அந்துமணி பா.கே.ப.,
பா - கேஅலுவலக மொட்டை மாடி... மாலை, 6:00 மணி அளவில், டீ கடை பெஞ்ச் நாயகர்களுடன் நானும், லென்ஸ் மாமாவும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த ராமசாமி அண்ணாச்சி, 'என்னப்பா, வானத்தில் இவ்ளோ, 'சர்ச்லைட்' பறந்துட்டு இருக்கு...' என்றார்.அனைவரும் அதிர்ந்து, வானத்தை அண்ணாந்து பார்த்தோம். 'டென்ஷன்' ஆன, லென்ஸ் மாமா, 'ஓய்... 'சர்ச்லைட்' இல்ல. 'சர்ச்லைட்' என்றால், காடு, கடல் மற்றும் மலை போன்ற இருள் சூழ்ந்த இடங்களில் மறைந்துள்ளவர்களை கண்டுபிடிக்க, நாலா திசைகளிலும் சுற்றி சுழன்று ஒளி வீசும், சக்திவாய்ந்த மின் விளக்குகள்.'ராக்கெட் மூலமா விண்வெளிக்கு அனுப்பறது, 'சாட்டிலைட்!' இதை, விண்கலம்ன்னு தமிழ்ல சொல்லுவாங்க. மேலும், இப்ப பறந்துட்டு இருப்பது, 'டிரோன்'கள். முதல்ல, இப்படி உளர்றதை நிறுத்துங்கோ. ஏடாகூடமா எதையாவது சொல்லி, 'டென்ஷன்' ஆக்குறதே உமக்கு வேலையா போச்சு...' என்று கடுகடுத்தார், லென்ஸ் மாமா.'டிரோன்களா? கல்யாண மண்டபங்களில், அரசியல் மற்றும் சினிமா விழாக்களில், தலைக்கு மேலே, குட்டி விமானம் போல் பறந்து பறந்து, படம் பிடிக்குமே, அதுவா? அதை ஏன் வானத்துல பறக்க விட்டுட்டு இருக்காங்க...' என்றார், அண்ணாச்சி.'டிரோன்களின் பயன்பாடே வேற. சிலர், தங்கள் சுய லாபத்துக்காக, டிரோன்களை சொந்தமாக வாங்கி, இப்படி பறக்க விட்டு, ஏதோ நிலவுக்கே விண்கலத்தை அனுப்பியது போல் பெருமைப்பட்டுக்குவாங்க...' என்றார், லென்ஸ் மாமா.'முன்பு, பட்டம் பறக்க விட்டுட்டு இருந்தாங்க. இப்ப, 'டிரோனா?' நாடு ரொம்ப முன்னேறிடுச்சுப்பா...' என்று கூறி, பெருமூச்சு விட்ட, அண்ணாச்சி தொடர்ந்தார்...'விண்வெளி வீரர்கள் ராக்கெட்ல போறாங்களே... மாசக்கணக்குல பயணமாகணுமாமே... சோறு, தண்ணி எல்லாம் எப்படி எடுத்துட்டு போவாங்க?' என்று, அடுத்த சந்தேகத்தை எழுப்பினார்.'ஐயோ, அண்ணாச்சி... அவங்க, நம்மள மாதிரி எல்லாம் சாப்பிட முடியாது. மாத்திரை வடிவில் தயாரிக்கப்பட்ட உணவுகளை தான் சாப்பிடுவாங்க...' என்றார், அந்தோணிசாமி.'இப்படி வெறும் மாத்திரை சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு ஆகும்...' என்று கவலைப்பட்டார், அண்ணாச்சி.'இதற்கே இப்படி சொன்னா எப்படி? வெட்ட வெளியில், மாசக் கணக்கில் பயணம் செய்யும்போது, உடன் பயணிப்பவரை கொலை செய்யும் அளவுக்கு மன அழுத்தம் ஏற்படவும் வாய்ப்பு அதிகம்ன்னு படிச்சிருக்கேன்...' என்றார், அந்தோணிசாமி.'சரியா சொன்னீர்... அதுபற்றி சமீபத்தில், ஒரு ஆங்கில இதழில் வெளியான கட்டுரையை படித்தது நினைவுக்கு வருகிறது...' என்று கூற ஆரம்பித்தார், குப்பண்ணா:'இருபது அடி நீளம், 18 அடி அகலம் உள்ள அறைக்குள், ரெண்டு பேரைப் போட்டுப் பூட்டுங்க. அவங்களுக்கும், வெளி உலகத்துக்கும் எந்தவித நேரடி தொடர்பும் இருக்கக் கூடாது. எல்லாத்தையும் துண்டிச்சுடணும்.'ரெண்டு மாசம் வரைக்கும் அவங்களை வெளியிலயே விடக் கூடாது. இப்படி செஞ்சுட்டா ஒரு கொலை விழறதுக்கான சூழ்நிலையை உருவாக்கியாச்சுன்னு அர்த்தம்...' வாலரி நியுமின் என்ற ரஷ்ய விண்வெளி வீரர் எழுதி வச்சிருக்கிற டைரி குறிப்பு இது. 1980ல், இன்னொருத்தருடன் விண்வெளிக்குப் போய் திரும்பி வந்தவர், இவர்.ராக்கெட்ல விண்வெளிக்குப் போய் கொஞ்ச நாள் அங்கேயே இருந்துட்டு திரும்பி வருபவர்கள், அப்படித்தான் ஒரு மாதிரியா ஆயிடறாங்களாம்; அவங்க மனநிலை ரொம்பவும் பாதிக்கப்படுதாம்.ராக்கெட்ல ரொம்பவும் துணிச்சலாத்தான் புறப்படறாங்க. இருந்தாலும், அது போற பாதையோ எல்லை இல்லாமல் விரிஞ்சி கிடக்கிற வானம்.நெஞ்சு நிறைய இழுத்து சுவாசிக்கிறதுக்குக் காத்தும் கிடையாது. பகலா இருந்தா, கடுமையான வெப்பமும், இரவா இருந்தா, குளிர் கடுமையாகவும் இருக்கலாம்!ராக்கெட், ஒரு சின்ன கூடு தானே! அதில், சில சமயம் தனியாவே போக வேண்டியிருக்கும். உள்ளேயிருந்து அழுதாலும், சிரிச்சாலும் தரையிலயிருந்து தான் பதில் வரணும். சில சமயம், ரெண்டு பேரா போனாலும், அப்பவும் பிரச்னை தீராது. ஒரே மாதிரியான வாழ்க்கை. அடுத்து என்ன நடக்குமோங்கிற அபாய உணர்வு. இது எல்லாம் சேர்ந்துக்கிட்டு, அவங்க மனசை என்னமோ பண்ணும். ஒருத்தருக்கு இன்னொருத்தருடைய போக்கு சகிக்க முடியாததாக கூட ஆயிடும். கடந்த, 1982ல், வாலண்டின் வித்தலிவித் லெபேதேவ் மற்றும் அனதோலி பெரேஜோவோய் என, இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்கள், ஒரே விண்கலத்தில் புறப்பட்டாங்க.அதனுள் அடி வச்சதுலயிருந்தே அவங்க ரெண்டு பேருக்கும் ஆகாம போயிட்டுதாம். ரெண்டு பேரும் பேசிக்கிறதை தவிர்த்திருக்காங்க, ரொம்பவும் அவசியம்ன்னு வந்தா ஒரு வார்த்தை, ரெண்டு வார்த்தை பேசிக்குவாங்களாம். அவ்வளவு தான். அவங்க ரெண்டு பேரும், ஆகாயத்துல அமைந்துள்ள, விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலேயே, 211 நாட்கள் இருந்தாங்க. பூமியிலயிருந்து யாராவது அங்கே போனா, அவர்கிட்ட ரெண்டு பேரும் சந்தோஷமா பேசுவாங்களாம்; சந்தோஷமா இருக்கறதாவும் காட்டிக்குவாங்களாம். இப்படியே பல்லைக் கடிச்சுக்கிட்டு, 211 நாளையும் ஓட்டிப்புட்டு, தப்பிச்சோம் பிழைச்சோம்ன்னு பூமிக்கு வந்து சேர்ந்தாங்களாம். அந்த ரெண்டு பேர்ல ஒருத்தரான, லெபேதேவ், இதையெல்லாம் டைரியில் குறிச்சு வச்சிருக்கார். அது, 1983ல், சோவியத் யூனியனில் புத்தகமாக கூட வந்திருக்கு!விண்வெளி வீரர்கள், தரை இறங்கின உடனே, அவங்க ரத்தத்தை சோதிச்சுப் பார்க்கறப்போ, அதுல, ஹைட்ரோ கார்டிசோன் மற்றும் காட்டிகோலமின் என்ற ரசாயன பொருள் அதிகமாயிருப்பது, தெரிய வந்துள்ளது.இதெல்லாம், மனிதர்கள் பதற்றம் அடையறப்போ உடம்புல இயல்பா சுரக்கிற வேதியியல் பொருட்கள். மனம் ஒருநிலைப்பட்டால், இந்தப் பொருட்கள் இயல்பாவே மறைஞ்சுடும். ஆனா, விண்வெளி வீரர்கள் ரத்தத்துல இந்தப் பொருட்கள் நிரந்தரமா இருக்குமாம். அதனால, அவங்க சிடுமூஞ்சி ஆயிடறாங்களாம். கூட வர்றவங்க செய்யிற சின்ன தப்பையும் அவங்களால பொறுத்துக்க முடியாது என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.- இப்படி குப்பண்ணா சொல்லி முடிக்கவும், 'ஓஹோ... இதில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா? விண்வெளி வீரர்கள், தாய் நாட்டுக்காக, தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிடுறாங்கன்னு தான் சொல்லணும்...' என்றார், அந்தோணிசாமி.மனிதனின் தேடல்கள் நீண்டுகொண்டே போகும்போது, சில தியாகங்களை செய்யத்தான் வேண்டியுள்ளது என்று, நினைத்துக் கொண்டேன்.'சரி... சரி... நாம இந்த பூமியில் சஞ்சரிக்க வேண்டியுள்ளது. பசி வயிற்றை கிள்ளுது. கிளம்புங்க, வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு, சுகர் மாத்திரை சாப்பிடணும்...' என்று அண்ணாச்சி கூற, அத்துடன் கூட்டம் கலைந்தது.