உள்ளூர் செய்திகள்

திண்ணை!

விழா ஒன்றில், கவியரசர் கண்ணதாசன் பேசியது: பெண்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் எல்லாரும், பெண்ணை, 'வஞ்சி' என்று அழைத்தனர். பெண்களால் மனம் கன்னிப் போனவர்கள் எல்லாரும், 'கன்னி' என்று கூறினர். காதலில் தோல்வியுற்று, கன்னியாகுமரி கடலில், விழுந்து இறந்தவர்கள் எல்லாரும், 'கு மரி' என்று கூறினர். உள்ளத்தை எல்லாம் அவள் மூலம் இழந்து விட்டதால், அவள், 'இல்லாள்' என்று அழைக்கப்பட்டாள். ******** ரா.கி.ரங்கராஜன் எழுதிய, 'அங்குமிங்குமெங்கும்!' என்ற நுாலிலிருந்து: 'குமுதம்' வார இதழுக்கு வருகிற சிறுகதைகளை பதிவு செய்து கொள்ளவும், ஏற்கப்படாத சிறுகதைகளைத் திருப்பி அனுப்பவும், அலுவலகத்தில் எங்களுக்கு உதவியாளாராக, நியமிக்கப்பட்டிருந்த வயதான ஒருவர், இதற்குமுன், ஏதோ ஒரு சாதாரண உத்தியோகம் பார்த்து ஓய்வு பெற்றவர். உச்சிக் குடுமியும், பஞ்சகச்ச வேட்டியும், நெற்றி நிறைய நாமமுமாக இருந்த, வைதீகர் அவர். குறிப்பிட்ட கதை என்னவாயிற்று என்று கேட்டால், சிறுகதைகளை பதிவு செய்த புத்தகத்தைப் பார்த்து சரியாக சொல்லி விடுவார்; 'பார்த்தசாரதி...' என்று குரல் கொடுத்தால், அவிழ்கிற கச்சத்தை இழுத்துப் பிடித்தபடி உடனே ஓடி வந்து விடுவார். வாழ்க்கையில், அந்த தள்ளாத வயதிலும் சொற்ப சம்பளத்துக்கு வேலை பார்க்கிற ஒருவருக்கு என்ன சந்தோஷம் இருக்க முடியும்? பாவம்... களைப்புடன், 10:30 மணிக்கு ஆபீசுக்கு வருவார். பெருமூச்சுடன் நாற்காலியில் உட்கார்ந்து, முகத்திலும், கழுத்திலும் பொடித்திருக்கும் வியர்வையை அங்கவஸ்திரத்தால் துடைத்துக் கொள்வார். அவருக்காகக் காத்திருக்கும் நாங்கள், ஒரு வேலையை சொல்வதற்காக அவர் எதிரில் போய் நின்றதும்... 'இன்னிக்கு பாருங்கோ, இந்த பஸ் கடன்காரன், வேப்பேரி, 'போஸ்ட் ஆபிஸ்'கிட்டே பஸ்சை நிறுத்திட்டான். பஸ் கிளம்பலே. கொஞ்ச துாரம் தானே, நடந்தே போகலாம் என்றால், கண்டக்டர், 25 பைசா பாக்கி தரணும். சில்லரை இல்லேங்கறான்...' என்று ஒருநாள் முணுமுணுப்பார். இன்னொரு நாள், 'இந்த ரேஷன் கடைக்காரன் அரிசி ஒரு கிலோன்னு சொல்லி, முக்கால் கிலோ தான் போடறான். அவனோடு பெரிய சண்டை, போங்கோ...' என்பார். எங்களுக்கு அவருடைய குறைகளைக் கேட்க பொறுமையும் இருக்காது; நேரமும் கிடையாது. 'ஓஹோ அப்படியா...' என்று, இரண்டு வார்த்தை சொல்லி, நகர்ந்து விடுவோம். ஆனால், தினம், தினம் இப்படி முணுமுணுத்துக் கொண்டிருந்ததால், 'முணுமுணு சாரதி' என்று அவருக்கு பெயர் சூட்டினோம். ஒருநாள், 'குமுதம்' ஆசிரியர், எஸ்.ஏ.பி.அண்ணாமலையிடம் பேசிக் கொண்டிருந்த போது, வாய் தவறி, 'முணு முணு சாரதியிடம் விசாரிக்க வேண்டும்...' என்று சொல்லி விட்டோம். 'அது யார், முணுமுணு சாரதி...' என்று அவர் கேட்க, நாங்கள் அந்தப் பெயரின் காரணத்தை விளக்க வேண்டியதாயிற்று. எந்த பிரச்னையிலும் ஓர் அனுகூலத்தை கண்டுபிடிக்கும் மதிநுட்பம் படைத்தவர், எஸ்.ஏ.பி., 'ஐயையோ... அவரை விடாதீர்கள்; பிடித்துக் கொள்ளுங்கள், நீங்களும், நானும் இந்த நாலு சுவர்களுக்குள்ளே அடைபட்டுக் கிடப்பதால், மக்களின் பிரச்னைகள் நமக்கு தெரிவதில்லை. இவர், பொது மக்களின் பிரதிநிதி. தினம் அவர் என்ன சொல்கிறார் என்பதை கவனித்து கொள்ளுங்கள். மக்களை பெரிதாக பாதிக்கும் குறைகளைப் பத்திரிகையில் வெளியிடலாம்...' என்று சொன்னார், எஸ்.ஏ.பி., அதன் பிறகு, சாரதி சொல்கிற பிரச்னைகளையும், குறைகளையும் காது கொடுத்து கேட்டு, முக்கியமாகவும், சுவாரசியமாகவும் இருக்கும் விஷயங்களை வாரா வாரம் அரை பக்கத்துக்கு எழுதி, 'முணுமுணு' என்று அந்த பகுதிக்கு தலைப்பும் வைத்தோம். - நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !