உள்ளூர் செய்திகள்

யார் இந்த லீலா?

நவ.,15, சபரிமலை நடை திறப்புபெண்களில் பலருக்கு, 'லீலா' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும். இது, எந்த தெய்வத்தின் பெயர் என்று உங்களுக்கு தெரியுமா?ஒரு காலத்தில், உலகில், மக்களிடையே, தர்மம் செய்வது குறைந்து வந்தது. தர்மம், எந்த நாட்டில் குறைகிறதோ, அந்த நாட்டை, திருமகளாகிய லட்சுமி விரும்ப மாட்டாள். தான் கொடுக்கும் செல்வம், மற்றவர்களைச் சென்றடைய வேண்டும் என்பதே, அவளின் நோக்கம். அதனால், தர்மத்தை தழைக்கச் செய்ய பிரம்மா, திருமால், சிவன் ஆகியோர் இணைந்து, தங்கள் சக்தியால், ஒரு குழந்தையை உருவாக்கி, அவருக்கு, 'தத்தன்' என்று பெயரிட்டு, பூலோகத்தில், பிறக்கச் செய்தனர். அதே வேளையில், முப்பெரும் தேவியரான, சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோர், ஒரு தேவமகளை உருவாக்கி, அவளை, காலவர் என்ற முனிவருக்கு பிறக்கச் செய்தனர்.காலவர், தன் மகளுக்கு, 'லீலா' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். உரிய பருவத்தில், தத்தனுக்கு, லீலாவை திருமணம் செய்து வைத்தார். ஆனால், ஆன்மிக நாட்டம் கொண்ட தத்தனுக்கும், உலக ஆசைகளில் திளைத்த லீலாவுக்கும், மண வாழ்க்கை ஒத்துப் போகவில்லை.ஒருநாள், அவர்களுக்குள், இது தொடர்பான தர்க்கம் வலுத்தது. தத்தன் அவளைப் பிரிந்து, தவ வாழ்வு வாழப் போவதாக கூறினார். அதற்கு, லீலா, 'உங்கள் மகிஷியான (இல்லத்தரசி) நான் சொல்கிறேன். என்னை விட்டு நீங்கள் போகக் கூடாது...' என்று, உத்தரவிட்டாள். இதனால், தத்தனுக்கு கோபம் வந்து, 'பெண்ணே... மகிஷி என்ற சொல், உனக்கு பொருத்தமானது தான். மகிஷம் என்றால், எருமை என்பதை அறிவாயா... இன்று முதல், நீ எருமையாக கடவது...' என்று, சாபமிட்டார்.தத்தனின் சாபத்தால், லீலா, எருமை முகத்துடன், கரம்பன் என்பவனின் மகளாக பிறந்தாள். இவளை, 'மகிஷி' என்று அழைத்தனர். இவள், தேவர்களை அடக்க, தவம் செய்தாள். அந்த தவத்தின் பலனாய், பிரம்மா காட்சியளித்த போது, அவரிடம், 'தன் பெற்றோருக்கு சேவகம் செய்த, 12 வயது பாலகனால் மட்டுமே, தன் உயிர் போக வேண்டும்' என்ற வரத்தைப் பெற்றாள். ஒரு சிறுவனால், தன்னை அழிக்க முடியாது. அப்படியே அழிய வேண்டுமென்ற விதி இருந்தாலும், 12 வயதுக்குள், அவனால், பெற்றோருக்கு சேவை செய்திருக்க முடியாது என்று நினைத்தே, இவ்வரத்தைப் பெற்றாள்.அசுர பலம் பெற்ற மகிஷி, தேவர்களை, தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள். அவளிடமிருந்து, தேவர்களை காப்பாற்ற சிவனும், மோகினியாக மாறிய விஷ்ணுவும் இணைந்து பெற்ற பிள்ளை தான் தர்மசாஸ்தா. 12 வயது பாலகனான அவர், தன் தாய்க்கு, புலிப்பால் கொண்டு வந்து, சேவை செய்தவர். சாஸ்தா, மகிஷியுடன் போர் புரிந்து, அவளைத் தோற்கடித்தபோது, அவளுக்கு, முற்பிறவி நினைவு வந்தது. சாஸ்தா அவளிடம், 'நீ முப்பெரும் தேவியின் அம்சமாய் பிறந்தாலும், முற்பிறப்பில், உன் கணவன் சொல் கேட்க மறுத்தாய். இருப்பினும், இப்பிறப்பில், என் ஸ்பரிசத்தால், நீ மனித முகம் பெற்று மோட்சம் அடைவாய்...' என்றார்.பிறவி குணம், அவ்வளவு எளிதில், யாரையும் விடாது. மகிஷி, சாஸ்தாவிடம், 'குடும்ப வாழ்வு என்னும் ஆசை, எனக்கு இன்னும் அடங்கவில்லை. இப்பிறப்பில், நீங்களே எனக்கு கணவனாக வேண்டும்...' என்று வேண்டினாள். அதற்கு, சாஸ்தா, 'பெண்ணே... நான், இந்த சபரிமலையில் குடியிருக்கப் போகிறேன். என்னை வணங்க, கன்னி சாமிகள் (முதன் முதலாக மாலை அணிபவர்) வருவர். எப்போது அவர்கள் வரவில்லையோ, அந்த, ஆண்டில், உனக்கும் எனக்கும் திருமணம்...' என்று, அருள்பாலித்தார்.மகிஷியும், மஞ்சள்மாதா என்ற பெயரில், மாளிகைப்புறம் கோவிலில் தங்கி, சாஸ்தா, தன்னைத் திருமணம் செய்யும் நாளுக்காக காத்திருக்கிறாள்.தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !