உள்ளூர் செய்திகள்

உழைக்கும் நேரம்!

''மறுபடியும் வேலைக்கு போகலாம்ன்னு இருக்கேன். எனக்காக இல்லை. என் நண்பனுக்காக,'' என்றார், சதாசிவம்.சென்ற மாதம் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார். வயது, 58. தனியார் நிறுவனத்தில், 30 ஆண்டு, 'சர்வீஸ்' முடிவுக்கு வந்தது. மாலை போட்டு, பாராட்டி, சிறப்பித்தனர்.அனைவருக்கும் ஸ்வீட், காரம், காபி வாங்கி கொடுத்தார். அவருக்கான ஓய்வூதியத் தொகையை, காசோலையாக கொடுத்து விட்டனர்.'நல்ல முறையில் வேலை பார்த்தீர்கள்; நேர்மையாக செயல் பட்டீர்கள். நீங்கள் விரும்பினால் இன்னும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு செய்யச் சொல்லி, 'ரெகமண்ட்' செய்கிறோம்...' என்றார், அதிகாரி.'உங்கள் எண்ணத்துக்கு நன்றி. ஆனால், எனக்கு இது போதும். உடல் நிலை சரியில்லை. 'சர்வீஸ்' செய்தது போதும்ன்னு, வீட்டில் சொல்லிட்டாங்க. மகன் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டான். மருமகளும் வேலைக்கு போகிறாள். 'குழந்தைகளை பார்த்துக் கொண்டு, மருமகளுக்கு சமையல் வேலையில் உதவியபடி, ஏதாவது ஒரு சத்சங்கத்தில் இணைந்து, தெய்வீகப் பணி செய்து, ஓய்வு காலத்தை கழிக்கலாம்ன்னு இருக்கேன்...' என்றார்.'ஒரு மாதம் அவகாசம்...' என்றார், அதிகாரி.'அதற்கு அவசியம் இருக்காது சார்... என் இடத்துக்கு வேறு ஆளை போடுங்கள். என்னை எதிர்பார்க்க வேண்டாம்...' என்றார், சதாசிவம்.டாக்சி வைத்து, வீட்டில் விட்டுச் சென்றனர்.ஆபீசில் கொடுத்த, காசோலையை மகனிடம் கொடுத்து, 'இனி, நீதான் குடும்பத் தலைவன். எல்லாம் உன் பொறுப்பு...' என்றார்.'அப்பா... நீங்கள் இருக்கும் வரை, குடும்பத்துக்கு நீங்க தான் தலைவர். கடமைகள் மொத்தத்தையும் என் தலையில் கட்டி விடாதீர்கள்...' என்றபடி, காசோலையை வாங்கிக் கொண்டான். 'ரெகுலர் செக் - அப்'புக்கு அழைத்து போனான், மகன். 'பணி ஓய்வு கிடைச்சாச்சு. கூடுமான வரை, 'ரிலாக்சா' இருங்க. 30 வருஷம் உழைத்த உடம்பு, ஓய்ந்து உட்கார அனுமதிக்காது. மறுபடியும் எங்காவது வேலைக்கு போக மாட்டோமான்னு அடம் பிடிக்கும்...' என்றார், டாக்டர்.'எங்க ஆபீசிலேயே ஒரு வருஷம் பணி நீட்டிப்பு தர்றேன்னாங்க...''பார்த்தீங்களா, அந்த அளவுக்கு கடுமையா உழைச்சிருக்கீங்க... பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது பணத்துக்காகவோ மீண்டும் போய் நாற்காலியில உட்கார்ந்துட தோணும்...''இனி, அவரை எங்கும் அனுப்புவதாக இல்லை... எங்களுக்காக நிறைய உழைச்சுட்டார், டாக்டர்...' என்றான், மகன்.'இத்தனை அனுசரணையான மகனும், குடும்பமும் பாக்கியம்...' என்றார், டாக்டர்.இந்த நிலையில் தான், அவருக்கு அதிர்ச்சியான ஒரு தகவல் வந்தது.இரண்டு நாள், வீட்டில் இருந்தவர், மூன்றாம் நாள், பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து போவது, கடை கண்ணி, கோவிலுக்கு போவது என்று செய்ய ஆரம்பித்தார். அதைக்கூட செய்ய வேண்டாம்; தாங்களே பார்த்துக் கொள்வதாக கூறினர், குடும்பத்தினர்.'இதில் சிரமம் ஒன்றுமில்லை. பொழுது போக்காகவும் இருக்கு...' என்றார்.ஒருநாள், பேரனை பள்ளிக்கு அழைத்து போன போது, ஒருவரை சந்தித்தார்.'நீங்க வேலப்பன் வீட்டு டிரைவர் தானே... இந்த ஊர்லயா இருக்கீங்க...' என்றவர், 'வேலப்பன் நல்லா இருக்காரா... பார்த்து ரொம்ப வருஷமாச்சு. சொல்லுங்க, ஒருநாள் அவரை வீட்டில் வந்து பார்க்கிறேன்...' என்றார்.ஆச்சர்யமாக பார்த்த டிரைவர், 'உங்களுக்கு விஷயம் தெரியாதா...' என்று கேட்டு, அவர் சொன்ன செய்தி, சதாசிவத்துக்கு அதிர்ச்சியாக இருந்தது.சதாசிவத்தின் நட்பு வட்டத்தில் முதலாவதாகவும், முக்கியமானவருமாக இருப்பவர், வேலப்பன். வசதியான குடும்பம். அவர் அப்பா, பல்வேறு தொழில்கள் நடத்தி வந்தார்.வேலப்பனும் ஆரம்பம் முதலே அப்பாவுடன் துணைக்கு இருந்து, படித்துக் கொண்டே தொழில் கற்றார். அவரை யாருடனும் சேர விடமாட்டார்கள். சதாசிவத்திடம் மட்டும் விதி விலக்கு. 'சதா, நல்ல பையன்; ஒழுக்கமானவன். இவனைப் போன்றவர்களுடன் மட்டும் தான் சேரணும்...' என்று சொல்லி வைத்தனர்.படிக்கும் காலத்தில், சதாசிவத்துக்கு, நிறைய உதவி செய்திருக்கிறார், வேலப்பன். புத்தகம் வாங்க, பள்ளி கட்டணம் கட்ட, 'டூர்' போக பணம் குறையும்போதெல்லாம் மீதி பணத்தை கொடுத்து உதவுவார்.பள்ளி படிப்பை முடித்ததும், வேலப்பன் வியாபாரத்தில் உட்கார்ந்து விட, சதாசிவம் மட்டும் மேற்படிப்பு முடித்து, வேறு ஊரில், வேலைக்கு போய் சேர்ந்து விட்டார்.அடிக்கடி சந்திக்க முடியாமல் போனது. எப்போதாவது போனில் பேசிக் கொள்வர். சதாசிவத்துக்கு திருமணம் ஆனது. மலேஷியாவில் இருப்பதாக சொன்னார், வேலப்பன்.திரும்பி வந்ததும் நேரில் வந்து வாழ்த்தி, பரிசு கொடுத்துவிட்டு போனார். அவர் கல்யாணத்துக்கு இவர்கள் சென்றனர். இப்படி வீட்டு விசேஷத்திற்காக வர, போக இருந்தனர்.கால ஓட்டத்தால், சந்தித்துக் கொள்வதும், பேசிக்கொள்வதும் குறைந்து போனது. ஆனால், வேலப்பனை நினைத்ததும், மனதில் இனம்புரியாத நெகிழ்ச்சி.'முன்னிலும் பிரமாண்டமாய், வசதியாய், மனைவி மக்களோடு சீரும் சிறப்புமாக தான் இருப்பார். கடவுள், நல்லவர்களை உயர்த்திக் கொண்டுதானே இருப்பார்...' என்று நினைத்திருக்க, டிரைவர் சொன்ன செய்தி, பேரிடியாய் இறங்கியது. தேடி, ஓடினார்.'எத்தனை வருஷத்துக்குப் பிறகு சந்திக்கிறோம்...' என்று சொல்லி, சதாசிவத்தை கட்டி அணைத்துக் கொண்டார், வேலப்பன். பழைய பங்களா இல்லை. ஒதுக்குப்புறமாக ஒரு சந்து. வேதனையோடு பின் தொடர்ந்தார், சதாசிவம். 'எவ்வளவு அழகாக ஆஜானுபாகுவாக இருந்த நண்பன். இப்போது ஒடுங்கிப் போய் விட்டானே...' என, நினைத்து கொண்டார்.அது குறுகலான சந்து. சாக்கடை ஓடியது. பன்றிகளுக்கும், எலிகளுக்கும் குறைச்சல் இல்லை. துர்வாடையுடன் போன அந்த பாதை, ஒரு ஓட்டு வீட்டின் முன் நிறுத்தியது.'மீனா... யார் வந்திருக்காங்க பாரு...' என்று உற்சாகமானார், வேலப்பன்.'வாங்க அண்ணா... வீட்டில் அனைவரும் சுகமா?' என, விசாரித்தாள்.பட்டுப் புடவையில் பார்த்தது. பழைய புடவையில் பார்ப்பது, எத்தனை துரதிருஷ்டம்.'போய், சதாவுக்கு ஒரு காபி போடு... சர்க்கரை துாக்கலா...' என்றவர், 'இது, ஸ்டூல் இல்லை... ஸ்டூல் மாதிரி...' என்றார்.'என்ன நடந்தது... போன வருஷம் கூட ஒருத்தர்கிட்ட விசாரிச்சப்போ, நீங்க ஒட்டுமொத்தமா மலேஷியாவில் குடியேற இருப்பதாக கேள்விப்பட்டேன்.'அதற்குள் ஒருமுறை குடும்பத்தோடு வந்து, உங்களை எல்லாம் சந்திக்கணும்ன்னு இருந்தேன். உங்க டிரைவரை பார்த்தேன். அவர் சொல்லிதான் தெரிந்தது. அதிர்ச்சியாயிருச்சு...' என்று கவலைப்பட்டார், சதாசிவம்.வேலப்பன் முகத்தில், அப்போதும் ஒரு சிரிப்பு.'என்னன்னு சொல்றது. அப்பா இருக்கும்போதே வியாபாரம் முடங்கி போச்சு. கடை, வீடு, வாகனம் அதோடு எங்கள் அப்பாவின் உயிர்... அத்தனையும் ஒரே நாளில் போய், காலம் எங்களை இந்த சாக்கடை ஓரம் ஒதுக்கி விட்டது. 'குடும்பத்தோடு தற்கொலை செய்துக்க தீர்மானிச்சோம். நானும், மீனாவும், வாழ்ந்து முடிச்சவங்க. சக்தி அப்படி இல்லை. டிகிரி படிக்கிறான்...''ஒரு போன் அல்லது யாரிடமாவது சொல்லிவிட்டிருக்கலாம். என் விலாசம் உனக்கு தெரியும்தானே... நான், உனக்கு கடமைப்பட்டவன். உரிமையோடு என்னிடம் உதவி கேட்டிருக்கலாம். நல்ல வீடும், செலவுக்கு பணமும் ஏற்பாடு செய்திருக்க மாட்டேனா...' என்ற சதாசிவம், எடுத்து வந்த பணத்தை, நண்பர் கையில் திணித்தார்.சடாரென்று கையை பின்னுக்கு இழுத்துக் கொண்ட, வேலப்பன், 'யாரையும் சிரமப்படுத்த விரும்பலை. எனக்கு ஒரு குறையும் இல்லை. நான் சின்ன அளவில், 'கார்மென்ட்' கடை நடத்தறேன். கொஞ்சம் வருமானம் வருது. மீனா, வத்தல், வடாம் போட்டு விற்கிறாள். வண்டி ஓடுது.'எங்க நிலையைப் பார்த்து வருந்தவோ, கவலைப்படவோ செய்யாதே... வியாபாரத்தில் விழுவதும், எழுவதும் சகஜம்... இப்ப விழுந்திருக்கோம், எழுந்துடுவோம்...' என்றார்.'அதில் எனக்கு சந்தேகமில்லை. உன் தன்னம்பிக்கை, தைரியம், உழைப்புக்கு நிச்சயம் நீ முன்பு போல் மேலே வந்துவிடுவாய். அதே நேரம் எனக்குன்னு ஒரு கடமை இருக்கு. ஆரம்ப காலத்துல எனக்கு நிறைய உதவிகள் செய்தே...'உங்க வீட்டில், நானும் ஒரு பிள்ளையாய் வலம் வந்திருக்கேன். சாப்டிருக்கேன். அந்த நன்றிக்கு நான், ஏதும் செய்ய வேண்டாமா... விழுந்த உன் வியாபாரத்தை என்னால் துாக்கி நிறுத்த முடியாவிட்டாலும், அந்த நாள் வரும் வரை, என்னால் ஆன உதவியை செய்தே தீருவேன், வேலா... அதை நீ மறுக்க கூடாது. ஆனால், என்னை நன்றி கொன்றவனாக்கி விடாதே...'இந்த பணத்தை வச்சு, சுகாதாரமான இடத்தில் ஒரு வீட்டை வாடகை எடுத்து, அதில் குடி போயிடு. அடுத்த ஒரு வருஷத்துக்கு, மாதம் தோறும் ஒரு தொகை உனக்கு உதவியாய் கொடுக்க முடியும். அதை வைத்து, மகனின் படிப்பை முடி. எஞ்சிய தொகையை வைத்து கடையை அபிவிருத்தி செய்...' என்று அன்பு கட்டளையிட்டு, அவர் மகனை ஆசிர்வதித்தார். 'எங்களுக்கு உதவுவதாக சொல்லி, உன் வீட்டில் சங்கடத்தை உண்டு பண்ணிக்காதே...' என்றார், வேலப்பன்.'என் குடும்பம், ஒரு காலத்தில் நீ செய்த உதவியால் தான் நிமிர்ந்தது. அதனால், அவர்களும் உதவ கடமைப்பட்டவர்களே... என்றாலும், நான் அவர்களை தொல்லைக்கு ஆளாக்க மாட்டேன்.'இப்படி ஒரு சூழலும், தேவையும் வரக்கூடும் என்பதாலோ என்னவோ... என் ஆபீசில் ஒரு வருஷம் பணி நீட்டிப்பு கொடுக்க முன் வந்திருக்காங்க... ஒரு மாச அவகாசமும் கொடுத்திருக்காங்க; நல்லதா போச்சு...' என்றார்.'சிரமப்படுத்திக்கறே, சதா...''உன் துன்பத்திற்கு முன், என் சிரமம் ஒரு பொருட்டே இல்லை...' என்றார், சதாசிவம்.வீட்டில் அனைத்தையும் சொல்லி, அனுமதி வாங்கி, நேராக அலுவலகம் போய், அதிகாரியைப் பார்த்து, ''நான் பணி நீட்டிப்பை ஏத்துக்கறேன் சார்,'' என்றார். ''திரும்பி வரவே மாட்டேன். என் இடத்துக்கு வேற ஆளை போடுங்கன்னு அத்தனை உறுதியாய் சொல்லிட்டு போனீங்க. ஒருநாள் தாமதமாக வந்திருந்தாலும், வேலை கிடைச்சிருக்காது... உங்க இருக்கைக்கு போங்க,'' என்றார், அதிகாரி. ''நன்றி,'' என்றபடி, இருக்கையில் அமர்ந்தார், சதாசிவம். படுதலம் சுகுமாரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !