திண்ணை!
கடந்த 1940ல், பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் நடந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மற்றவர்களின் நேரத்தையும் சேர்த்து, 'வளவள'வென்று பேசிக்கொண்டே இருந்தார். அவரது பேச்சை எப்படி நிறுத்துவது என்று தெரியாமல் அனைவரும் தவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பிரதமராக இருந்த, வின்ஸ்டன் சர்ச்சில் குறுக்கிட்டு, 'இந்த அபார மேதையைப் பாராட்டி ஒரு விழா எடுக்க நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தால், நன்றாக இருக்கும்...' என்றார். அதைக்கேட்டு உறுப்பினர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். விடாமல் பேசிக்கொண்டிருந்த அந்த எதிர்க்கட்சி உறுப்பினரும், குழப்பத்தோடு, சர்ச்சிலைப் பார்த்தார். உடனே சர்ச்சில், 'ஒன்றுமே இல்லாத விஷயத்தை இவ்வளவு நேரம் எடுத்து, ஏராளமான வார்த்தைகளில் சொல்லக்கூடிய அபார மேதையாக இவர் திகழ்கிறார். இந்தப் பேச்சுக்கலையை இவரிடமிருந்து நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும்...' என்றார். அவரது பேச்சில் இருந்த கிண்டலை உணர்ந்து அனைவரும் சிரிக்க, உடனே தம் பேச்சை நிறுத்தி கொண்டார் அந்த, 'வளவள' எதிர்க்கட்சி உறுப்பினர். ******** சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஈ.வெ.ரா.,வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டனர். கூட்டம் முடியும் சமயத்தில், கூட்டத்திலிருந்த ஒரு நபர் துண்டுச்சீட்டை ஈ.வெ.ரா.,விடம் கொடுத்து சென்றார். துண்டுச்சீட்டைப் பார்த்த, ஈ.வெ.ரா., அதை அருகிலிருந்த, அண்ணாதுரையிடம் காண்பித்தார். அதில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை படித்துவிட்டு சிரித்த, அண்ணாதுரை எழுந்து சென்று, 'மைக்'கில், கூட்டத்தினரைப் பார்த்து, 'இங்கு யாரோ ஒருவர் துண்டுச்சீட்டில், தன் பெயரை மட்டும் எழுதி கொடுத்திருக்கிறார். ஆனால், கேள்வி எதுவும் எழுதவில்லை. இப்போது, அந்தச் சீட்டை திரும்ப கொடுத்தனுப்புகிறேன். அது யாருடைய பெயரோ, அவர் மேடைக்கு வந்து தன் கேள்வியை கேட்கலாம்...' என்று கூறி, அந்த துண்டுச் சீட்டை ஒருவரிடம் கொடுத்தனுப்பினார். ஒருவர் கூட எழுந்து மேடைக்கு வரவில்லை. அந்த துண்டுச் சீட்டில், 'நான் ஒரு முட்டாள்' என்று எழுதப்பட்டிருந்தது. ********* ஒரு முறை, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில், காலையில் எம்.கே.தியாகராஜ பாகவதர் கச்சேரியும், அதற்கு முந்தைய நாள் மாலை, கிருபானந்த வாரியார் கச்சேரியும் நடந்தன. பிறகு இருவரும், கோவைக்கு ரயிலில் முதல் வகுப்பில் புறப்பட்டனர். அப்போது, 'நான் திரைப்படம் எடுக்க போகிறேன், கதை தேவைப்படுகிறது. உங்களுக்கு தெரிந்த நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள்...' என்று வாரியாரிடம் கேட்டார், பாகவதர். வாரியாரும், நான்கு கதைகளை அவருக்கு சொன்னார். அதில், ஒரு கதை, சிவகவி. பாகவதருக்கு மிகவும் பிடித்திருந்தது. பிறகு, அந்த கதையை சிவகவி என்ற பெயரிலேயே திரைப்படமாக எடுத்தார். அப்படம் பாகவதருக்கு, 'சூப்பர் ஹிட்' படமாகவும் வெற்றி பெற்றது. ******** ஒரு சமயம், சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார், பாரதியார். அவரது வீரமிக்க பேச்சைக் கேட்க, ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும், விழா ஏற்பாட்டாளர், பாரதியை அணுகி, 'உங்களுக்கு சாப்பிட, என்ன வேண்டும்?' என்று கேட்டார். 'எனக்கு, வீரப் பலகாரங்கள் வேண்டும்...' என்றார், பாரதியார். 'வீரப் பலகாரமா... அது என்ன?' என்று ஆச்சரியத்தோடு கேட்டார், விழா ஏற்பாட்டாளர். 'பஜ்ஜி, மெதுவடை, இட்லி ஆகியவை மென்மையாக இருப்பதால், இவை கோழைப் பலகாரங்கள் எனப்படும். பக்கோடா, காராபூந்தி, முறுக்கு ஆகியவற்றை வாயில் போட்டால், 'கடக் முடக்' என்று மெல்ல வேண்டும். 'இவை பற்களுக்கு கடினமான வேலையைக் கொடுப்பதால், இவையெல்லாம் வீரப் பலகாரங்கள் எனப்படும்...' என்றார், பாரதியார். சாதாரண உணவுப் பொருட்களுக்கும் கவித்துவமான உதாரணம் தருகிறாரே, என்று வியந்தார், அந்த விழா ஏற்பாட்டாளர். நடுத்தெரு நாராயணன்