யாரங்கே... விமானம் உயரட்டும், வானத்தில் பறக்கட்டும்!
அந்துமணியின் தீவிர வாசகரான, கோவையை சேர்ந்த, தீனதயாளன், தன் அமெரிக்க பயண அனுபவத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...அமெரிக்க பயணம் முடிவானவுடன், எனக்கும், என் மனைவிக்கும் ஏற்பட்டது, ஒரு கலவையான உணர்வு தான். திருமணமாகி, மருமகளுடன் இளைய மகன் அமெரிக்கா சென்று, 16 மாதம் ஆகி விட்டது. 'எப்போதடா அவர்களை பார்ப்போம்...' என்ற, ஏக்கம் எங்களை வாட்டி வதைத்தது. எங்கள் ஏக்கத்திற்கான பெரு மருந்தாக, அருவிருந்தாக அமையப் போகிறது இந்த பயணம் என, எண்ணிக் கொண்டோம்!அமெரிக்க துாதரகத்தில், நேர் காணல், விசா, விமான டிக்கெட்...புது துணிகள், பொருட்கள் வாங்குதல், இட்லி, சாம்பார், ரசம், மல்லி, மிளகாய் பொடிகள், வற்றல், வடகம் இவைகளையெல்லாம் எடை பார்த்து, நான்கு பெட்டிகளில், 'பேக்' செய்தல்... இதற்காக, சில நாட்கள் செலவழித்தோம், நானும், மனைவியும்!'காஸ்' மற்றும் இணைய இணைப்பு தற்காலிக நிறுத்தம்... ரேஷன் கார்டு, தகவல் தெரிவித்தல்... என, இன்னும் ஏகப்பட்ட முன்னேற்பாடுகளை முடித்தோம்.என் மனைவி, அடிக்கடி, பெங்களூரு - கோவை ரயிலில் பயணம் செய்த அனுபவம் உடையவள். அதே பழக்கத்தில், விமானத்திலும் ஜன்னலோர இருக்கையை விரும்பினாள். ஆனால், எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கைகளுக்கு அடுத்து, ஜன்னலோர இருக்கையில் ஒரு வெளிநாட்டு பயணி அமர்ந்திருந்தார்.அவரிடம், தனக்கிருந்த சொற்ப ஆங்கில புலமையில், ஜன்னலோர இருக்கையை தானமாக பெற்று, ஏதோ பேரரசன் ஒருவனிடமிருந்து, பெரும் சன்மானத்தை பெற்ற ஒரு புலவனை போல, வெற்றிக் களிப்புடன், மிகுந்த பெருமையுடன், என்னை ஒரு பார்வை பார்த்தாள், என் மனைவி.அந்த நபரும், அவ்வளவு எளிதாக, உடனடியாக, தன் ஜன்னலோர இருக்கையை ஏன் தானம் வார்த்தார் என்பது, அப்போதைக்கு ஆச்சரியமாக தெரிந்தாலும், பிற்பாடு தான் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.விமானத்தில் அவ்வப்போது, பழச்சாறுகளும், காபி, டீ துாள்கள், பால் பவுடர், சர்க்கரை மற்றும் வண்ண வண்ண தீனிகளும் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மேல் அளவில்லா ஆசையும், ஆர்வமும் இருந்தாலும், பயணங்களின் போது, வயிற்றை நம் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்பதால், மிக சொற்பமாகவே அவற்றை பயன்படுத்தினோம்.பத்தரை மணி நேர பயணத்திற்கு பின், விமானம், லண்டன், 'ஹீத்ரூ' விமான நிலையத்தில் இறங்கியது.அமெரிக்காவிலிருந்த மகன், என் மனைவியிடம் முன்பு பேசிய பேச்சு, அசரீரியாய் காதுகளில் ஒலித்தது...'அம்மா... லண்டனில், நீங்கள் விமானம் மாற வேண்டும். மூன்று மணி நேரம், லண்டனில், 'பிரேக்' இருக்கிறது. என்றாலும், முதல் முறை வருவோர், செக்யூரிட்டி சோதனை முடித்து, சரியான வழியை, கண்டுபிடித்து, விமானத்தில் ஏறுவது, மெத்த படித்தவர்களுக்கே சிரமமான காரியம். எனவே, யாரிடமாவது விசாரித்து, அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறிடும்மா...'லண்டனில் இறங்கியவுடன், 'இமிக்ரேஷன்' என்பது ஒரு முக்கியமான சோதனை. எங்களுக்கு கொடுக்கப்பட்ட, அமெரிக்க விசா, 10 ஆண்டுகளுக்கு செல்லும். ஆனால், ஒருமுறை அமெரிக்கா சென்றால், அதிகபட்சம், ஆறு மாதங்கள் அங்கு தங்க முடியும்.மேலும், கூடுதலாக ஆறு மாதங்கள் தேவை என்று நாம் கேட்கலாம். ஆனால், நம் பயணத்தின் நோக்கம், தேவை, இவைகளைப் பொறுத்து தான், நாம் எவ்வளவு நாள் அங்கு தங்கலாம் என்று, அவர்கள் முடிவு செய்வர். அவர்கள் எவ்வளவு நாள் குறித்துக் கொடுக்கின்றனரோ, அவ்வளவு நாள் தான் அங்கு தங்க முடியும். அமெரிக்காவில் இறங்கிய பின் தான், அதை அவர்கள் குறித்து கொடுப்பர்.ஒரு வழியாக எல்லா சம்பிரதாயங்களையும் முடித்து, அமெரிக்கா செல்லும் விமானத்தில் ஏறி பயணித்தோம்.விமான நிலையத்திலிருந்து, முக்கால் மணி நேர பயணத்தில், எங்கள் தங்கும் விடுதி மற்றும் உணவகம் இருந்தது. எங்கள் மகன், மருமகள் மற்றும் உறவினர், எங்களுக்கு, 10 மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து, 'லாட்ஜில்' தங்கியிருந்தனர். ஓட்டலின் தரம் மற்றும் அறை வாடகைகளை இணையத்தில் ஆய்வு செய்து, இந்த இடம் தேர்வு செய்யப்பட்டிருந்தது. வாடகை காரில் எங்கள் இடத்தை அடைந்தபோது, சூடாக சாதம், பருப்பு, நெய் மற்றும் தயிர் இவைகளுடன் வரவேற்றனர், உறவினர்கள்.'இன்டர்நெட்'டில் ஏற்கனவே டிக்கெட் வாங்கி வைத்திருந்த, 'பேட்டர்சன் நியூயார்க்' என்னும் ஒரு பேருந்தில் அனைவரும் ஏறினோம், அரை மணி நேர பயணத்திற்கு பின், நியூயார்க் நகரின், 'மேன் ஹேட்டன்' பகுதியில், 'பிராட்வே' என்னும் பிரபலமான இடத்தில் இறங்கினோம்.பல்லாயிரக்கணக்கில் மக்கள், பரபரவென்று ஓடிக் கொண்டிருந்தனர். இறங்கியவுடன், எங்கள் கண்ணில் பட்ட, அமெரிக்காவின் மிகப் பிரபலமான, 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின், பிரமாண்டமான கட்டடத்தை பார்த்து, வியந்தோம். ஒரு பத்திரிகை அலுவலகம், இவ்வளவு பெரிய இடத்தில் இயங்குவது, எங்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.நம்மில் பலர், அவ்வப்போது கேட்டிருக்கும் வார்த்தை, ஒரு இளைஞியை பார்த்து, ஒரு இளைஞன், அதிகமாக, 'ஜொள்'ளு விட்டால், அவரது நண்பர்கள், 'டேய்... மச்சி... அவன் வாயில பாருடா... நயாகரா நீர் வீழ்ச்சி...' என்று, கிண்டல் செய்வர்.சிலர் பேசினால், வாயிலிருந்து நீர் வீழ்ச்சி போல், சாரல் தெளிக்கும்... அவர்களை பார்த்து, 'டேய்... இவன் வாயிலே, 'நயாகரா வாட்டர் பால்ஸ்' இருக்குடா...' என்போம்.மிக நீளமான முடி உள்ள பெண்ணை பார்த்தால், 'அவள் முடியை பார் - நயாகரா நீர் வீழ்ச்சியை போல் நீண்டு இருக்கிறது...' என்று, சக பெண்மணிகள், தங்கள் இரு காதுகளிலும் புகை வெளி வர, ஆச்சரியத்தை வெளிப்படுத்துவர்.இப்படி நம்மில் பலர், நயாகராவை பார்க்காமலேயே, சர்வ சாதாரணமாக, அந்த வார்த்தையை உபயோகப்படுத்துகிறோம்!அந்த பிரமாண்டத்தை பார்க்கும் வரையில், நான் கூட, 'என்னத்தே நீரு... வீழ்ச்சி...' என்று, 'என்னத்தே கண்ணையா' பாணியில் நினைத்திருந்தேன். நேரில் பார்த்த பின், அது, அப்படி ஒரு உற்சாக மகிழ்வை ஏற்படுத்தும் என்று, நான் எதிர்பார்க்கவே இல்லை.நயாகராவின் தோற்ற அழகை, படிப்பவர்களுக்கு எப்படி உவமைப் படுத்துவது என்று, நான் யோசித்தேன். உடனே, கம்பராமாயணத்தில், ராமனின் அழகை வியக்கும், கம்பனின் இந்த வரிகள் நினைவுக்கு வந்தது.வெய்யோன் ஒளி தன் மேனியின்விரி சோதியின் மறைய,பொய்யே எனும் இடையாளொடும்,இளையானொடும் போனான் -'மையோ, மரகதமோ, மறிகடலோ, மழை முகிலோ,ஐயோ, இவன் வடிவு!' என்பது ஓர்அழியா அழகு உடையான் இதைப்போல் எளிமையாக சொல்லி, விளங்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது... பயப்படாதீர்கள், கவிதை எல்லாம் எழுதி, உங்களை பயமுறுத்தும் எண்ணம் எனக்கு இல்லை.நயாகரா ஆற்றின் மேல் அமைந்துள்ள, நயாகரா நீர் வீழ்ச்சியை, இரு நாடுகள் பங்கு போட்டுக் கொள்கின்றன. அதாவது, அமெரிக்கா - கனடா நாடுகளின் எல்லையில் அமைந்திருக்கிறது, 'ரெயின்போ' என்னும் பாலம். அமெரிக்காவின் நதி, நியூயார்க்கையும், கனடாவின் ஒண்டாரியோவையும் இணைக்கிறது; 950 அடி நீளம் கொண்டது.இரு நாடுகளிலிருந்தும் நயாகராவை அணுகலாம். நாங்கள், அமெரிக்கா பக்கத்திலிருந்து கண்டுகளித்தோம். 155 அடி உயரத்திலிருந்து விழும் அருவியின் வீழ் வேகம், வினாடிக்கு, 80 ஆயிரம் கன சதுர அடி என்று குறிப்பிட்டனர்.'நடுவுலே கொஞ்சம் பக்கத்தை காணோம்' எனும், சினிமா நடிகர், விஜய்சேதுபதி பாணியில், 'ப்... ப்... பா...' என்று, நம் கண்கள் விரிந்து விரிந்து, ஒரு எல்லைக்கு மேல் வாயை விரிக்க முடியாமல் தவித்து போகிறது.நயாகரா வாயிலில் நுழைந்து, சில நுாறு அடிகள் நடந்த உடனேயே, நீர்வீழ்ச்சி நம் கண்ணில் படுகிறது. ஆனால், அது நாம் காண இருக்கும் பிரமாண்டத்தின் ஒரு சிறிய பகுதி தான். அதற்கான அனுமதி சீட்டை வாங்கி, படகில் சவாரி செய்ய ஆரம்பிக்கும்போது தான் புரிய துவங்குகிறது.படகு சவாரி துவங்கும் முன், பல்வேறு அறிவிப்புகளும், சிற் சில வரலாற்று நினைவூட்டல்களும் கொடுக்கின்றனர். அருவியை அருகில் சென்று காண்பதற்கு, இவை நம்மை தயார்படுத்துகின்றன.படகு, சில நிமிடங்கள் நிலை நீரில் செல்கிறது. நீர்வீழ்ச்சியை நெருங்க நெருங்க, நம்முடைய உற்சாகமான, பரபரப்பான, கிளர்ச்சியான, விறுவிறுப்பான, ஆர்வமூட்டும் உத்வேகமுள்ள தருணங்கள் துவங்குகின்றன. அருகில் செல்லச் செல்ல, நீர்வீழ்ச்சியின் சாரல்களின் தாக்கம் வேகம் எடுக்கிறது. கொடுக்கப்பட்ட சாரல் தடுப்பு அங்கியை, நம் கைகள் தானாகவே நமக்கு அணிவிக்கின்றன.பயணம் தொடர தொடர, மெது மெதுவாக, குளிர் நம்மை ஆரத்தழுவிக் கொள்ள, நடுக்கம் எகிற துவங்குகிறது. இன்னும் அருகருகே செல்லச் செல்ல, நீர்வீழ்ச்சியின் தாக்கம், ஒவ்வொரு சதவிகிதமாக ஏற ஆரம்பிக்கிறது. நீர்வீழ்ச்சியை படகு இன்னும் நெருங்க நெருங்க, நம் ஆர்வமும், விறுவிறுப்பும், கிளர்ச்சியும், உத்வேகமும், உற்சாகமும் அதிகரிக்க துவங்குகிறது.வாசக அன்பர்களே... இன்னும் தொடர தொடர, எத்தனையோ ஆச்சரியங்களும், அனுபவங்களும் என்னுள்ளிருந்து பீறிட்டு எழும். ஒவ்வொரு அனுபவத்தையும் விரிவாக எழுத ஆரம்பித்தால், பக்கங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விடும். நீங்கள் நல்ல மூடில் இருக்கும்போதே, உங்களை விடுவித்து விடுவது அல்லது என்னை நான் விடுவித்துக் கொள்வது, என் கடமைகளில் ஒன்றாக கருதி, இந்த பயண கட்டுரையை சுருக்கமாக முடித்து கொள்கிறேன்!என்.தீனதயாளன்