உள்ளூர் செய்திகள்

தவப்பயனா, உயிரா எது பெரியது?

முனிவர்களும், தேவர்களும் தவம் செய்து, மிக உயர்ந்த நிலையை அடைந்ததாக, இதிகாசங்களும், புராணங்களும் கூறுகின்றன. அத்தகைய தவத்தை விட, உயிர் சிறந்தது. இதை அம்பிகையே விளக்குகிறார்.அடர்ந்த வனத்தில் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை, அவ்வப்போது அந்த வனாந்திரத்தில் உலாவி வருவார். ஒருநாள், அவ்வாறு உலாவும் போது, 'காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்...' என்று அலறும் குரல் கேட்டது.குரல் வந்த திசை நோக்கி ஓடினார் அம்பிகை. குளத்தில், சிறுவன் ஒருவனின் காலை, முதலை ஒன்று பற்றியிருந்தது.அதனிடமிருந்து தப்பிப்பதற்காக போராடிக் கொண்டிருந்தான் சிறுவன். முதலையிடம், அவனை விடுவிக்கும்படி வேண்டினார் அம்பிகை.மறுத்த முதலை, 'இரவு நெருங்குவதால், வேறு இரை தேட முடியாது. இவனை கொண்டு போனால் தான், எனக்கு இன்றைய உணவு கிடைக்கும்...' என்று, தன் பக்கத்து நியாயத்தைக் கூறியது.'முதலையே... என் தவப்பலனையே உனக்கு அளிக்கிறேன். இச்சிறுவனின் உயிரை விட்டுவிடு...' என்றார் அம்பிகை.'தாயே... என்ன சொல்கிறீர்கள்... பல காலம் செய்து வந்த தவப்பலனை, இச்சிறுவனின் உயிரைக் காப்பதற்காக இழக்கலாமா...' என்றது முதலை.'தவத்தை இழந்தால், மறுபடியும் தவம் செய்து தவவலிமையை பெற முடியும்; ஆனால், உயிரை இழந்து விட்டால், மறுபடியும் பெற முடியாது. ஆகையால், தவத்தை விட, இச்சிறுவனின் உயிரே முக்கியம்...' என்றார் அம்பிகை.அடுத்த விநாடி, சிறுவனுடன், முதலை மறைந்தது. அங்கே, ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான், 'தேவி... தவத்தை விட சிறந்தது, ஓர் உயிரைக் காப்பாற்றுவது எனும் உன் நோக்கத்தை வெளிப்படுத்தவே, யாம் இவ்வாறு செய்தோம்...' என்றார்.அம்பிகை தன் சக்தியை வெளிப்படுத்தாமல், தான் பாடுபட்டு சேர்த்த தவப்பலனையே ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்காக இழக்கத் துணிந்தாரென்றால், உயிரின் அருமையை, சொல்லவும் வேண்டுமோ!நாம், பிற உயிரை காப்பாற்றுகிறோமோ இல்லையோ, அடுத்த உயிர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தால் போதும்; நம் துன்பங்கள் நீங்கும்!பி.என்.பரசுராமன்திருமந்திரம்!வாயொன்று சொல்ல மனமொன்று சிந்திக்கநீயொன்று செய்யல் உறுதி நெடுந்ததாய்தீயென்றிங்கு உன்னைத் தெளிவன தெளிந்தபின் பேயென்றிங்கு என்னைப்பிறர் தெளியாரே!விளக்கம்: வழிபாட்டின் போது வாய் எதையோ சொல்ல, மனம் வேறு எதையோ சிந்திக்க, உடம்பு, எதையோ செய்து கொண்டிருக்கிறது. அவ்வாறு இல்லாமல், மனம், மொழி மற்றும் மெய் எனும் மூன்றும், வழிபாட்டில் ஆழமாக பதிந்தால், ஜோதி ஸ்வரூபனான இறைவனை உணர்ந்து, அவர் அருளைப் பெறலாம்!கருத்து: இறைவன் அருளைப் பெறுவதில் தான், சிந்தனை இருக்க வேண்டுமே தவிர, புறச் செயல்களில் ஈடுபடக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !