விசேஷம் இது வித்தியாசம்: சொர்க்கவாசல் என்பது என்ன?
டிச.,30 - வைகுண்ட ஏகாதசிசொ ர்க்கவாசல், பரமபத வாசல் என்றெல்லாம் சொல்கின்றனரே... அது, எங்கே இருக்கிறது? நம்மால் காண இயலாத திவ்ய தேசமான, வைகுண்டத்தில். திருமாலின் நாபிக்கமலத்தில் இருந்து பிறந்தவர், பிரம்மா. இவருக்கு படைக்கும் தொழில் வழங்கப்பட்டது. ஒருமுறை, திருமாலிடம், 'எனக்கு வேலைப்பளு அதிகமாகி விட்டது. படைத்து படைத்து கை ஓய்ந்து விட்டது...' என, பெருமை அடித்தார், பிரம்மா. அதாவது, திருமாலை விட தானே உயர்ந்தவன் என, மறைமுகமாகக் குத்திக் காட்டினார். பிரம்மனுக்கு பாடம் கற்பிக்க எண்ணினார், திருமால். மது, கைடபர் என்ற, இரு அரக்கர்களை உருவாக்கினார். அவர்கள், பிரம்மனை தொந்தரவு செய்தனர். படைப்புக்கு ஆதாரமான வேதங்களை பறித்தனர். படைப்பு கலன்களை அழித்தனர். பிரம்மாவை பல விதத்திலும் தொந்தரவு செய்தனர். துன்பம் தாளாமல், திருமாலிடம் ஓடினார், பிரம்மா. 'ஐயனே! என் நிலைமையை பாருங்கள்...' என, புகார் செய்தார். 'ஆக, நீ சாதாரண ஆள் என்பதைப் புரிந்து கொண்டாயா, பிரம்மனே! நாலு தலை இருக்கிறது என்பதற்காக, நான்கிலும் கர்வத்தை ஏற்றிக் கொள்ளக்கூடாது. எவ்வளவு உயர்ந்த பணியாக இருந்தாலும் சரி, வேலைப்பளு என்றெல்லாம் ஒதுங்கக்கூடாது. கொடுக்கப்பட்ட பணியை இஷ்டத்துடன் செய்தால், அந்தப்பணி எளிதாக இருக்கும். சரி, மது, கைடபரை நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார், திருமால். அந்த அசுரர்களை அழைத்து, 'நான் உங்களை படைத்ததற்கான உத்தேசம் முடிந்து விட்டது. நீங்கள் கேட்கும் வரம் தருகிறேன், என்ன வேண்டும்?' என்றார். 'நீ தரும் வரம் எங்களுக்கு தேவையில்லை. சக்தி மிக்க நாங்கள், உனக்கு வரம் தருகிறோம். என்ன வேண்டும்?' என, கேட்டனர். 'நீங்கள், என் கையால் அழிய வேண்டும்?' என்றார், புத்திசாலியான மாயவன். சம்மதித்தனர், அரக்கர்கள். போர் நடந்தது; அவர்கள் கொல்லப்பட்டனர். அந்த அரக்கர்கள் மீண்டும் உயிர் பெற்று எழலாம் என கருதிய, திருமால், அவர்களை வைகுண்டத்துக்கு இழுத்துச் சென்றார். அங்கே போனவர்கள் திரும்ப வரவே முடியாது. ஆனால், புண்ணியவான்கள் மட்டுமே, வைகுண்டத்தின் கிழக்குவாசல் வழியாக நுழைய முடியும். இவர்கள் பாவிகளாயிற்றே! எனவே, பகவான் வைகுண்டத்தின் வடக்கே ஒரு வாசலை உருவாக்கினார். அதன் வழியே வெளியே வந்த அவர், மது மற்றும் கைடபரை இழுத்துச் சென்றார். இதைத்தான், சொர்க்கவாசல் என்கின்றனர். எல்லா பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் கோவிலின் வடக்கே இருப்பது இதனால் தான். இந்த கலியுகத்தில் எல்லாருமே பாவிகள் தான். நம்மையும் மது, கைடபரை போல் வைகுண்டத்துக்குள் இழுத்துச் செல்ல வேண்டும் என்பதற்காத்தான், அந்த வாசல் முன் நின்று நாம் பெருமாளை வணங்குகிறோம். தவறே செய்தாலும், திருமாலின் அருள் இருந்தால் சொர்க்கம் கிடைக்கும். தி. செல்லப்பா