உள்ளூர் செய்திகள்

கையளவு காடை... பையளவு லாபம்...

கையளவு காடைகளை வாங்கி வளர்த்தால் அதன் முட்டைகளின் மூலம் பையளவு வருமானம் கிடைக்கும் என்கிறார், மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகத்தை சேர்ந்த திருநாவுக்கரசு. முறையாக திட்டமிட்டு செயல்படுத்தினால் வெற்றி நிச்சயம், என்று சொல்லும் இவர், முட்டைகளின் மூலம் லாபம் பார்க்கும் வித்தையை கற்றுத் தருகிறார்.ஒரு சதுரடிக்கு 5 காடைகள் வீதம் 200 சதுர அடி இடம் தேவைப்படும். அதில் ஆயிரம் காடை குஞ்சுகளை வளர்க்கலாம். ஒன்றே கால் அடி அகலமும் 16 நீளமும் கொண்ட தகர சீட்டின் இரு முனைகளையும் ஆணி அடித்தால் வட்டமாக வரும். இந்த சிறிய இடத்திற்குள் 250 காடை குஞ்சுகளை வளர்க்கலாம். அதற்கு முன்பாக தென்னை நார் பரப்பி அதன் மேல் காகிதத்தை பரப்ப வேண்டும்.காடை குஞ்சுகளை உள்ளே விட்டு 200 வாட்ஸ் பல்பு மூலம் அவற்றின் வளர்ச்சிக்குஉரிய வெளிச்சம் தரவேண்டும். வெளிச்சம் குறைவாக இருந்தால் குஞ்சுகள் ஒன்றோடொன்று சேர்ந்து கொள்ளும். இதனால் வளர்ச்சி தடைபடும். முதல் முறையாக ஆறவைத்த தண்ணீரில் குளுகோஸ் கலந்து தரவேண்டும். குஞ்சு முதல் தீவனம் கடைகளில் தனியாக கிடைக்கிறது. அதை முதல் இரண்டு நாட்களுக்கு பேப்பரில் துாவி விட வேண்டும். ஒரு வாரத்தில் குஞ்சுகளின் வளர்ச்சி சரியாக இருக்கும். இரண்டு, மூன்றாவது நாளில் 'ஆண்டிபயாடிக்' மருந்தும், பி காம்ப்ளக்ஸ் சொட்டு மருந்தும் தர வேண்டும். ஒரே மாதிரி தண்ணீர் வைக்க வேண்டும். தண்ணீரை மாற்றி மாற்றி கொடுத்தால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும்.ஒரு வாரத்தில் அடுத்த செட்டுக்கு மாற்றி 28 நாட்கள் வளர்த்து விற்பனைக்கு அனுப்பலாம். 30 நாட்களில் ஆண், பெண் காடைகளை தனியாக பிரிக்கலாம். பெண் காடைகளை வைத்து முட்டை உற்பத்தி செய்யலாம். ஆண்டுக்கு சராசரியாக ஒரு காடை 160 முதல் 180 முட்டைகள் இடும். தினமும் மதியம் 3:00 முதல் இரவு 8:00 மணிக்குள் முட்டைகளை சேகரிக்கலாம். ஒரு மாதத்திற்கு ஒரு காடைக்கு 400 கிராம் தீவனம் தேவைப்படும். ஆயிரம் குஞ்சுகளுக்கு தீவனம், மருந்து செலவுக்கு 12 ஆயிரம் ரூபாய் செலவாகும். 200 சதுரடிக்கு 1000 குஞ்சுகள் அமைப்பதற்கான தகரம், மேற்கூரை செட் அமைக்க ஒருமுறை 30 ஆயிரம் ரூபாய் செலவாகும். ஒரு காடையின் உற்பத்தி செலவு 20 ரூபாய். இறைச்சிக்கு விற்பனை செய்யும் போது ஒரு காடைக்கு 28 - 30 ரூபாய் வரை விலை கிடைக்கும். 28 வது நாளில் இருந்து காடையை விற்பனை செய்யலாம்.ஒரு முட்டையின் விலை 3 ரூபாய். தற்போது காடை முட்டைக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றார் திருநாவுக்கரசு. கோழி முட்டை பெரிதாக இருந்தாலும் 11 சதவீதம் புரோட்டின் உள்ளது. அளவில் சிறியதான காடை முட்டையில் புரோட்டின் 13 சதவீதம் உள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் - தியாகராஜர் பொறியியல் கல்லுாரி சாலையில் உள்ள தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலை கழகத்தில் காடை வளர்ப்பு பயிற்சி குறைந்த சேவை கட்டணத்தில் வழங்கப்படுகிறது. தொடர்புக்கு : 95242 73133-எம்.எம்.ஜெயலெட்சுமி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !