திண்ணை!
இந்திய விடுதலை போராட்டக் காலத்தில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார், தேச பக்தர் கோபால கிருஷ்ண கோகலே.ஒருமுறை, கட்சியின் முழு நேர ஊழியர்களிடம், 'யாரும் டைரி எழுத வேண்டாம்...' என்றார், கோகலே.'ஏன் ஐயா...' எனக் கேட்டார், ஒரு ஊழியர். 'வெள்ளைப் போலீசின் கெடுபிடிகளும், அடக்கு முறைகளும் அதிகமாக இருக்கின்றன. நம் மீது அவர்கள் பார்வை இருந்து கொண்டே இருக்கிறது.'விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களாகிய நாம், அன்றாட நிகழ்ச்சிகளை டைரியில் குறித்து வைத்தால், போலீசார் தமது அடக்குமுறைகளுக்கு நம் டைரிகளையே ஆதாரமாக பயன்படுத்துவர். அதற்கு ஒரு போதும் நாம் இடம் தரக்கூடாது...' என்றார், கோகலே.அவரது சமயோசித அறிவை எண்ணி வியந்தனர், காங்கிரஸ் ஊழியர்கள்.பண்டிதமணி கதிரேசன் செட்டியார், தம் இளமைக் காலத்தில் நண்பர் ஒருவரிடம், திருக்குறள் புத்தகத்தை கொடுத்து, 'நான் குறளை ஒப்புவிக்கிறேன். தவறுதலாக சொன்னால் தயக்கமின்றி என் தலையில் ஒரு குட்டு குட்டிவிடு...' என்றார். 'சரி...' என்றார், நண்பர்.முதல் குறளை ஒப்புவித்தார், கதிரேசன் செட்டியார்.அடுத்த வினாடி, அவர் தலையில் ஒரு குட்டு விழுந்தது.பண்டிதமணி திகைத்தார்.'அகர முதல எழுத்தெல்லாம்... என்று நுாலில் இருக்கிறது. நீ, அகர முகல எழுத்தெல்லாம் என்று சொன்னாய்...' என்றார், நண்பர்.உடனே அவரிடமிருந்து திருக்குறள் புத்தகத்தை பறித்த பண்டிதமணி, 'உன்னிடம் திருக்குறள் புத்தகத்தை ஒப்புவித்தால், 1330 குட்டுகளை நான் வாங்க வேண்டியிருக்கும் போலிருக்கிறதே...' என, சொல்லி சிரிக்க, நண்பரும் சிரித்தார். **************ரசிகமணி டி.கே.சிதம்பரநாத முதலியாரின் வீட்டில், இட்லி மிகவும் பிரசித்தமானது. அவருக்கு இட்லி மிகவும் பிடிக்கும் என்பதால், அதை தயாரிக்க அவரது மனைவி மிகுந்த சிரத்தை எடுத்துக் கொள்வார். இட்லிகள் மிருதுவாகவும், சுவையாகவும் வரவேண்டும் என்பதில் மனைவியும் கவனத்துடனேயே செயல்பட்டு வந்தார். ஒருநாள், அவர் வீட்டில் அவரும், 'தி ஹிந்து' பத்திரிகை அதிபர், கஸ்துாரி சீனிவாசனும் மிருதுவான இட்லிகளை சாப்பிட்டுவிட்டு உரையாடத் துவங்கினர். அப்போது, 'உங்கள் வீட்டு இட்லிகள் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தன என்பதை, நான் ஒப்புக் கொள்கிறேன். இருந்தாலும், பொதுவாக இட்லியை விட, பூரியே சிறந்தது. பூரியில், வைட்டமின் சத்து நிறைய இருக்கிறது...' என்றார், கஸ்துாரி சீனிவாசன்.அதற்கு, 'பூரியில் ஒன்றுமேயில்லை. எல்லாம் அதற்கு தொட்டுக் கொள்ளும் உருளைக்கிழங்கில் தான் இருக்கிறது. உருளைக்கிழங்கு மட்டும் நன்றாக இருந்துவிட்டால், உங்கள், 'ஹிந்து' பேப்பரையே எட்டாக மடித்து, தொட்டுக் கொண்டு சாப்பிட்டு விடுவேனே...' என்றார், டி.கே.சி., நடுத்தெரு நாராயணன்