உள்ளூர் செய்திகள்

திண்ணை!

நர்மதா பதிப்பகம் வெளியீடு, அப்பாஸ் மந்திரி எழுதிய, '200 பிரபலங்கள் மறக்க முடியாத நிகழ்ச்சிகள்!' என்ற நுாலிலிருந்து: இ ங்கிலாந்து நாட்டு தலைநகர், லண்டனில் நண்பர் ஒருவரது வீட்டில் தங்கியிருந்தார், விவேகானந்தர். ஒருநாள், அங்கிருந்த மைதானத்தில், விவேகானந்தர், நண்பர் மற்றும் அவருடைய மனைவி நடந்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப்பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனத்தையும், வேகத்தையும் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி மயங்கி விழுந்து விட்டார். மனைவியை துாக்க முயன்ற, நண்பர், மாடு வேகமாக வருவதை பார்த்து, மனைவியை விட்டு தலைதெறிக்க ஓடினார். விவேகானந்தர் ஓடவில்லை. ஆணி அடித்தாற் போல் அங்கேயே நின்று விட்டார். மாடோ இவர்களை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரை துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடம் இருக்க, அதனுள் புகுந்து தன்னை காப்பாற்றிக் கொண்டார், நண்பர். இதனிடையே, பண்ணை ஊழியர்கள் மாட்டை பிடித்து கட்டிப் போட்டனர். மயங்கி விழுந்த நண்பரின் மனைவி, மயக்கம் தெளிந்து எழுந்தார். நண்பரும் வந்து சேர்ந்தார். விவேகானந்தரிடம், 'சிறிது கூட பயம் இல்லாமல் அதே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது...' எனக் கேட்டார், நண்பர். 'வருவது வரட்டும். சமாளிப்போம் என, நின்று விட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது விலங்குகளின் இயல்பு. நீ ஓடினாய். மாடு உன்னை துரத்திக் கொண்டு ஓ டியது...' என்றார், விவேகானந்தர். *********வானதி பதிப்பகம் வெளியீடு, பள்ளிக் கல்வித்துறை இயக்குனரக இருந்த, நெ.து.சுந்தரவடிவேலு எழுதிய, 'நினைவில் நின்றவர்கள்' என்ற நுாலிலிருந்து: ஈ. வெ.ரா.வின் சமகாலத்தவர், ராஜாஜி. அவரை பற்றி, ஈ.வெ.ரா., இப்படி எழுதியுள்ளார்: ஆச்சாரியாருக்கும், எனக்கும் அரசியலில் சில கருத்து வேற்றுமைகள் உண்டு. அவற்றில் எதையும் அவரும் விட்டுக் கொடுக்க மாட்டார். நானும் விட்டுக் கொடுக்க மாட்டேன். ஏனெனில் நாங்கள், எங்கள் சுயநலத்திற்காக பொதுவாழ்வில் இறங்கி இருந்தால், சுயநலத்தை முன்னிட்டு விட்டுக் கொடுப்பது, சகஜமாகும். இரண்டு பேருக்கும் சுயநலமில்லை. ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? பொதுநலத்திற்காக விட்டுக் கொடுப்பது, விட்டுக் கொடுத்ததாகாது.  மு ன்னாள் ஜனாதிபதி, டாக்டர் ராஜேந்திர பிரசாத், ஒரு சமயம், பாட்னாவிலிருந்து தன் ஊருக்கு செல்ல விசைப்படகில் பயணம் செய்து கொண்டிருந்தார். எதிரே ஒரு இளைஞன் அமர்ந்து ஓயாமல் புகைத்துக் கொண்டிருந்தான். புகை நெடி, ராஜேந்திர பிரசாத்தை திணற அடித்தது. ஒரு கட்டத்தில் அவர், அந்த இளைஞனைப் பார்த்து, 'தம்பி அந்த சிகரெட் உன்னுடையதுதானே...' என்று கேட்டார். 'ஆமாம்...' 'புகை?' திகைத்த இளைஞன், அவரை நோக்கினான். 'சிகரெட் உன்னுடையது தான் என்றால், புகையும் உன்னுடையதுதான். அதையும் நீயே வைத்துக்கொள்ளலாமே. ஏன் வெளியில் ஊதி எங்களை சிரமப்படுத்துகிறாய்...' எனக்கூற, இளைஞன், தன் தவறை உணர்ந்து, சிகரெட்டையும், நெருப்பு பெட்டியையும் நீரில் வீசி, தலை குனிந்தான். - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !