உள்ளூர் செய்திகள்

வறுமை நீங்க வேண்டுமா?

எங்காயினும் வரும் ஏற்றவர்க்கு இட்டது -என்பது, அருணகிரிநாதர் வாக்கு. யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை என்பது, திருமூலர் திருமந்திரம். யாருக்கு, எங்கு, எதைக் கொடுத்தாலும், அது தவறாமல் பலனளித்து, நம்மை காக்கும். சிவனடியார் ஒருவர், அதிகாலையில் எழுந்து, நீராடுவது, விபூதி, -ருத்திராட்சங்கள் அணிந்து, முறையாக ஜபம் செய்வார். சிவநாமம் சொல்லியபடியே, கோவில் சென்று, நெய்யாடியப்பருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குவதை, தவறாமல் செய்து வருவார்.நாளாக நாளாக, வறுமை அவரைப் பீடித்தது. அதை லட்சியம் செய்யாமல் அடியாரும், தன் வழிபாட்டை தொடர்ந்தார். ஒருநாள், கோவில் செல்லும்போது, 'குபேரனையே தோழனாக கொண்ட சிவபெருமான், இன்னும் நம் குறையை தீர்க்கவில்லையே... ஏன்?' என்று நினைத்தவர், அரனை தொழுது, வெளியில் வந்தார். அங்கே, ஏராளமாக கீரை விளைந்திருந்தது. அவற்றில் கொஞ்சம் பறித்து, கோபுரத்தை நோக்கிக் கைகளை கூப்பினார்.யாரோ அழைக்கும் குரல் கேட்டது; திரும்பிப் பார்த்தால், அங்கே ஒரு துறவி நின்றிருந்தார். 'நாமே வறுமையில் இருக்கிறோம்... இந்த துறவி, நம்மிடம் என்ன கேட்பாரோ...' என்று நினைத்தார், சிவனடியார்.'என்ன... நெய் தீபம் ஏற்றி, அதற்கு பதிலாக கீரையை உனக்காக எடுத்துக் கொண்டாயா... நாம் செய்வதை சிவன் அறிவார்; நம் நிலைமையையும் அவர் அறிவார்; எல்லாம் சிவனே...' என்றார். அடியாருக்கு, 'திக்'கென்றது.'சே... என்ன தவறு செய்து விட்டோம்... நம் பசி தீர, கோவிலிலிருந்து கீரையை பறித்து விட்டோமே. துறவி கேட்டதில், தவறே இல்லை. நாம் செய்தது தான் தவறு...' என, வருந்தினார்.கையிலிருந்த கீரையை, கோவில் வாசலிலேயே வைத்தார். அதே விநாடியில், பசு ஒன்று வந்து, கீரையை உண்ணத் துவங்கியது. அதைப் பார்த்த சிவனடியார், துறவியின் வார்த்தைகளை நினைத்தபடியே வீடு திரும்பினார்.இரவு உறங்கும்போது, அடியார் கனவில் நெய்யாடியப்பர் காட்சி தர, கூடவே கீரை தின்ற பசுவும் காட்சி தந்தது; 'நான் தான் சிவபெருமானை கூட்டி வந்தேன்...' என்று சொல்லவும் செய்தது. 'பக்தனே... வேண்டியதை கேள்...' என்றார், நெய்யாடியப்பர்.அடியாருக்கு மெய் சிலிர்த்தது. 'சிவபெருமானே... தேவை ஏதுமில்லை. இனிமேல் சிவன் சொத்தைத் தொட மாட்டேன். தெரியாமல் தவறு செய்து விட்டேன். உங்களை தரிசித்ததே போதும்...' என்றார்.கனவு கலைந்தது. மறுநாள் காலை, வழக்கம் போல, கோவில் சென்று வெளியே வந்த சிவனடியாரிடம், வாசலில் காத்திருந்த அரச சேவகர் பணிந்து, 'தங்களை உடனே அழைத்து வரும்படி, அரசர் உத்தரவு இட்டிருக்கிறார்...' என்றார். அவரை அழைத்துப் போய், அரசர் முன் நிறுத்தினார். அவரை வணங்கிய அரசர், 'அடியார் ஒருவரை வணங்கி விட்டு, தினமும் உன் பணிகளை துவங்கு என்று, சிவபெருமான் என் கனவில் வந்து கட்டளையிட்டார். இவ்வூரில் தலைசிறந்த சிவனடியார் நீங்கள்... இனி, தினமும் தாங்கள் வந்து, எனக்கு தரிசனம் தந்தருள வேண்டும்...' என்று வேண்டினார்.மேலும், ஏராளமான செல்வங்களை தந்த அரசர், அன்போடு அடியாரை வழியனுப்பி வைத்தார்.அறியாமலேயே, ஒரு பசுவிற்கு உணவாக கீரை தந்த அடியாருக்கு, அரன் அருளிய இத்திருத்தலம், 'திருநெய்த்தானம்!' சப்த விடங்க தலங்களில் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாற்றிற்கு அருகே உள்ளது. அடியாரின் வறுமை தீர்த்த அந்த அரன், நம் வறுமையையும் தீர்க்க வேண்டுவோம்! பி.என்.பரசுராமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !