்ணு கேட்க அனுப்பி வச்சேன்...'அப்போதும் அப்பா மவுனமாக இருக்கவே, சற்று கண் கலங்கினாள், அவள்.'உங்ககிட்டேயிருந்து பதில் வராதது, என்னை ரொம்ப சங்கடப்படுத்திடுச்சு. என்னால் சாப்பிட முடியல. துாங்க முடியல. நெருப்பை முழுங்கின அவஸ்தையாக இருந்தது...' என்றாள். சடாரென்று புகழேந்தியின் தலை உயர்ந்தது. பார்வை அவள் மீது படிந்தது.'நெருப்பை முழுங்கின அவஸ்தை. எப்படி சொல்கிறாள். தன் தவிப்பை, இதைவிட வேறெந்த வலுவான வார்த்தைகளால் சொல்லிவிட முடியும்...'அப்போதே அவன் மனது, பாதி இளகிவிட்டது. 'அரசியல்ல இருக்காரு, அப்பா. மந்திரியாக இருக்காரு. ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கணுமோ அப்படி இருக்காரு. பதவியில் இருக்கிறவங்க எப்படி நடந்துக்கணுமோ, அப்படி நடந்துக்கறாரு.'அம்மா இறந்தப்போ எனக்கு, ஐந்து வயசு. அப்பாவுக்கு, 30 தான் இருக்கும். ஆனாலும், மறு கல்யாணம் பண்ணிக்கலை, அப்பா. 'இன்னொருத்தி வந்தா, என் பொண்ணு மேல, பெத்த அம்மா மாதிரி அன்பாகவோ, அக்கறையாகவோ இருக்க மாட்டான்'னு, இத்தனை வருஷம் ஒத்தையாகவே இருந்துட்டாரு.'அவருக்கு என் மேல உசுரு. எனக்காக எதுவும் செய்வாரு. அன்னைக்கு உங்க வீடு தேடி வந்தது எனக்காகத்தான், அங்கிள்...' என்றாள், சுபாங்கி.அவளின் முகத்தை ஏறிட்ட அப்பாவின் கண்களில், ஒரு மென்மை தெரிவதை கவனித்தான், புகழேந்தி. 'அன்னைக்கு கூட, உங்களை கூப்பிட்டு பேசணும், வீட்டுக்கு வரவழைச்சு பேசணும்ன்னு தான், அப்பா சொன்னாரு. ஆனால், நான் தான் அது சரியில்லப்பா. முறையில்ல. நீங்க போங்கன்னு கேட்டுக்கிட்டேன். 'ஏம்மா ஒரு சாதாரண அரசாங்க அதிகாரி வீட்டுக்கு நான் போகணுமா'ன்னு, தயங்கினாரு.'நான் தான், 'ஏம்ப்பா அதிகாரின்னு நினைக்கறீங்க. மாப்பிள்ளைன்னு நினைச்சுக்குங்க'ன்னு, சொல்லி அனுப்பினேன். தெய்வத்தின் முன்னால் நிக்கிற பக்தை மாதிரி நின்னு கேக்குறேன், மாமா. என்னை உங்க மருமகளா ஏத்துக்குவீங்களா?' என, கண்ணீர் மல்க அவள் கை கூப்பியதும், நெகிழ்ந்து போய் எழுந்து கொண்டார், அப்பா.'நீ வீட்டுக்கு போம்மா. நல்ல செய்தி சொல்லி அனுப்பறேன்...' என்றார்.'நீங்க சொல்றீங்க. ஆனா, அவரு வாயே திறக்காம உட்கார்ந்திருக்காரே...'அப்போதும் புகழேந்தி பேசாதிருக்கவே, கரகரவென்று கன்னங்களில் கண்ணீர் வழியத் தொடர்ந்தாள், அவள்...'ஒரு அமைச்சருக்கும், அரசியல்வாதிக்கும் மகளாகப் பிறந்தது என் தப்பா, மாமா?'தவித்துப் போனான், அவன். அருகில் போய் கண்ணீரைத் துடைக்க மனம் பரபரத்தது. மென்மையாக அணைத்து, முன் நெற்றியில் முத்தமிடத் துடித்தது.'இவள் பதவிக்காக வந்தவளில்லை. என் பதவியை விட, இவள் தந்தையின் பதவி மிகவும் பெரிது. செல்வத்தில், ஏணி வைத்தாலும் எட்ட முடியாத உயரத்தில் இருப்பவள். வீடு தேடி வந்து இப்படி கேட்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. கேட்கிறாள் என்றால், நிஜமாகவே என்னை நேசிக்கிறாள்.'நான் தேடியது இது போன்ற நேசத்தைத் தானே? எதிர்பார்த்தது இப்படிப்பட்ட அன்பைத் தானே? என்னை முழுமையாக ஏற்றுக் கொண்டு, தன்னை முழுமையாக ஒப்படைக்க காத்துக் கொண்டிருப்பவள். இவளை விடப் பிரியமான இன்னொருவளைத் தேடியா கண்டுபிடித்து விடப் போகிறேன்...' என, அவனது கருணை மிகுந்த இதயம், முதல் முறையாக ஒரு பெண்ணிடம் தோற்றுப் போவதை உணர்ந்தான்.'என்ன புகழ்... ஒரு தாயில்லாப் பொண்ணை இப்படி அழ வைக்கிற...' என்றாள், தாங்க முடியாதவளாக, அம்மா. புகழேந்தி அப்பாவை பார்க்க, அவரும் அதே சமயம், அவனை ஏறிட்டார். இருவரும் பார்வையாலேயே பேசிக் கொண்டனர். 'ரொம்ப நல்லப் பொண்ணாத் தெரியுது, புகழ்...''ஆமாப்பா...' 'என்ன சொல்ற, புகழ்?' 'நீங்க என்ன நினைக்கறீங்களோ, அதேதாம்ப்பா...' 'நீ போய் உங்க அப்பாகிட்ட எங்க சம்மதத்தை தெரிவிச்சுடும்மா...' என, அப்பா அவளைப் பார்த்து சொன்னார்.அப்படியே ஒரு விநாடி கண்களை மூடியவள், எழுந்து நின்றாள். பின்னர் குரல் தழுதழுத்தாள்.'ரொம்ப நன்றி, மாமா. என்னைக்கும், உங்க மருமகள்ன்னு சொல்லும்படி தான் நடந்துப்பேனே தவிர, அப்பாவோட பொண்ணுன்னோ, மந்திரி மகள்ன்னோ சொல்ற மாதிரி நடந்துக்கவே மாட்டேன்...' என்றாள்.வீடு முழுவதும் விளக்கேற்றி வைத்த மாதிரியான நிறைவு, அனைவரது முகத்திலும்.'நான் கிளம்பறேன்...' என்றவள், சற்று தயங்கி நின்றாள்.'என்னம்மா?' 'எனக்காக ஒண்ணே ஒண்ணு அவரை செய்யச் சொல்வீங்களா, மாமா?' 'என்னதும்மா?' 'தன் மாப்பிள்ளை, கலெக்டர்ன்னு சொல்லிக்க ஆசைப்படுறாரு, அப்பா. எனக்காக எவ்வளவோ செய்தவர், அப்பா. என் எல்லா ஆசைகளையும் தீர்த்து வச்சவர். அவருடைய இந்த சின்ன ஆசையை நிறைவேற்றி வைக்கணும்ன்னு நினைக்கிறேன்.'கல்யாணத்துக்கு முன்னாலயே, 'போஸ்டிங்' போட்டு, உங்க மகனை கலெக்டர் ஆக்கிடுவாரு. எனக்காக இதுக்கு மட்டும் சரி சொல்லச் சொல்லுங்க மாமா ப்ளீஸ்...' என்றாள், சுபாங்கி.'சாரி...' என, ஆணித்தரமாக குறுக்கிட்டான், புகழேந்தி.'அப்படியெல்லாம் கலெக்டர் ஆக, நான் விருப்பப்படல. எப்ப என் திறமைக்கும், தகுதிக்கும் கலெக்டர் பதவி கிடைக்குதோ, அப்ப கிடைக்கட்டும். அது போதும்...' என்றான். அவனை நேரிடையாக ஏறிட்டு தலையை சாய்த்து கெஞ்சலாக, 'எனக்காக செய்யக் கூடாதா?' எனக் கேட்டாள்.'நீங்க, என்னை மன்னிக்கணும், சுபாங்கி. பதவிகள் திறமையின் அடிப்படையிலும், தகுதியின் அடிப்படையிலும் தரப்பட வேண்டுமே தவிர, சிபாரிசின் அடிப்படையில் அல்ல. நான் இப்போதிருக்கும் இதே பதவியில், என்னை ஏற்றுக் கொள்வாரா என, அப்பாவிடம் கேளுங்கள். பதவிக்காக கல்யாணம் என்பது வேண்டாமே...'அதற்கு மேல் அவனை சம்மதிக்க வைக்க முடியாது என்றுணர்ந்த, சுபாங்கி, 'சரி...' என தலையாட்டி, அடிபட்ட பார்வையோடு வெளியேறினாள்.'பாவம் அந்தப் பொண்ணு...' என்றாள், அம்மா.'இதப்பாரு லஷ்மி. புகழேந்தி எதைச் செய்தாலும் சரியாக இருக்கும்ன்னு தெரியுமில்ல?' என, அப்பா சொன்னதைக் கேட்டு, 'அதுவும் சரிதான்...' என, எழுந்து கொண்டாள், அம்மா.தன் பத்திரிகையில் வெளியான புகழேந்தியின், 'ஆத்ம துணை' கட்டுரையை மீண்டும் படித்தான், பிரபாகர். 'இவன், இன்னொரு பிளாட்டோவோ!' என, நினைத்துக் கொண்டான்.அப்படிப்பட்ட சிந்தனைவாதி தான், அவன். போற்றி கொண்டாட வேண்டியவன் தான். பாரதியிடமிருந்த கனல், இவனிடமும் இருக்கிறது. உண்மை, நேர்மை, சிறுமைக்குத் தலை வணங்காமை மற்றும் எதற்கும் விலை போகாமை என, எல்லாமே இருக்கிறது.இவன், வெறும் எழுத்தாளனாக மட்டுமே இருந்திருப்பானால், அதிகார வர்க்கத்திடம் சிக்கிக் கொண்டிருக்க மாட்டான்.அதற்கு அவன், ஐ.ஏ.எஸ்., ஆனது மட்டும் காரணமல்ல. அவனிடம் சுரக்கும் அபரிமிதமான அன்பும், கருணையும் தான் காரணம். பாவம், புகழ். அலைவரிசைகள் ஒன்றிணையும் பரவசப் பிரளயத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தவன்.ஆனால், அற்பமான அகங்காரப் புயலாலும், தான் என்ற மமதை வெள்ளத்தாலும், பணக்காரத் திமிர் என்ற சீற்றத்தாலும் அடித்துக் கொண்டு போகப்பட்டு விட்டான். அதிலிருந்து எதிர்நீச்சல் போட்டு, நீந்திக் கரையேற முயன்று கொண்டிருக்கிறான். கரையேறுவானா அல்லது முயற்சியில் தோல்வியுற்று அடித்துக் கொண்டு போகப்படுவானோ!காதல் என்ற அரிதாரம் பூசி, யாரோ சொல்லித் தந்த வசனத்தை ஒப்பித்த பெண்ணிடம் ஏமாந்து, திருமணம் செய்து கொண்டு விட்டான். இந்த, ஏழெட்டு மாதங்களில் அவன் சந்தித்த சோகங்கள் ஏராளம். அவனை உடைத்துப் போட்ட அற்பத்தனங்கள், ஆயிரமாயிரம்.எதையும் தன்னிடம் அவன் மறைத்ததே இல்லை. திருமணம் செய்து கொண்ட கையோடு, மாமனார் வீட்டில் தங்க நேர்ந்த நாட்களின் சோகமும், சுமையுமாக கடிதம் எழுதியிருந்தான். அதில், 'அவள், என் வீட்டைத் தேடி வந்ததற்கு காரணம், அன்பு இல்லை. காதல் இல்லை. பணக்காரர்களுக்கே சொந்தமான, 'அடைந்தே தீர வேண்டும்...' என்ற பிடிவாதம். நான், அவளைத் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்பதால் ஏற்பட்ட, 'ஈகோ'வின் உந்துதல்.'நான், உங்களுக்காக உங்க வீட்டையும், ஆபிசையும் கார்ல சுத்தி சுத்தி வந்தேன். நீங்க என்னைப் பார்க்கணும் என, காரை விட்டு நடந்து கூடப் போனேன். என்னைத் தாண்டி எத்தனை முறை போனீங்க. ஆனால், என்னை திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. 'அதனால், நீங்க எழுதுகிற அந்த பத்திரிகைக்கு, 100 லெட்டர் போட்டேன். எதுக்கும் பலனில்லேன்னா என்ன செய்ய முடியும்?'என்னைத் திரும்பி பார்க்காத மனிதர், வேறு யாரையும் திரும்பிப் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன். என்னைத் தவிர, வேறு யாரையும் கல்யாணம் பண்ணி விடக் கூடாதுன்னு முடிவெடுத்து தான், வீட்டுக்கு ஓடி வந்தேன்...' எனக் கூறி, திட்டமிட்டு, புகழேந்தியை ஏமாற்றியுள்ளாள், சுபாங்கி.- தொடரும்- இந்துமதி