ரயில் நிலையங்களில் முகாமிடுவோம்!
'இரவு 9.00 மணிக்கு ரயில் என்றால் 8.00 மணிக்கே ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும்...' என்பார், என் சித்தப்பா. 'இவ்வளவு சீக்கிரம் போய் என்ன செய்றது சித்தப்பா...' என்கிற கேள்விகளுக்கெல்லாம் பெரிய சமாதானம் இராது.இத்தனைக்கும், போக்குவரத்து நெரிசல் இல்லாத காலம் அது. ஏதோ 144 தடைச்சட்டம் அமலில் இருப்பதுபோல், சாலைகள் வெறிச்சோடிக் கிடக்கும். அப்படிப்பட்ட காலத்தில், ஒரு மணி நேரம் முன் போய் விட வேண்டும் என்கிற என் சித்தப்பாவின் செயல், எங்களுக்கு வியப்பையே அளிக்கும்.நேர நிர்வாகம் பற்றிய முக்கியத்துவம் அறியப்படாத, உணரப்படாத அந்தக் காலத்தில், அவர் பின்பற்றிய இந்த கொள்கையை, இக்காலத்திற்கு அப்படியே பொருத்தலாம்.ஒருமுறை, சென்னை, சென்ட்ரலில் ரயில் பிடிக்க வேண்டும்; ரயிலுக்கு, 25 நிமிடங்கள் இருக்கையில் சில நிமிடங்களில் ரயில்வே ஸ்டேஷன் வந்து விடும் என்றாலும், ரயிலைக் கோட்டை விட்டு விடுவோமோ என்கிற அளவிற்கு போக்குவரத்து நெரிசலை பார்த்தேன்... காரை விட்டு இறங்கி, மூச்சிரைக்க ஓடி, ரயிலைப் பிடிக்கும்படி ஆகிவிட்டது.இச்சம்பவத்திற்குப் பின், இனி சித்தப்பாவின் கொள்கை தான் சரி என்ற முடிவு செய்தேன். ஒருமணி நேரம் முன் சென்று, என்ன செய்வது என்கிற கேள்விக்கு, வேறு விதமான விடை கண்டேன்.முன்னதாக சென்றடைவதன் மூலம், என் மொபைல் போனில் இருக்கும் தேவையற்ற குறுஞ்செய்திகளை நீக்குவது, நாட்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்த தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகளை மொபைலுக்கு மாற்றுவது போன்ற வேலைகளை செய்தேன். மேலும், என்னுடன் பேச ஆசைப்பட்டு, இயலாமல் போன வாசக, வாசகியர் மற்றும் பண உதவி பெற்று, திரும்பத் தராதிருந்த நண்பர்கள், உறவினர்களை மொபைலில் அழைத்து பேசுவேன்.கையில் எடுத்து வந்திருந்த சில வார, மாத இதழ்களைப் படித்து முடிப்பேன்.ஒருமுறை, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பான்கார்டு எல்லாவற்றையும், என் மொபைலில் படம் எடுத்து பதிவு செய்து கொண்டேன். இதைச் செய்யத் திட்டமிட்டு, பல நாள் செயல்படுத்தாமலிருந்த மனக்குறை, ஓர் ரயில் நிலையத்தில் தான் நீங்கிற்று.பிறிதொரு முறை, சென்ட்ரலில் பழைய உணவுக்கடைகள் சில நீக்கப்பட்டு, புதிதாக வந்திருந்த உணவுக் கடைகளையும், மற்ற சில சிறிய கடைகளையும் பார்வையிட்டேன்; பயணத் தேவைகள் சிலவற்றை மறந்து விட்டால், அவற்றை இங்கே வந்து வாங்கிக் கொள்ளலாம் என்கிற புதிய செய்தியை, மனதில் பதிந்து கொண்டேன்.ராமகிருஷ்ண மடத்தின் புத்தக கடையில் புதிய வெளியீடுகளைப் பார்வையிட்டு தேவையானவற்றை வாங்கினேன்.ரயில் நிலையத்தில், மாடியில் உள்ள காவல் நிலையத்தை பார்வையிட்டேன். சக பயணிகளை உன்னித்தேன். வாழ்க்கையைப் படித்தது போல் உணர்ந்தேன்.ரயில்வே நிர்வாகம் செய்திருந்த புதிய வசதிகளை நோட்டமிட்டு மனதில் நிறுத்தினேன்.பல சந்தர்ப்பங்களில், வீட்டிலிருந்து புறப்படும் போது ரயிலலைப் பிடித்து விடுவோமா என்கிற ஐயப்பாடு, வரும் வழியெல்லாம் எனக்கு வருவது உண்டு; இப்போதெல்லாம், அது இல்லை என்பதோடு, பதற்றமும் போய் விட்டது. ஓட்டுனர் அவசரப்பட்ட இடத்தில், மெதுவாகப் போகலாம்... ஒர அவசரமும் இல்லை; நிறைய நேரம் உள்ளது என்று கூற முடிகிறது. இதற்கு முன், இப்படி ஒர வாககியத்தை உதிர்த்ததாக நினைவில் இல்லை.வழியில் ஏற்படும் எதிர்பாராத இடைஞ்சல்கள், சென்ற இடத்தில் ஏற்படக்கூடிய தாமதங்கள், பதற்றமற்ற பயணம், பயணச்சீட்டு, புகைப்பட ஆதாரம் போன்ற ஏதாவது ஒன்றை மறந்து, பாதி வழி வந்த பின், அதை எடுப்பதற்காகத் திரும்பவும் வீடு வந்து போகுமளவு நேரம் ஆகியவற்றின் கோணத்தில், வெகு முன்னதாகப் புறப்படுவதில் தவறே இல்லை.இன்னொன்றும் சொல்லட்டுமா... நம்மவர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகச் செல்வது என்று முடிவெடுத்தால் தான், 20 நிமிடமாவது முன் இருப்பர். 20 நிமிடம் போதுமெனத் திட்டமிட்டால், மறுபடி கடைசி நிமிடம் தான்.வீட்டில் செலவழிக்கிற நேரத்தை, ரயில் மற்றும் விமான நிலையங்களில் செலவழித்தால், என்ன என்கிற என் கேள்வியும், ஒரு நல்ல சமாதானம் தான்.- லேனா தமிழ்வாணன்