அள்ளித்தரும் அயிரை மீன் வளர்ப்பு
நன்னீர் ரகத்தைச் சேர்ந்த அயிரை மீன்களை செயற்கை முறையில் தொட்டிகளில் வளர்த்து லாபம் ஈட்டும் தொழில்நுட்பத்தை கற்றுத் தருகிறது தேனி குள்ளப்புரத்தில் உள்ள வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம்.அயிரை மீன் வளர்ப்பு தொழில்நுட்பம் குறித்து உதவி பேராசிரியர் வேல்முருகன் கூறியதாவது: இம்மையம் 9 மாதங்களுக்கு முன் தமிழக அரசின் நிதியுதவியுடன் வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு இயக்குநரகம் மேற்பார்வையின் கீழ் நிறுவப்பட்டது. தமிழ்நாடு மீன்வளப்பல்கலையின் ஒரு அங்கமாக மையம் செயல்படுகிறது.மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அயிரை மீன் மற்றும் பிற மீன் இனங்களுக்கான விவசாய தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதே இம்மையத்தின் நோக்கம். இங்கு மீன் வளர்ப்பு, மீன் குஞ்சு உற்பத்திக்கான வசதிகளும் மீன் வளர்ப்பு குளங்களின் நீர் தரத்தை பரிசோதனை செய்யும் வசதியும் உள்ளது.தற்போது லோச் எனப்படும் அயிரை மீன் ஆராய்ச்சி மற்றும் மீன் குஞ்சு விநியோகத்தில் கவனம் செலுத்துகிறது. இம்மீன்களுக்கு இந்தியா, இலங்கையில் வரவேற்பு அதிகம். தென் தமிழகத்தில் முக்கியமான நன்னீர் உணவு மீனாக பயன்படுகிறது. சுவையுடன் கல்சியம், இரும்புச்சத்து, பிற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளது.குளம் தயாரித்தல்அயிரை மீன் அனைத்துண்ணி வகையைச் சேர்ந்தது. இயற்கையான நீர் நிலைகளில் மட்கிய உணவு, மிதவை உயிரிகளை உண்டு வாழும். இவற்றை தொட்டிகளில் வளர்ப்பதை விட நிலத்தில் பள்ளம் வெட்டி வளர்ப்பதே சரியான முறையாக இருக்கும். நிலத்தில் குறைந்தது 5 மீட்டர் நீளம் 3 மீட்டர் அகலம் 1.2 மீட்டர் ஆழத்திலும் அதிகபட்சமாக 10 மீட்டர் நீளம் 4 மீட்டர் அகலம் 1.2 மீட்டர் ஆழத்தில் செவ்வக வடிவில் குளம் வெட்ட வேண்டும். மீன் குஞ்சுகளின் சராசரி எடை 0.4 முதல் 0.5 கிராம் அளவில் இருக்கும். ஒரு சதுர மீட்டருக்கு 70 - 72 கிராம் அளவிற்கு மீன் குஞ்சுகளை இருப்பு செய்யலாம். கடலை புண்ணாக்கு, பருத்தி புண்ணாக்கை 60க்கு 40 என்ற விகிதத்தில் தீவனமாக கொடுத்தால் வேகமாக முதிர்ச்சி அடைந்து இயற்கையாக இனப்பெருக்கம் செய்யும். மீன் உடல் எடையில் 10 சதவீதத்துடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை கூடுதல் தீவனம் வழங்க வேண்டும். நொறுங்கிய மூழ்கும் தீவனத்தை மீன்கள் விரும்பி உண்ணும். 3 முதல் 4 மாத காலம் வளர்த்தால் ஒரு சதுரமீட்டரில் 225 கிராம் முதல் 230 கிராம் அளவு மீன்கள் அறுவடை செய்யலாம்.நீர்ப்பரிசோதனை அவசியம்குளத்தில் விடும் தண்ணீரை பரிசோதனை செய்வது அவசியம். நீரின் வெப்பநிலை 27 முதல் 29 டிகிரி செல்சியஸ் ஆகவும் தண்ணீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் அளவு 4 பி.பி.எம்., அளவுக்கு மேல் இருக்க வேண்டும். தண்ணீரின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 8.5 க்குள்ளும் கடினத்தன்மை 165 பி.பி.எம்., அளவு இருக்க வேண்டும். தேனி குள்ளப்புரத்தில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் மாதந்தோறும் ஒருநாள் இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. விவசாயிகள், தொழில்முனைவோர், பெண்கள் பயன்பெறலாம் என்றார். அலைபேசி: 83320 85844.- எம்.எம்.ஜெயலட்சுமி, மதுரை.