பருத்தியை தாக்கும் தத்துப்பூச்சி
பருத்தி செடிகளில் தத்துப்பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளதா என்று பயிரினை நன்கு கண்காணிக்க வேண்டும். தத்துப்பூச்சிகள் இலையில் சாற்றினை உறிஞ்சும். அதனால் இலையில் சுருக்கங்கள், மேடுபள்ளங்கள் காணப்படும். மஞ்சள் நிறம் இலையின் ஓரங்களில் இருந்து பரவும், கருகலும் ஓரங்களில் இருந்து ஆரம்பித்து பரவும், பயிரின் வளர்ச்சி குன்றும், மகசூல் பெரிதும் பாதிக்கப்படும். விவசாயிகள் பயிரிட்டுள்ள பருத்தி தத்துப்பூச்சியினால் பாதிக்கப்பட்டால் ஏக்கருக்கு 200 மில்லி டைமீதோயேட் மருந்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.இமிடாகுளோபிரிட் (வணிக பெயர்: கான்பிடார் சூப்பர்) ஏக்கருக்கு 50 மில்லி தெளித்தும் கட்டுப்படுத்தலாம். கைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். விசைத்தெளிப்பான் என்றால் ஏக்கருக்கு 60 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். சாண்டோவிட், இன்ட்ரான் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு கால் மில்லி வீதம் சேர்த்து கொள்ள வேண்டும். இது மருந்து கரைசல் இலைகளில் நன்கு படிய உதவும். இவ்வாறு இளம் பயிரில் சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்துவ தன் மூலம் செடிகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு அதிக மகசூல் பெறலாம்.- முனைவர் ரா.விமலா, தலைவர் பருத்தி ஆராய்ச்சி நிலையம் ஸ்ரீவில்லிபுத்துார்