திண்ணை!
தன் மனைவி, செல்லம்மாவின் ஊரான, தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, கடையத்தில் தங்கியிருந்தார், பாரதியார். அது, குளிர்காலம். அவருக்கு புதிய வேட்டி மற்றும் மேல் துண்டு அணிந்து கொள்ள கொடுத்தார், அவர் தங்கியிருந்த வீட்டின் சொந்தக்காரர். பஞ்சகச்சம் கட்டும் வேட்டி பத்து முழம், மேல் துண்டு அங்கவஸ்திரமானதால் ஆறு முழம், இவற்றை அணிந்துகொண்டு, மனைவியுடன் கோவிலுக்கு போனார், பாரதி. வரும் வழியில் குளிரில் நடுங்கியவாறு இருந்த முதியவர் ஒருவரை பார்த்ததும், அவர் மனம் இரங்கியது. உடனே, மேல் துண்டை தன் இடுப்பில் கட்டிக் கொண்டு, இடுப்பு வேட்டியை அவிழ்த்து அந்த ஏழைக்கு உடுத்திக்கொள்ள கொடுத்தார். வீடு திரும்பியதும் பாரதியிடம், 'அந்த முதியவருக்கு மேல் துண்டை கொடுத்தால் போதாதா... இடுப்பு வேட்டியை கொடுக்க வேண்டுமா?' என்று கேட்டாள், செல்லம்மா. 'அதெப்படி, அவன் வெளியே இருக்கிறான். குளிராதா? வீட்டுக்குள்ளே இருக்கிற எனக்கு இது போதும்...' என்றார், பாரதி. ***** பேராசிரியர் க. ராமச்சந்திரன் எழுதிய, 'திசைகள் உன்னை திரும்பிப் பார்க்கும்!' என்ற நுாலிலிருந்து: ம காகவி பாரதியின் வறுமை உலகம் அறிந்தது. தான் உடுத்தியிருக்கும் கருப்பு கோட் உடையின் கிழிசல்களை வெள்ளை நுாலால் தைத்திருப்பார். கருப்பில் வெள்ளை நுால் பளிச்சென்று அசிங்கமாகத் தெரியும் என்பதால், அந்த நுால் மீது கருப்பு மையைத் தடவுவார். இப்படி வறுமை ஒரு பக்கம்; ஆங்கிலேயர்களிடமிருந்து, தலைமறைவு வாழ்க்கை இன்னொரு பக்கம். இவ்வளவு இருந்தும், 'எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா...' என்று அவரால் உற்சாகமாகப் பாட முடிந்தது. அந்த உற்சாகம் தான் அவரை, மகாகவி ஆக்கியது. ******** அ ண்ணாதுரை, ஈ.வெ.ரா.,வுடன் பழகி வந்த நேரம், ஈ.வெ.ரா.,வின் பேச்சை, 'கிராமபோன் ரிகார்டில்' ஒலிப்பதிவு செய்தால், பிற்கால சந்ததிக்கும் பயன்படும் என்று அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினார், அண்ணாதுரை. பிரபல கிராமபோன் கம்பெனிக்கு போய் விசாரித்த போது, அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படி, அவர் பேச்சை 'ரிகார்டில்' ஒலிப்பதிவு செய்து வெளியிட்டால், கம்பெனி எதிர்பார்க்கும் அளவுக்கு லாபம் கிடைக்காது என்று கருதி, 'ஆயிரம் ரிக்கார்டுகளுக்கான ஆர்டர் கொடுத்து, அதற்கான தொகையை முன்னதாகக் கொடுத்தால் மட்டுமே முடியும்...' என்று கூறி விட்டனர். அதைக்கேட்ட, அண்ணாதுரை ஆயிரம் ரிக்கார்டுகளுக்கு உரிய தொகையை நிதியாக திரட்டக் கூடிய நிலையில், கட்சி இல்லாதிருப்பதை எண்ணி, எதுவும் கூறாமல், ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டார். அப்படி சொன்ன அதே ஒலிப்பதிவு கம்பெனி, பின் ஒரு காலத்தில், அண்ணாதுரையின் பேச்சை ஒலிப்பதிவு செய்ய விரும்பி, அவரை அழைத்து வர ஒருவரை அனுப்பியது. அண்ணாதுரையோ, தன் தொண்டை சரியாக இல்லை என்று, 'பிகு' செய்து, காலத்தை கடத்தி கொண்டே வந்தார். கடைசி வரை ஒலிப்பதிவு செய்யவில்லை. ********கமிட்டி கூட்டம் அல்லது முக்கியமான நிகழ்ச்சி என்றால், அதன் ஒவ்வொரு சிறு வேலையையும் நேருவே நேரில் கவனிப்பார். ஜனவரி 26, 1950 குடியரசு தினவிழா அன்று, விழாவுக்கு முன்னதாக வந்தவர்கள், நேருவே மேஜைகளை சரி செய்து, அவரே தன் கைப்படசீட்டில் பெயர் எழுதி, துாதுவர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் அமரும் நாற்காலியில், கட்டிக் கொண்டிருந்ததை பார்த்து வியந்தனர். இ ரண்டாவது ஆசிய நாடுகள் மாநாடு புதுடில்லியில் நடந்தபோது, அயல்நாட்டு உறுப்பினர்கள் அமரும் இடங்களில் பெயர் பலகை, குறிப்புகள் எழுத வெள்ளை பேப்பர் மற்றும் பேனா முதலியவை சரியாக வைக்கப்பட்டுள்ளதா என்று முன்பே வந்து சரி பார்த்தார், நேரு.நடுத்தெரு நாராயணன்